வாசிப்பும் யோசிப்பும் 327: வாசித்ததில் பிடித்தது 1 - 'காண் என்றது இயற்கை'யில் கனவு பற்றி எஸ்.ரா.

Friday, 22 February 2019 00:26 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

எஸ்.ராமகிருஷ்ணன்எனக்கு எழுத்தாளர்களின் அபுனைவுகளில் அவர்கள் தம் வாழ்க்கை அனுபவங்களை மையமாக வைத்து எழுதும் சுய அனுபவங்களை வாசிப்பது மிகவும் பிடிக்கும். சமகாலத்தமிழ் இலக்கியத்தில் அவ்விதம் எழுதியவர்களில் முதலிடத்திலிருப்பவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். தன் ஆரம்பகால வாசிப்பு, சென்னை போன்ற பல்வேறு நகரங்களுக்கான பயணங்கள் பற்றிய அனுபவங்களையெல்லாம் விபரித்து அவர் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். மிகவும் சுதந்திரமாக, எவ்விதக் கட்டுப்பாடுகளுமற்றுத் தன் உணர்வுகளை அபுனைவுகளில் அவர் வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் இதுவரை அவர் தன் சொந்த அனுபவங்களை மையமாக வைத்து ஏதாவது நாவல்கள் எழுதியதாகத் தெரியவில்லை. அவ்விதம் அவர் எழுதுவாரானால் அது மகத்தான நாவல்களிலொன்றாக அமையுமென்ற நம்பிக்கை எனக்குண்டு.

புனைவுகளில் கூட இவ்விதம் ஆசிரியர் தன் சொந்த அனுபவங்களை மையமாக வைத்து எழுதும் புனைவுகள் மிகவும் பிடிக்கும். வெகுசனப்படைப்புகளைப்பொறுத்தவரையில் அகிலனின் 'பாவை விளக்கை' இவ்விதம் கூறுவர். நா.பார்த்தசாரதியின் பாத்திரப்படைப்புகளில் சில அவரையே பிரதிபலிப்பதாக நான் எண்ணுவதுண்டு. உதாரணத்துக்கு அவரது 'பொன்விலங்கு' நாவலில் வரும் நாயகனான சத்தியமூர்த்தியைப்பற்றிய அவரது விபரிப்பு அவர் தன்னையே விபரிப்பதைப் போலிருக்கும்.

உயர்ந்த, சிவந்த அவரையே சத்தியமூர்த்தி பாத்திரம் எனக்குப் புலப்படுத்துவதுண்டு. நீல.பத்மநாபனின் 'தேரோடும் வீதி'யையும் இவ்விதமான புனைவுகளிலொன்றாகக் கூறலாமென்று கருதுகின்றேன். ஹெர்மன் மெல்வில்லின் 'மோபி டிக்' அவரது கடற்பயண அனுபவங்களின் வெளிப்பாடு. இவ்விதமாக ராமகிருஷ்ணனும் தன் சொந்த அனுபவங்களை மையமாக வைத்து , விரிவான நாவலொன்றினை எழுதினால் நன்றாகவிருக்குமென்று நினைப்பதுண்டு.
இவ்விதமாகத் தம் சொந்த அனுபவங்களை மையமாக வைத்து, இலக்கியத்தரம் மிக்க கட்டுரைகளை எழுதிய எழுத்தாளராக உடனே நினைவுக்கு வருபவர் அண்மையில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனே. அவரும் தனது வாசிப்பனுபவங்களைப்பற்றி,வாழ்க்கையைப்பற்றி எவ்வித ஒளிவு மறைவின்றிப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை நூல்களாகவும் வெளியாகியுள்ளன.

காண் என்றது இயற்கை

என்னிடம் எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் புனைவுகள் / அபுனைவுகள் பல உள்ளன. அவற்றிலொன்றான அபுனைவான 'காண் என்றது இயற்கை' என்னும் கைக்கடக்கமான, உயிர்மை பதிப்பக வெளியீடாக வெளிவந்த நூலிலொரு கட்டுரை 'கனவில் நுழைவது..'. அதில் கனவு பற்றி வரும் சில பகுதிகள் சுவையானவை என்பதுடன் சிந்திக்கவும், சிந்தையில் வாசிக்கையில் இன்பத்தையும் தருவன. அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். வாசித்துப்பாருங்கள் அவை உங்களையும் கவரும். அத்துடன்
எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் எழுத்து நடையின் சிறப்பினையும் உணர்ந்துகொள்வீர்கள்:

கவிஞர் தேவதச்சன்

"இரண்டு வாரத்தின் முன்பு கோவில்பட்டிக்குச் சென்றிருந்தேன். கவிஞர் தேவதச்சனைச் சந்தித்து நாள் முழுவதும் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன ஒருவிஷயம் மனதில் திரும்பத் திரும்ப வந்துகொண்டேயிருந்தது. தேவதச்சனின் நண்பர்ஒருவர் அவரிடம் , 'நீங்கள் நேற்று என் கனவில் வந்தீர்கள்; என்று சொல்லியிருக்கிறார். அது தேவதச்சனுக்குக் கூச்சத்தை உருவாக்கியிருக்கிறது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிரித்துவிட்டு வெற்றிலை போடத்தொடங்கி விட்டார். வீட்டிற்கு வந்த பிறகு தனக்குத் தெரியாமல் எப்படி அடுத்தவன் கனவிற்குள் சென்றேன். என் அனுமதியில்லாமல் அவன் எப்படி என்னைக் கனவில் காண்கின்றான் என்று குழப்பமாக இருந்தது என்றார். அதைப்பற்றி இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டேயிருந்தோம்.

எனக்கும் அது சரிதானே என்று தோன்றியது. எவரது கனவிலோ நாம் நுழைகிறோம் அல்லது யாரோ நம்மைக் கனவில் சந்திக்கிறார்கள். அது நமக்குத் தெரிவதேயில்லை என்பது எவ்வளவு பெரிய புதிர். அது ஏன் எளிமையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஆலிஸின் அற்புத உலகம் நாவலில் அவள் நாம் யார் கனவிலோ நடமாடிக்கொண்டிருக்கும் உருவம். அவர் விழித்துக்கொண்டால் நாம் கலைந்து போய்விடுவோம் என்கிறாள். அது உண்மைதானா?"

அக்கட்டுரையில் இன்னுமொரு பந்தி வருமாறு. வாசிக்கையில் சிறிது புன்னகையையும் தந்த பகுதி. பின்னே? நம்ம 'வாத்தியாரை'ப்பற்றிய பகுதியல்லவா அது?

 "பள்ளிவயதில் எம்.ஜி.ஆர் தன் கனவில் வந்து தனக்குக் கத்திச்சண்டை போட கற்றுத் தந்ததாக எம்.முருகேசன் சொன்னதை ஒருவரும் நம்பவில்லை. ஆனால் நான் நம்பினேன். எம்.ஜி.ஆர் என் கனவில் அப்படி வந்திருக்கிறார் என்பதால். அவன்என்னிடம் "நல்ல நேரம்" படத்தில் வருவது போன்ற தலைமுடியும் டிரஸ்சும் அணிந்து வந்திருந்தார் என்று சொன்னான்

"பள்ளிவயதில் எம்.ஜி.ஆர் தன் கனவில் வந்து தனக்குக் கத்திச்சண்டை போட கற்றுத் தந்ததாக எம்.முருகேசன் சொன்னதை ஒருவரும் நம்பவில்லை. ஆனால் நான் நம்பினேன். எம்.ஜி.ஆர் என் கனவில் அப்படி வந்திருக்கிறார் என்பதால். அவன்என்னிடம் "நல்ல நேரம்" படத்தில் வருவது போன்ற தலைமுடியும் டிரஸ்சும் அணிந்து வந்திருந்தார் என்று சொன்னான். அதை நான் சந்தேகம் கொள்ளவேயில்லை. அது சாத்தியம்தானே. எம்.ஜி.ஆரோடு என்ன பேசினேன் என்பது மறந்து போய் விட்டது என்றான்." :-)
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Friday, 22 February 2019 19:27