சுர்ஜித்

- மணப்பாறைக்கு (திருச்சி) அண்மையிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழாய்க்கிணற்றினுள் தவறி விழுந்த இரன்டு வயதுக்குழந்தை சுர்ஜித்தைக் காப்பாற்றுவதற்கான மீட்பதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இறந்த நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. -


மகத்தான பூமியே!! இம்
மண்ணுக்குள் அகப்பட்ட இம்
மழலையை உன்னால்
மீட்டிட முடியவில்லையே!
ஏங்கி, ஏங்கி அப்பிஞ்சு
எவ்வளவு துடித்திருக்கும்?
எப்படியும் தன்னை மீட்பார்களென்று
எண்ணி எதிர்பார்த்திருக்கும்?
உணவின்றி, உறக்கமின்றி
உடல் நொந்து வருந்தியிருக்கும்.
ஏன்? ஏன்? ஏன்?
எதற்காக? எதற்காக? எதற்காக?
இம்மானுடப் பிறப்பு இம்
மண்ணில் எதற்காக?
மலர்ந்து பின் மடியுமிம்
மானுடப் பிறப்பு இம்,
மண்ணில் எதற்காக?
இன்பமொன்றே நியதியாக
இருக்கும் வண்ணம்
இம்மண்ணில் வாழ்வு இல்லையே?
துயர் சூழ்ந்த நிகழ்வுகள்:
துடிக்க வைக்கும் போர்கள்,
இவை போதாதென்று
இவ்விதமான அழிவுகள்
இன்னுமேன் எதற்காக?
தவழ்ந்து நிமிர்ந்த குழந்தை
தடக்கித் துளையினுள் வீழ்ந்து
துடித்து மடிந்ததும் எதற்காக?

ஐந்து நாட்களுடல் உடல் நொந் தழுகி
நெஞ்சு துடிக்க வைத்துச் சென்றாய்.
கொஞ்சமற்ற பிரிவினைகள் மிகு மண்ணிலனைவர்
நெஞ்சங்களுமுனக்காய்த் துடித்தனவே.
சுர்ஜித்! உன் முடிவில் அனைவர்தம்
அர்ப்பணிப்பில் அவரை இணைத்தாய்.
உன் முடிவும் பல பாடங்களை
உலகுக்குத் தந்து முடிந்தது.
உனக்காக உருகிய மானுடரில்
உள்ள நற்பண்புதனை
வெளிப்படுத்தி முடிந்தது.
உன்னையினி உள்ளத்தே நினைக்குந்தோறும்
உன் இருப்பிற்கான இறுதிப் போராட்டமும்,
உனைப்பெற்றவர்,  சுற்றத்தவர் மற்றும்
உலகத்தவர் உகுத்த கண்ணீரும் நினைவுக்கு வரும்.
கூடவே அத்துயரினூடு உனக்காக  
கூடி நின்று உனைக்காப்பதற்காய்
இரவு, பகல் பிரார்த்தித்து
இயங்கிய மனிதத்துவமும்
இனி நினைவுக்கு வரும்.
இவர் இங்கு இதுபோல்
இனியும் மனித்ததுவத்தால்
இணைந்திருத்தலே
இவர் உன் இழப்புக்காய்
இங்கு செய்ய வேண்டியது.
இம்மண்ணினுள் புதைந்த உனக்கு
இம்மண்ணில் செய்ய வேண்டிய பணியிது.
இழப்பினூடும் நீ
இங்கொரு வழி காட்டிச் சென்றாய்..
இனி என்றும் நீ
இருப்பாய்  எம்
இதயங்களில் நிலைத்து.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.