நடிகர் ரஜனிகாந்தின் உரை பற்றிய கருத்துகள் சில..

Friday, 13 March 2020 09:27 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

ரஜனிரஜனிகாந்தின் முதல்வர் பதவி தனக்கு வேண்டாம் என்ற பேச்சினைக் கேட்டேன். முதலில் கேட்கையில் அவர் கூறுவது நல்லது என்பதுபோல் தோன்றினாலும், சிறிது சிந்திக்கையில் அரசியலில் இறங்கும் துணிவு அவரிடமில்லை என்ற முடிவே ஏற்படுகின்றது. இளைஞர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறுகின்றார். இருக்கும் பலமான கட்சிகளை எதிர்த்துப் போராடுவது அவ்வளவு எளிமையானது அல்ல என்று அஞ்சுகின்றார். தேர்தலில் இறங்கினால் வெற்றி நிச்சயம் என்றால்தான் அவர் வருவார் என்று கூறுகின்றார். அண்ணா சிறந்த தலைவர் என்று கூறுகின்றார். அண்ணா பல தலைவர்களை உருவாக்கினார் என்று கூறுகின்றார்.

அறிஞர் அண்ணா அரசியலில் நுழைந்தபோது அவர் தன் இருபதுகளில் இருந்தார். அவர் பெரியாருடன் முரண்பட்டு பிரிந்து திமுகவை உருவாக்கியபோது அவரது வயது 41. சுமார் நாற்பது வருடங்கள் கழிந்த பின்னர்தான் அவர் ஆட்சியையே பிடிக்கின்றார். எம்ஜிஆர் அரசியலில் தன் வயது முப்பதுகளில் இருந்தபோது ஈடுபட்டார். தான் நம்பிய அரசியல் கருத்துகளைத் தன் திரைப்படங்களில் , உரைகளில் வெளிப்படுத்தினார். பின்னர் திமுக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவர் திமுகவின் பலத்தை எண்ணி அஞ்சவில்லை. துணிந்து கட்சியைத் தொடங்கினார்.தன் இரசிகர்களை, தொண்டர்களை மட்டுமே நம்பினார். அவர் ஆட்சியைப்பிடித்தபோது அவருக்கு வயது அறுபது. ஜெயலலிதா அரசியலில் தீவிரமாக நுழைந்தபோது அவரது வயது முப்பதுகளில் இருந்தது. தொடர்ந்து வாழ்க்கையை நாட்டு அரசியலுக்கே அர்ப்பணித்தார். கலைஞர் தன் இளமைப்பருவத்தில் அரசியலில் ஈடுபட்டார். பல்லாண்டுகள் அரசியலில் தன்னைப்பிணைத்துக்கொண்டவர் அவர்.  தன் எழுத்தால், தன் பேச்சால் தான் நம்பிய கொள்கைகளுக்காகச் செயலாற்றினார்.

ரஜனி இவ்வுரையில் வாய்க்கு வாய் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். வரவேண்டும் என்று முழங்குகின்றார். ஆனால் இதுவரையான உலக அரசியலை நோக்கினால் அரசியல் தலைவர்கள் பலரும் தாம் இளைஞர்களாகவிருந்தபோதுதாம் அரசியலில் நுழைந்தார்கள். தொடர்ந்தும் தம் வாழ்க்கையை அதற்காகவே அர்ப்பணித்தார்கள். அவர்களது சேவையும் , அர்ப்பணிப்புமே அவர்களை அவர்களது முதுமையிலும் ஆட்சியில் தக்க வைத்தன. அவ்விதம் அவர்கள் இருந்தபோதும் அவர்கள் கட்சிகளில் இளைஞர்களாக நுழைந்தவர்கள்தாம் பின்னர் பண்பட்ட தலைவர்களாக வளர்ந்தார்கள். ஆனால் ரஜனியின் வயது 71. இளைமைக் காலம் முழுவதும் எவ்வித அரசியலில் நடவடிக்கைகளிலும் ஈடுபடாத ஒருவர். ஏனைய தலைவர்கள் போல் இதுவரையில் தான் நம்பிய கொள்கைகளுக்காகக் கட்சியையோ அமைப்பையோ தொடங்கி மக்களை, தொண்டர்களை, இளைஞர்களை அணி திரட்டி இயக்கமொன்றினை அமைக்காத , எழுச்சியை ஏற்படாத ஒருவர், தன் எழுபத்தொன்றாவது வயதில் கூட கட்சியை அமைக்கத்தயாரில்லை; எழுச்சியை ஏற்படுத்தத் தயாரில்லை; இன்னும் தன் இரசிகர்கள் நாடு முழுவதும் சென்று மக்களை எழுச்சி கொள்ள வைக்க வேண்டும். அதன் பின் தான் வருவேன் என்கின்றார். இவர் எழுச்சியை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதனைச் செய்திருக்க வேண்டியவர் இவரே. குறைந்தது 2017இல் இருந்தாவது அரசியலுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, கட்சியை உருவாக்கி, கிராமம் கிராமமாகச் சென்று மக்களை எழுச்சி கொள்ள வைத்திருக்க வேண்டும். இவர் அவை எவற்றையும் செய்யவில்லை. தனது 'சுப்பர்' ஸ்டார் பிம்பத்தைக்காப்பதற்காக, பணம் சம்பாதிப்பதற்காக நடித்துக்கொண்டிருந்தார்.

இவரது பேச்சு ஒன்றினை மட்டும் தெரிய வைக்கின்றது. தமிழக அரசியலில் ஒருபோதுமே இவர் முழுமையாக ஈடுபடப்போவதில்லை. ஏனென்றால் இவர் எண்ணுவதுபோது எவற்றையும் செய்யாமல், மக்கள் ஆட்சியைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து இவர் கைகளில் கொண்டு வந்த கொடுக்கப் போவதில்லை.

முரண்நகை என்னவென்றால்.. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். வரவேண்டும் என்று முழங்குகின்றார் ரஜனி. ஆனால் இதுவரையில் தமிழகத்தை ஆட்சி செய்த அரசியல் தலைவர்கள் எல்லாரும் தம் இளமைப்பருவத்தில் அரசியலில் குதித்தவர்கள்தாம். ஆனால் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று முழங்கும் ரஜனிதான் தன் முதுமையிலும் அரசியலுக்கு வரத் தயங்குகின்றார் என்பதுதான்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 13 March 2020 14:26