தேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்!

Friday, 29 May 2020 14:01 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

அறுபதுகளில், எழுபதுகளில் & எண்பதுகளில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களுக்கு ஓவியர் மணியமென்றால் நன்கு தெரிந்த ஒருவர். தமிழகத்து ஓவியர் மணியம் அல்லர் இவர். இவர் யாழ்ப்பாணத்து ஓவியர் மணியம். அக்காலகட்டத்தில் யாழ் திரையுரங்குகளில் உச்ச நட்சத்திரங்களின் (எம்ஜிஆர் & சிவாஜி) திரைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம் ஒன்று மட்டும் நிச்சயம். அது அநேகமாக அத்திரைப்படத்துக்கு ஓவியர் மணியம் ஒரு பிரும்மாண்டமான கட் அவுட் வரைந்திருப்பார் என்பதுதான். இவரைப்பற்றி நினைத்தாலே காவல்காரன், அடிமைப்பெண், நீதி, ராஜா, பாபு, நீரும் நெருப்பும், அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன் , நாளை நமதே திரைப்படங்களுக்கு இவர் வரைந்த கட் அவுட்டுகள் நினைவில் வந்து போகும், இவரைப்பற்றியும் இவரது கட் அவுட்டுகள் பற்றியும் அவ்வப்போது முகநூற் பதிவுகள் இட்டிருக்கின்றேன். ஆனால் ஓவியர் மணியம் பற்றிய அதிக தகவல்களைப்பெற முடியாதிருந்தது.

இந்நிலையில் நூலகம் எண்ணிம நூலகத்தில் பழைய சஞ்சிகைகள் மேய்ந்து கொண்டிருந்தபோது யாழ்ப்பாணத்திலிருந்து எழுபதுகளில் எழுத்தாளர் சி.மகேஸ்வரனை ஆசிரியராகக்கொண்டு வெளியான 'இதயம்' சஞ்சிகைகளின் சில பிரதிகள் வாசிக்கக்கிடைத்தன. காத்திரமான விடயங்களைத்தாங்கி வெளிவந்த கலை, இலக்கிய மாத இதழ் 'இதயம்'. சி.மகேஸ்வரனே எழுத்தாளர் இந்து மகேஸ் என்று இப்பதிவுக்கான தனது எதிர்வினையொன்றில் எழுத்தாளர் வி.ரி.இளங்கோவன் அறியத்தந்திருந்தார். இன்றுதான் எழுத்தாளர் இந்து மகேஸ்தான் இதயம் சஞ்சிகை ஆசிரியர் என்னும் விடயத்தை முதன் முறையாக அறிந்துகொண்டேன். தகவலுக்கு நன்றி இளங்கோவன் அவர்களே.

அதில் 'எங்கள் கலைஞர்' என்னும் பகுதியில் ஒவ்வொரு கலை, இலக்கியவாதியை அறிமுகப்படுத்துவார்கள். இதயம் சஞ்சிகையின் அக்டோபர் 1971 இதழில் எங்கள் கலைஞர் பகுதியில் அறிமுகப்படுத்திய இளங்கலைஞரின் பெயரைப்பார்த்ததும் உள்ளமுற்சாகத்தால் துள்ளிக்குதித்தது. அக்கலைஞர் வேறு யாருமல்லர் ஓவியர் மணியம்தான். ஒருகணம் என் பால்ய, பதின்மப்பருவங்களில் நான் பார்த்துக்களித்த கட் அவுட்டுகளின் நினைவுகள் நெஞ்சில் வந்து சென்றன.

இப்பகுதியில் அவருடனான சிறியதொரு நேர்காணல் இடம் பெற்றிருந்தது. அதிலிருந்து அவரைப்பற்றிய மேலதிகத் தகவல்கள் சில கிடைத்தன. அவர் இரண்டாம் உலகயுத்தக் காலகட்டத்தில் சுண்டிக்குளியிலிருந்த மகேந்திரா திரையரங்கில் வேலைக்குச் சேர்ந்திருக்கின்றார். அங்கு இவரிடம் திரைப்பட விளம்பரங்கள் பகுதி விடப்பட்டிருக்கின்றது. சுயமாகத் தன் திறமையினால் கற்றுக்கொண்ட ஓவியத் திறமையினைப்பாவித்து அன்றிலிருந்து திரைப்படங்களுக்கான விளம்பரங்களை வரைவதை இவர் தொழிலாகத் தொடங்கியிருக்கின்றார். நவீன ஓவியம் இவரைக்கவரவில்லையென்பதையும் நேர்காணல் புலப்படுத்துகின்றது. அதே சமயம் ஓவியத்துறையில் ஈடுபடுபவர்கள் ஒரு குருவின் கீழ் அதனைக்கற்க வேண்டுமென்றும் வலியிறுத்தும் இவருக்குத் தனக்கு அச்சந்தர்ப்பம் வாய்க்கவில்லையே என்பதில் கவலையுண்டு. அதே சமயம் ஓவியக் கண்காட்சிகளை நடத்த வேண்டும், ஓவியக் கல்லூரியை நிறுவ வேண்டும், இவற்றின் மூலம் ஓவியக் கலைஞர்களை உருவாக்க வேண்டும் என்னும் ஆசை மிக்கவராகவும், அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் நேர்காணலில் குறிப்பிடுகின்றார். அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார் என்பது தெரியவில்லை. கட் அவுட்டுகள் தவிர வேறு வகையான ஓவியங்களை வரைவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அவ்வோவியங்களைப்பற்றிய விபரங்களைக் குறிப்பிடவில்லை. தான் வரைந்த கட் அவுட்டுகளில் தனக்கு மிகவும் பிடித்த கட் அவுட் அடிமைப்பெண் எம்ஜிஆருக்காக வரைந்த 54 அடி உயரமான கட் அவுட் என்கின்றார். யாழ் ராணி திரையரங்கின் முன் காட்சியளித்த அடிமைப்பெண் எம்ஜிஆர் கட் அவுட் நினைவுக்கு வருகின்றது.

நல்லூர்ப்பகுதியைச் சேர்ந்த இவரின் முழுப்பெயர் சுப்பிரமணியம். இவரைப்பற்றி மேலும் அறிய வேண்டுமென்ற ஆவலைத் தூண்டிய நேர்காணல் இந்நேர்காணல். அப்பக்கங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

கட்டுரை வெளியான 'இதயம்'சஞ்சிகைக்கான இணைப்பு: http://noolaham.net/project/27/2642/2642.pdfஅடிமைப்பெண் எம்ஜிஆர் 'கட் அவுட்'..

ஓவியர் மணியம் என்றால் உடனே ஞாபகத்துக்கு வரும் அவரது கட் அவுட்டுகளில் முதலில் வருவது அடிமைப்பெண் படத்துக்காக எம்ஜிஆருக்கு அவர் வரைந்த கட் அவுட் . என்னுடைய ஓவியர் மணியம் பற்றிய பதிவுக்குக் பதில்வினையாற்றிய பூபாலசிங்கம் பதிப்பக/புத்தகசாலை உரிமையாளர் பூபாலசிங்கம் ஶ்ரீதர்சிங் அவர்கள் அடிமைப்பெண் கட் அவுட்டைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அவருக்கு என் நன்றி.

ஓவியர் மணியம் தான் வரைந்த கட் அவுட்டுகளில் தனக்கு மிகவும் பிடித்த கட் அவுட் என்று இதனையே குறிப்பிட்டுள்ளார். இதன் உயரம் 54 அடி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனைப்பார்க்கும்போது யாழ் ராணி திரையரங்குக்கு முன்னால் வவுனியாவிலிருந்து பஸ்ஸில் வந்திறங்கிய நாளில், முன்னால் காட்சியளித்துக்கொண்டிருந்த எம்ஜிஆரின் இந்தக் கட் அவுட்டைப் பிரமிப்புடன் பார்த்த பால்ய கால நினைவுகள் எழுகின்றன.

இன்று காலத்தின் கோலத்தினால் ராணி திரையங்கு எம் நினைவுகளில் மட்டும் நிலைத்து நிற்குமொரு திரையரங்கு. அவ்வகையிலும் ஆவணப்படுத்தப்பட வேண்டிய புகைப்படங்களிலொன்று. இப்புகைப்படம் யாழ் நகரத்தின் திரையரங்கொன்றைப்பற்றி அறிவிக்கின்றது. அந்நாளைய உச்சநட்சத்திரங்களை அவர்கள்தம் இரசிகர்கள் எவ்விதம் கொண்டாடினார்கள் என்பதையும் தெரிவிக்கின்றது. குறிப்பிட்ட காலத்து யாழ் நகரக்காட்சியொன்றினையும் பிரதிபலிக்கின்றது

 

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 29 May 2020 14:17