யாழ் பொதுசன நூலக நினைவுகள்....

Sunday, 31 May 2020 23:15 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

சிந்திக்கும் பையன்மே 31, 1981. யாழ் பொது சன நூலகம் எரிக்கப்பட்ட நாள். யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். நாகரிகத்தின் உச்சியிலிருப்பதாகக் கூறிப் பெருமிதமுறும் மனித இனமே நாணித்தலை குனிய வேண்டிய தினம். நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதிகளெல்லாம் நெருப்போடு நெருப்பாக அழிந்தே போய்விட்டன. இவற்றின் அழிவினைத் தாங்க மாட்டாத பாதிரியார் ஒருவரும் (தாவீது அடிகள்) மாரடைப்பால் இறந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

பொதுவாக அவ்வப்போது யாழ் பொதுசன நூலகம் பற்றிய நினைவுகள் தோன்றுவதுண்டு. இந்த நூலகத்துடனான எனது உறவு பின்னிப்பிணைந்ததொன்று. என் மாணவப்பருவத்துத் தோழர்களில் முக்கியமான தோழனாக விளங்கிய நூலகம். பன்முகப்பட்ட அறிவினை அள்ளி வழங்கிய சிறந்த நண்பன். எவ்வித எதிர்பார்ப்புகளுமற்று அதனை வாரி வழங்கிய நண்பன். யாழ் பொது நூலகத்தை எண்ணியதும் எப்பொழுது முதன் முதல் அதனுடனான எனது தொடர்பு ஏற்பட்டது என்று எண்ணிப்பார்க்கின்றேன்.

என் பால்யகாலத்தில் நான் என் ஆரம்பக் கல்வியை வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அதன் பின்னர் எட்டாம் வகுப்பிலிருந்து கல்விப்பொதுத்தராதர உயர்தர வகுப்பு வரை யாழ் இந்துக்கல்லூரியில் தொடர்ந்தது. வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் பாடசாலை விடுமுறையின்போது என் அம்மாவின் சகோதரியொருவரின் பிள்ளைகள் வவுனியா வருவார்கள். அல்லது நாம் யாழ்ப்பாணத்துக்கு ஆச்சி வீடு செல்வோம். அவ்விதம் செல்கையில் அக்கா முறையிலான என்று ஒன்று விட்ட சகோதரியொருவர் , என்னைவிட சுமார் ஏழு வயது மூத்தவர், யாழ் நூலகத்துக்கு செல்கையில் என்னைத் துணைக்கழைத்துச் செல்வார். காற்சட்டையும் , சட்டையுமாக நானும் அவருடன் செல்வேன். அக்காலகட்டத்தில் நான் பொதுவாக நடக்கும்போது மிகவும் விரைவாக நடந்து செல்வேன். என்னைத் துணைக்கழைத்துச் செல்லும் அக்காவுக்கோ என் நடை வேகத்துடன் ஈடு கட்டி நடப்பதற்குச் சிரமமாயிருக்கும். இருந்தாலும் அவரும் இயலுமானவரையில் ஈடு செய்தபடி என்னுடன் நடந்து வருவார். ஆயினும் அவ்விதம் நடந்து வருகையில் 'ஏய் என்னடா இந்த நடை நடக்கிறே. மெதுவாப் போடா. மூச்சு வாங்குது 'என்னும் அர்த்தப்பட வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டுதான் கூட நடந்து வருவார். அவருடன் யாழ் நூலகத்துச் சென்றதுதான் முதற் தடவை.

எரிந்த நிலையில் யாழ் பொதுசன நூலகம்

இந்த யாழ் பொதுசன நூலகம் என்னைப் பொறுத்தவரையில் என் வாழ்க்கையில் ஓர் அங்கமே என்று கூறிக்கொள்ளும் வகையில் ஆகிவிட்டிருந்தது. ஒவ்வொரு வாரமும் பல தடவைகள் அங்கு செல்வதுண்டு. என்னைப் பொறுத்தவரையில் நான் வணங்கும் ஆலயங்கள் என்றால் அவை நூலகங்களே. அதிலும் இந்த யாழ் நூலகத்துக்குத் தனி முக்கியத்துவமுண்டு. சிறுவர் நூல்கள், அறிவியல் நூல்கள், வெகுசன நாவல்கள், கவிதைகள், நாடகங்கள், இலக்கிய நூல்கள் ... என எத்தனை வகையான நூல்கள். நான் ஒன்பதாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது இந்த நூலகத்தில் எத்தனையோ அறிவியல் நூல்களைப் படித்திருக்கின்றேன். மிகவும் அழகாக விஞ்ஞானத்தின் பல்வேறு பிரிவுகளிலும் நூல்களை அக்காலகட்டத்தில் சென்னையிலுள்ள பதிப்பகமொன்று வெளியிட்டுக்கொண்டிருந்தது. 'பெளதிகத்தின் வரலாறு', 'கடலின் வரலாறு', 'உயிரினங்களின் வரலாறு',.. என்பது போன்ற தலைப்புகளிருக்கும்.

'பெளதிகத்தின் வரலாறு' என்னுமந்த நூலில் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற சக்திக்கும், பொருளுக்குமிடையிலான தொடர்பினை வெளிப்படுத்தும் சூத்திரத்தை, ஒளித்துகளுக்கு உந்தம் மற்றும் இயக்கச்சக்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய சூத்திரங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நிறுவியிருந்தது இன்னும் பசுமையாக மனதிலுள்ளது. 'நீங்களும் விஞ்ஞானியாகலாம்' என்றொரு நூல் மிகவும் அழகான சித்திரங்களுடன் வெளியாகியிருந்தது. அக்காலகட்டத்தில் மிகவும் பிடித்த புத்தகங்களில் அதுவுமொன்று. அதில் உருப்பெருக்கும் கண்ணாடியுடன் சிறுவர்கள் வீட்டின் பின்புறத்தே ஆய்வில் ஈடுபட்டிருக்கும் காட்சியினைச் சித்திரிக்கும் வகையில் சித்திரங்களிருந்தன. மாணவர்களுக்கு விளங்கும் வகையில் விஞ்ஞானப் பரிசோதனைகள் பல அந்நூலில் விபரிக்கப்பட்டிருந்தன. அவை எங்கள் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. மேற்படி விஞ்ஞான நூல்களில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் பிரசுரமான அறிவியல் நூல்களின் தரமான மொழிபெயர்ப்புகளே.

தமிழ் இலக்கியத்தின் புகழ்பெற்ற வெகுசன நூல்கள் பல அந்த நூலகத்திலிருந்தன. கல்கியின் பொன்னியில் செல்வன் , அலையோசை தொடக்கம் சாண்டில்யனின் கடல்புறா போன்ற நூல்கள் வரை அந்நூலகத்திலிருந்தன. இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாடமி வெளியிட்ட நூல்கள் பலவற்றின் மொழிபெயர்ப்புகள் அங்கிருந்தன. சிவராம் காரந்தின் புகழ்பெற்ற நாவலான 'மண்ணும் மனிதரும்' நாவலை முதன் முதலில் அங்குதான் வாசித்தேன். பேர்ல் பக்கின் 'நல்ல நிலம்' நாவலினையும் அங்குதான் முதலில் படித்தேன்.

யாழ்ப்பாண நூலகம் என்றதும் எனக்கு நினைவில் வரும் இன்னுமொரு முக்கியமான விடயம். அது அமைந்துள்ள சூழல். பண்ணைக்கடல், திறந்த வெளிகளை உள்ளடக்கிய யாழ் முற்ற வெளி, திறந்த வெளியரங்கு, சுப்பிரமணியப்பூங்கா, சரித்திரம் கூறி நிற்கும் யாழ் டச்சுக் கோட்டை, முனியப்பர் கோயில்.. இவற்றுக்கு மத்தியில் வீணையும் கையுமாக வரவேற்கும் சரஸ்வதி தேவியின் சிலையுடன் அமைந்த யாழ்பொது நூலகம் அமைந்திருந்தது. காற்று எப்பொழுதும் சிலுசிலுவென்று வீசிக்கொண்டிருக்கும். யாழ் நூலகத்தை நெருங்கையிலேயே ஒருவித அமைதியை, இனிமையை உணரத்தொடங்கிவிடுவோம். நூலகத்தைச் சுற்றியுள்ள அமைதி கலந்த சூழலே அங்கு செல்லுமொருவருக்கு அங்கு சென்று வாசிப்பதற்குரிய உணர்வினை ஏற்படுத்தி விடும். யாழ் நூலகத்தில் வாசிப்பது மட்டுமல்ல அதனை நோக்கிச் செல்வது கூட இன்பமானதோர் உணர்வுதான்; அனுபவம்தான். அபிவிருத்தி என்னும் போர்வையில் அப்பகுதிச் சூழலைச் சிதைத்து விடாமல் , நகர அமைப்பாளர்கள் எதிர்காலத்திலும் யாழ் நகர அபிவிருத்தித்திட்டங்களை வடிவமைப்பது மிகவும் அவசியம்.

நூலகத்தின் வடிவமைப்பும் கூட எளிமையானது ஆனால் அதே சமயம் நூலகமொன்றுக்குரிய சூழலை ஏற்படுத்தித்தரும் வகையில் அமைந்துள்ளதொன்று. உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் நூல் இரவல் பெறும் பகுதி, வலது பக்கம் பத்திரிகை, சஞ்சிகைகள் வாசிப்பதற்குரிய கூடம். யாழ் பொதுசன நூலகம் மட்டுமல்ல அது பற்றிய நினைவுகளும் பசுமையானவை; இனிமையானவை.


மேற்படி பதிவினை முகநூலிலும் பதிவு செய்திருந்தேன். அதற்கு வந்திருந்த கருத்துகள் சில...

Poobalasingham Sritharasingh:  இந்த காலகட்டத்தில் எமது நிறுவனமான பூபாலசிங்கம் புத்தகசாலையும் அக்கினிக்கு சங்கம்மானது குறிப்பிடத்தக்கதாகும்

Giritharan Navaratnam: அன்றுதான் ஈழநாடு பத்திரிகையும் எரிக்கப்பட்டது. கே.ஜீ.மகாதேவாவும் அது பற்றித் தனது 'நினைவலைகள்' நூலில் நினைவு கூர்ந்திருந்தார். 77 கலவரத்தில் யாழ் பஸ் நிலையத்தில் கடைகள் எரிக்கப்பட்டபோது உங்கள் கடை எரிக்கப்பட்டதாக நினைவு. அப்பொழுது கே.கே.எஸ் வீதியிலும் , சிவன் கோயிலுக்கு அண்மையில் பூபாலசிங்கம் என்னும் பெயரில் கடையொன்று இருந்ததாக நினைவு. அங்குதான் முதலில் உங்கள் கடை இருந்ததா? அல்லது அது வேறு கடையா? அங்கு அல்லது அதற்கண்மையிலும் ஓரிளைஞர் 77 கலவரக் காலகட்டத்தில் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக நினைவு.

Siva Palan: பூபாலசிங்கம் புத்தக கடை முதலில் யாழ் பேருந்து நிலையத்தில் பின்னர் யாழ் வேம்படி மகளிர் கல்லூரி சந்தியில் இயங்கி வந்தது.

Giritharan Navaratnam : நன்றி சிவபாலன் தகவலுக்கு. கே.கே.எஸ். வீதியில் அப்பெயரில் ஒரு கடை இருந்த ஞாபகம். அது வேறு பலசரக்குக் கடையாக இருக்க வேண்டும்.

Pe Su Mani: Inspiring naration

Gv Venkatesan: அருமையான நினைவுப் பதிவு...

Linges Lingeswaran: நாமிருவரும் ஆச்சி வீட்டிலிருந்து பல தடவைகள் யாழ்.நூலகம் சென்று பத்திரிகை, நூல்கள் என வாசித்துவிட்டு திரும்பி வரும் வழியில் மலாயன் கபேக்கும் சென்று விருப்பமான கடலை வடையும் சாப்பிட்டு,தேநீரும் அருந்திவிட்டு, ஈழநாடு காரியாலயத்திற்கும் சென்றுவந்த ஞாபகங்கள் இன்னும் என் மனத்திரையில் காட்சிப் படிமங்களாக ஓடிக்கொண்டேயிருக்கின்றன கிரி. உண்மைதான்.நூலகத்தைச்சுற்றி வீசிக்கொண்டிருக்கும் குளிர்மையான தென்றலின் வரவேற்பில் நாம் கிறங்கிப்போன தருணங்களும், நூலகத்துள் பாதங்கள் படும்போதெல்லாம் மெய்சிலிர்க்குமே.. இவையாவுமே இன்னும் என் உயிருக்குள் ஊசலாடிக்கொண்டேயிருக்கின்றன. அங்கே இப்போது அந்தத்தாயை எரித்த சாம்பல்தான் இன்னும் பூத்துக்கொண்டிருக்கின்றது. உயிரோடு எரித்த உடலுக்கு ஊசிபோட்டு கண்ணாடிப்பெட்டிக்குள் கிடத்திவைத்திருக்கின்றார்கள் கொளுத்தியவர்கள். அப்படித்தான் எங்கள் கல்வித்தாய் என் கண்களுக்குத்தெரிகின்றாள்.

Giritharan Navaratnam: மறக்க முடியாத நினைவுகள் அவை லிங்கேஸ். அப்பகுதியை உல்லாசப்பயணிகள் , யாழ்நகரத்து மக்கள் சென்று பொழுதைக்கழிக்கும் வகையில் , சூழலை, பழமையைப்பேணி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அவ்விதம் செய்கையில் நகர்மயப்படுத்தப்படுதல் அப்பகுதியைச் சீரழிக்காதவரையில் கடுமையான விதிகளையும் கூடவே அமுல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அப்பகுதி எதிர்காலத்தில் கட்டடக்காட்டினுள் மறைந்து விடும்.

ஜவாத் மரைக்கார் எனது ஆசிரியர்களில் ஒருவரும் பின்னர் சக ஆசிரியருமான ரஸீன் மஃருப் ( புத்தளம் ) என்பவர் நூலகம் எரியூட்டப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டதும் பாடசாலையில் வாய்விட்டு அழுதார். அன்று முழுதும் சித்தப் பிரமை ஏற்பட்டதுபோலிருந்தார். தாம் யாழில் கல்வி கற்றபோது அதிபராகவிருந்த லோங் அடிகளாரின் தலைமையில் இந்நூலகத்துக்குப் பணம் திரட்டியதாகத் தெரிவித்தார்.

Sarvachitthan Kkumar:  உங்களது ‘யாழ் நூலகம்’ பற்றிய பதிவினை இப்போதுதான் படித்தேன். உண்மையில் தமிழர்களின்- அதிலும் குறிப்பாக நூலகத்திற்கு அண்மையில் இருந்தவர்களும்… தமக்குத் தேவையான போது அங்கு எளிதில் செல்லும் வாய்ப்புப் பெற்ற யாழ் வாசிகளும் கொடுத்து வைத்தவர்கள் தாம். எனது பொழுது போக்கே நூல்களை வாசிப்பதும் அவற்றைச் சேர்த்து வைப்பதுமாகத் தான் கழிந்தது… . இப்போதும் எனது மடிக் கணினி நூல்களின் பாரம் தாங்காமல் முனகுவதுபோல் சில சமையங்களில் பிரமை ஏற்படுவதுண்டு. மின் நூல் களாகவும், சஞ்சிகைகளாகவும்…( தமிழ், ஆங்கிலம் ) பத்தாயிரத்துக்கும் மேல் பதிவிறக்கி வைத்திருக்கிறேன். எம்மோடு வாதிடாமல்…. எம்மை வெறுக்காமல்.. எமக்கு அறிவினையும் … மன அமைதியையும் தரும் ஒரேயொரு சாதனம் நல்ல நூல்கள் தாம். நாம் அவற்றைக் கைவிடும் வரை அவை நம்மைப் புறக்கணிப்பதில்லை….. !? இதில் மற்றொரு முக்கிய சம்பவம் …. இந்த நூலகம் எரிக்கப்பட்ட நாளில் 1981 மே 31, நள்ளிரவு கழிந்து சில நிமிடங்கள் சென்றபின்… அந்த அற்புத அறிவுக்களஞ்சியம் தீ நாக்குகளால் கருகி… அதிலிருந்து வெளியேறிய புகை மண்டலத்தை, எமது வீட்டு முற்றத்தில் நின்று நானும் பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில் அங்கு என்ன நடை பெறுகிறது என்பதே எமக்குப் புரியவில்லை… ஏனெனில் அன்று இரவுதான் வண்ணார் பண்னையில் உள்ள நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற அரசியல் கூட்டம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடும்… அதனைத் தொடர்ந்து எழுந்த அரச வன்முறையும்….. எம்மைக் கிலி கொள்ளவைத்துக் கொண்டிருந்தன. அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த அன்றைய யாழ் மேயம் விசுவநாதன் உட்பட வேறு சிலரும் அப்போது எமது குடும்பத்துடன் தான் தற்காலிகமாகத் தங்கிப் பின்னர் வேறிடங்களுக்குச் சென்றதாக ஞாபகம்( எமது மாமனாரின் வீட்டில்.! அதற்கு அடுத்திருந்தது/இருப்பது எமது வீடு)…… அது வரை வெளி நாடுகளில் வேலை பெற வேண்டும் என்னும் எண்ணமே இல்லாதிருந்த எனக்கு… இனி இந்த நாடு எம்மை வாழவைக்காது போலும் என்ற என்ணம் முளைவிட்டதும் அப்போதுதான் . அதன் பின்னரே 1981 கிறிஸ்மஸ் விடு முறையில் முதல்முதலாக நாம் சிங்கப்பூர் வந்தோம். அதுவே தொடர்ந்து எம்மை நீண்ட காலம் சிங்கை.மலேசிய வாசிகளாகவும் மாற்றியது.

என்னைப் பொறுத்த மட்டில்…… நூலகத்தை அழிப்பது என்பது அது தொடர்பான இனத்தினை முற்றாக அழிப்பதற்கு ஒப்பானதே ……… நாற்பது வருடங்களுக்கு முன் ஆரம்பித்த இந்த ‘அழிப்பு’ இன்றுவரை தொடர்வது வரலாற்றுத் துயர். [ இலங்கை ‘பெயரளவில்’ சுதந்திரம் பெற்ற சில நாள்களில் நான் பிறந்தேன்…….. எனக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது , முதல் இனக் கலவரம் ஏற்பட்டது. அதில் என் தந்தையாரே மாட்டிக்கொண்டு ஒரு மாதத்தின் பின் வீடுவந்து சேர்ந்தார். மாத்தறையிலஎமது சுருட்டுகளை எடுத்து விற்பனை செய்யும் ஒருவ்ரது கடைக்கு நிலுவைக் காசினைப் பெறச் சென்ற சமையம் அந்த இனக் கலவரம் வெடித்தது…. எனது தந்தையார் அப்போது மாத்தறை, டிக்கோயா, வத்தளை, நீர்கொழும்பு ஆகிய இடங்களுக்கு சுருட்டு அனுப்பிவந்தார். எமது வீட்டிலேயே ஓர் சிறிய சுருட்டுக் கைத்தொழிற்சாலை சுமார் 20 பேருடன் இயங்கி வந்தது……… இதனை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்… அந்த முதல் இனக் கலவரத்தில் எனது தந்தையார் உயிர் பிழைத்தாலும்… அவர் சுருட்டு அனுப்பி வந்த அத்தனை இடங்களும் … அழிக்கப்பட்டதால்… அந்தச் சின்ன வயதிலேயே அதன் தாக்கத்தை உணரும் நிர்ப்பந்தம் எனக்கு… ஏற்பட்டிருந்தது…… ம்.. இப்படியே ஆயுள் முழுக்க எழுத விடயம் உள்ளது……. ..விரிவஞ்சி நிறுத்திக் கொள்கிறேன்…]

Giritharan Navaratnam: உங்களது மனத்தைத்தொடும் கருத்துகளுக்கு நன்றி. இவை வெறும் கருத்துகள் மட்டுமல்ல, வரலாற்றின் ஆவணப்பதிவுகளும்தாம்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 01 June 2020 22:50