எழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை!

Tuesday, 02 June 2020 09:48 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

மணியனின் இலங்கைப்பயணக்கதைஅறுபதுகளில் , எழுபதுகளில் தமிழ் வெகுசன வாசகர்கர்கள் இவரின் எழுத்துகளைத்தீவிரமாக வாசித்தார்கள். ஆனால் இன்று அவரது படைப்புகளை ஏனைய வெகுசனப் படைப்பாளிகளான நா.பார்த்தசாரதி, அகிலன், சாண்டில்யன் .. போன்றோரின் படைப்புகளை வாசிப்பது போல் வாசிப்பதாகத்தெரியவில்லை. ஏனையவர்களின் படைப்புகளைப்போல் பதிப்புகள் பல கண்டதாகத்தெரியவில்லை. ஏன் என்று யோசித்துப்பார்ப்பதுண்டு. இவரது பல நாவல்கள் ஆனந்த விகடனில் தொடர்களாக வெளியாகின. விகடனின் எண்ணிக்கையும் அவற்றால் அதிகரித்தது. அவர்தான் மணியன். வேங்கட சுப்பிர மணியன் என்பது முழுப்பெயர். திரையுலகிலும் இவரது படைப்பான இதயவீணை வெளியாகி வெற்றியடைந்தது. திரைக்கதை எம்ஜிஆர் மயப்படுத்தப்பட்டிருந்தது.

காதலித்தால் போதுமா என்னும் நாவலில் தொடங்கி (ஓவியர் மாயாவின் ஓவியங்களுடன் வெளியாகிய நாவல்) நீரோடை, தேன் சிந்தும் மலர், இதய வீணை, நெஞ்சோடு நெஞ்சம், உண்மை சொல்ல வேண்டும், உன்னை ஒன்று கேட்பேன், என்னைப்பாடச் சொன்னால், லவ் பேர்ட்ஸ். என்று பல தொடர்கதைகளை எழுதினார். இவற்றில் லவ்பேர்ட்ஸ் நாவலைக் குமாரி பிரேமலதா என்னும் பெயரில் எழுதினார். இந்நாவலுக்கு மட்டும் ஓவியர் ஜெயராஜ் கவர்ச்சிகரமான ஓவியங்களை வரைந்திருந்தார். ஏனைய நாவல்கள் அனைத்துக்கும் ஓவியர் மாயாவே ஓவியங்கள் வரைந்திருந்தார். இவற்றில் இதயவீணை, உண்மை சொல்ல வேண்டும் ஆகியவை மிகுந்த வரவேற்பைப்பெற்றதாக நினைவு. காதலித்தால் போதுமாவை நான் விகடன் பிரசுரமாகத்தான் வாசித்தேன். அது தொடராக வெளியானபோது நான் இதழ்களில் வெளியான தொடர்களை வாசிக்கத்தொடங்கியிருக்க வில்லை.

பல்வேறு நாடுகளுக்குச் சென்று தன் பயண அனுபவங்களை இதயம் பேசுகிறது என்று எழுதினார். அவையும் அவை வெளியான காலகட்டத்தில் வாசகர்களின் பேராதரவைப்பெற்றன. அதனால்தான் விகடன் நிர்வாகம் அவரை மீண்டும் மீண்டும் வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பியது. எம்ஜிஆரின் நம்பிக்கைக்குப்பெரிதும் உகந்தவர்களிலொருவராக விளங்கியவர். பின்னர் ஆனந்த விகடனிலிருந்து வெளியாகி 'இதயம் (பேசுகிறது') என்னும் சஞ்சிகையைத்தொடங்கினார்.

அண்மையில் தற்செயலாக 'நூலகம்' தளத்தில் இவரது இதயம் பேசுகிறது பயணத்தொடரில் வெளியான இலங்கைப்பயணக்கதை நூல் கண்களில் பட்டது.

எங்கு சென்றாலும் தமிழ் நாட்டுச் சாப்பாட்டைத் தேடுவது இவரது வழக்கம். இவரது பயணக்கதைகளிலெல்லாம் அதை நிச்சயம் காணலாம். இதிலும் காணலாம். ஆனால் அவர் இலங்கைத் தமிழ்ப்பகுதிகள் அனைத்தையும் சுற்றிப்பார்த்திருக்கின்றார். தமிழ் அரசியல்வாதிகள், அப்போது இலங்கையின் பிரதமராக விளங்கிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனா , சிரித்திரன் சிவஞானசுந்தரம் போன்ற எழுத்தாளர்களையெல்லாம் சந்தித்து இப்பயண நூலில் பதிவு செய்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் சுருட்டுக்கொட்டில், கள்ளுக்கடை என்று பல இடங்களைப்பார்த்திருக்கின்றார். :- மேலோட்டமான பயண நூல். வாசகர்களைக் கவரும் நோக்கில் சுவையாக எழுதப்பட்டிருக்கின்றது.

பயண நூல் எப்படியோ? அவர் சென்ற காலகட்டம் நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலகட்டம். பதின்ம வயதில் நகரைச் சுற்றித்திரிந்த காலகட்டம். அக்கால ஆளுமைகள், இடங்கள், மக்கள் வாழ்வு, காட்சிகள் போன்றவற்றைப்பற்றிய விபரிப்புகள் என்னை அக்காலகட்டத்துக்கே அழைத்துச் சென்று விட்டன. அவ்வகையில் இந்நூலுக்கு ஒருவகை முக்கியத்துவம் என்னைப்பொறுத்தவரையிலுண்டு. வாசித்துப்பாருங்கள். நீங்களும் உணர்வீர்கள்.

நூலகம் தளத்தில் இந்நூலை வாசிக்கலாம்: மணியன் - இலங்கைப்பயணக்கதை - http://noolaham.net/project/349/34863/34863.pdf

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 02 June 2020 10:05