அண்மையில் எழுபதுகளில் , யாழ்ப்பாணத்தில் எழுத்தாளர் சி.மகேஸ்வரன் (இந்து மகேஷ்) ஆசிரியராகவிருந்து வெளியிட்ட 'இதயம்' சஞ்சிகை  பற்றியொரு குறிப்பினைப்பதிவு செய்திருந்தேன். அது பற்றி இந்து மகேசுக்கும் அறியத்தந்திருந்தேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார். அத்துடன் தான் முகநூலில் 'இதயம்' பற்றி எழுதிய பதிவு பற்றியும் அறியத்தந்திருந்தார். அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அத்துடன் அவர் ஜேர்மனியிலிருந்து 1998 -2008 காலகட்டத்தில் 'பூவரசு' என்னும் பெயரில் சஞ்சிகையொன்றினை வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மூன்று இதயம் இதழ்கள் நூலகம் தளத்திலுள்ளன: http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

அவர் அனுப்பிய மின்னஞ்சல் கீழே:

"அன்பிற்கினிய கிரிதரன்! வணக்கம். அவ்வப்போது உங்கள் முகநூல்பக்கமும் வந்துபோகிறேன். இதயம் வெளியான காலகட்டம் (1971) நம்நாடு போர்ச்சூழலுக்குள் சிக்கியிருந்ததால் புத்தக வெளியீட்டிலும் அதன் விநியோகத்திலும் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு வருடத்துக்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல் இதயம் துடிப்படங்கிப் போயிற்று. ஆனாலும் வெளியான ஒரு சில இதழ்களிலேனும் பயனுள்ள சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறோம் என்ற நிறைவை உங்களது முகநூல்பதிவு தந்திருக்கிறது. திரு.மணியம் அவர்களையும் இரசிகமணி கனக் செந்திநாதன் அவர்களையும் இதயம் இதழுக்காகவும், ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்களை வரதர் அவர்களின் வெள்ளி இதழுக்காகவும் நேரடியாகச்சென்று பேட்டி எடுத்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகவே பூவரசு இதழிலும் நமது கலைஞர்கள் என்னும் பகுதியில் புலம்பெயர் கலைஞர்கள் பலரது பேட்டிகளும் பிரசுரமாகியிருக்கின்றன.  அன்புடன் இந்துமகேஷ்"

இந்து மகேஷ் இதயம் பற்றி எழுதிய முகநூற் பதிவு கீழே:

என் எழுத்துப் பயணத்தில்..... இதயம் என்றொரு ஏடெடுத்தேன்….  - இந்துமகேஷ்

அது ஆண்டு 1971. இருபத்திரண்டே வயதான இந்த இளைஞனுக்கு இலக்கிய இதழ் ஒன்றினை வெளியிடும் எண்ணம் உதித்தது.
மாணவப் பருவத்தில் இவன் எழுதிய சில கவிதைகளும் கதைகளும் நாடகங்களும்  இலங்கைவானொலியில் ஒலிபரப்பானதும் இவனது எழுத்தைப் பாராட்டி வாசகர்கள்  வாசகிகள் சிலர் கடிதங்கள் வரைந்ததும் இவனது சிற்றிதழ்  தாகத்துக்கு  உற்சாகபானம் வழங்கி ஊக்குவித்திருந்தன. இதயம் என்னும்மகுடம் சூட்டிக்கொண்டு  மாத சஞ்சிகையாக மலர்ந்த அந்தக் கலை இலக்கிய இதழின் முதல் இதழ் கொழும்பிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது. கொழும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட போதும் அதன் முதல் இதழ் இவனது தாய்மடியான  புங்குடுதீவிலிருந்து வெளியாகவேண்டும் என்று இவன் விரும்பினான்.  கொழும்பிலும் ஊரிலும் இருந்த இவனது நண்பர்களோடு கலந்தாலோசித்து ஊரில் பெரிய  அளவில் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டான்.

1971 சித்திரைத் திங்களில் இதயம் முதலாவது இதழ் வெளியிடுவதாக முடிவாயிற்று. கொழும்பிலிருந்த சில நண்பர்களுடன் விழாநிகழ்ச்சிகளையும் ஒழுங்குசெய்துகொண்டு முதல்வாரத்தில் இதயம் இதழ்களுடன் அவன் ஊருக்குப் பயணமானான்.
நண்பர்கள் அடுத்த வாரம் ஊர்வருவதாக முடிவாயிற்று. 1971 சித்திரைத் திங்கள் இரண்டாவது வாரத்தில் வெளியீட்டுவிழா நிகழவிருந்தபோது இவன் ஊர் வந்து சேர்ந்த முதல்வாரத்தின் இறுதிநாட்களில் சிங்கள அரசுக்கெதிரான சிங்கள இளைஞர்களின் ஆயுதப்புரட்சி வெடித்தது. நாடு அமைதியிழந்த சூழலில் இதயம் வெளியீட்டு விழாவும் எண்ணம்போல நிகழாது போயிற்று.
எனினும் இதயம் அமைதியாகத் தனது கலை இலக்கியப் பயணத்தைத் தொடங்கிற்று.

நாடு அமைதிநிலைக்குத் திரும்பும்வரை யாழ்ப்பாணத்திலிருந்துகொண்டு இதயத்தை  வெளியிடும் எண்ணத்தோடு, இதயம் ஆசிரியர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு  புங்கையூர் சி.மகேஸ்வரன் என்ற இந்த இளைஞன் யாழ்ப்பாணம் ஆனந்தா அச்சகத்தில்  கால் பதித்தான். ஈழத்து இலக்கிய உலகின் முன்னோடிகளில் ஒருவர் என்று  இன்று புகழப்படும் தி.ச.வரதராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வரதர் அவர்களைச்  சந்திக்கும் பொன்னான வாய்ப்பு இவனுக்கு அங்கே கிடைத்தது. அவருடைய தலைமுறை எழுத்தாளர்கள் பலரது அறிமுகமும் அவர் மூலமாக அவனுக்குக் கிடைத்தது. இதயம் தனது இலக்கியப் பயணத்தை உற்சாகமாகத் தொடரலாயிற்று.

இதயம் சஞ்சிகை

அகஸ்தியர், மு.த. எஸ்.பொ. மு:நேமிநாதன் மு.பொ. என். கே.மகாலிங்கம்  சு.வில்வரத்தினம், தம்பியையா தேவதாஸ், கோப்பாய் சிவம், நெல்லை க.பேரன்.  திக்குவல்ல கமால், மு.புஷ்பராஜன், ஐ.சாந்தன், டேவிட் ராஜேந்திரன், காசி  ஆனந்தன், இராஜம் புஷ்பவனம், சௌதாமினி, நந்தினி சேவியர், இரசிகமணி கனக  செந்திநாதன், செ.சிவநாதன், நாகேசு தர்மலிங்கம், பாலமுனை பாருக்,  எம்.எஸ்.எம்.ஜின்னா, இவர்களோடு இன்னும் பலர்  என்று மிக நீண்ட எழுத்தாளர்  பட்டியல் இதயத்திடம் உண்டு. அவர்களது எழுத்துக்களால் இதயம் ஒரு தரமான  சஞ்சிகையாக மிளிர்ந்தது. இதயம் இரண்டாவது இதழிலிருந்து தொடர்ந்து ஆனந்தா அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது.

அந்தக் காலகட்டம் ஈழத்துச் சிற்றிதழ்களின் வசந்தகாலம் என்று எண்ணத்தக்க வகையில் ஏராளமான சிற்றிதழ்கள் வெளியாகத் தொடங்கியிருந்தன. ஓராண்டாகத் தொடர்ந்த இதயம் இதழின் வருகை 1972 சித்திரைத்திங்களில் புங்குடுதீவில் நடைபெற்ற அதன் ஓராண்டு நிறைவுவிழாவுடன் நிறைவுகண்டது. ஆனாலும் அதில் எழுதிய புதுமுக  எழுத்தாளர்கள் பலர் பின்நாட்களில் புகழ் பெற்ற எழுத்தாளர்களாக உலாவந்தனர்.

புங்கையூர் மகேஸ்வரன், ரஜனிமணாளன், இளந்தீவகன் என்று பல பெயர்களுக்குள் எழுதிக்கொண்டிருந்த நானும் வீரகேசரி பிரசுரமாக வந்த எனது நவீனத்துக்காக இந்துமகேஷ் என்று பெயர்மாறினேன். மகேஸ்வரன் என்ற பெயர் மறைந்து இந்துமகேஷ் என்ற பெயரே எழுத்துலகில் நிலையாயிற்று. நியூவேவ் என்கின்ற புதியஅலையொன்று எழுத்துலகில் வீசத்தொடங்கிய பொழுதுகளில் என்னையும் நியூவேவ் எழுத்தாளன் என்று வீரகேசரி அறிமுகப் படுத்தியதாலோ என்னவோ நமது இலக்கிய எழுத்தாளர்கள் சிலர் என்னை ஜனரஞ்சக எழுத்தாளர் பட்டியலுக்குள் தள்ளிவிட்டார்கள். எனினும் வாசகர்கள்  என் எழுத்தின்மீது கொண்டிருந்த அபிமானம் எனக்கு வியப்பளித்தது.

புலம்பெயர்ந்த பின்னால் நான் சந்தித்த எனது வாசகர்கள் பலரும் நல்ல  படைப்பாளர்களாகவும் இலக்கியரசனை உள்ளவர்களாகவும்  இருந்ததில் மனம்  பூரித்தேன். அவர்களது படைப்பாற்றலுக்கு களம் அமைத்துக் கொடுக்கவேண்டும்
என்ற எனது பேரவாவின் வெளிப்பாடே பூவரசாக மலர்ந்தது.

"இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்." -இது இதயத்தின் வாசகம்

"உலகமே நம் இல்லம் உள்ளமெல்லாம் நம் சொந்தம்" -இது பூவரசின் வாசகம்.

1971 -1972  இதயம்
1991-  2008 பூவரசு


 

முகநூல் எதிரொலிகள் சில:

Nagalingam Srisabesan உண்மைதான், இந்து மகேஸ் நியூவேவ் எழுத்தாளராகவே அறியப்பட்டார்.

Giritharan Navaratnam உண்மையில் இதயம், பூவரசு ஆகிய சிற்றிதழ்களின் பங்களிப்பு முக்கியமானது. சி.மகேஸ்வரன் அவர்தான் என்பதை அண்மையில்தான் அறிந்தேன்.

Nagalingam Srisabesan எனக்கும் இது புதுச் செய்தி

Giritharan Navaratnam 'புது அலை' எழுத்தாளரைப்பற்றிய புதுச்செய்தி , அவர் புதிய அலையெழுத்தாளரல்லர், பழையவர்தான், இலக்கியதின்பால் தணியாத தாகம் கொண்டவர்தான் என்பதை அறியத்தந்தது. உண்மையில் இதயம் (71-72), பூவரசு (1991 -2008) நடத்தியுள்ளார். அது சாதாரண விடயமல்ல. விடாமுயற்சியும், இலக்கியத்தின்பால் ஆர்வமும் மிக்க ஒருவரால்தான் சாத்தியம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.