கப்பலில் கரையொகப்பலில் கரையொதுங்கியவர்கள்துங்கியவர்கள்

“2009, 2010 ஆம் ஆண்டுகளில் இரண்டு கப்பல்களில் புகலிடம் தேடி வந்திறங்கிய தமிழர்களை நாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தினோம். அவர்களது குடும்பங்களைப் பிரித்தோம். குழந்தைகள் உட்பட, சகலரையும் சிறையில் அடைத்தோம். இவர்கள் சிறையில் நலிவுற்றிருந்த இதே ஆண்டுகளில்தான் –  கொசொவோ அகதிகளை விமானங்களில் மீட்டெடுத்துக் கொண்டுவந்த பத்தாவது ஆண்டு நிறைவையும், வியட்நாமிலிருந்து தப்பியோடி வந்த அகதிகளை வரவேற்ற நாற்பதாவது ஆண்டு நிறைவையும், ஹங்கேரியப் புரட்சியின்போது இடம்பெயர்ந்த அகதிகளை உள்ளெடுத்த ஐம்பதாவது ஆண்டு நிறைவையும் நினைவுறுத்திக் கொண்டாடி மகிழ்ந்தோம். கடந்த காலங்களில் அகதிகள் மீது காண்பித்த அனுதாபத்தையிட்டும் இரக்கத்தையிட்டும் எங்கள் முதுகில் நாங்களே தட்டிப் பெருமிதமடைந்தோம். அதே சமயம், புதிதாக வந்திறங்கிய தமிழ் அகதிகளிடம் கொடூரமாக நடந்துகொண்டோம். கனடியர்களான நாங்கள் உண்மையில் யார் என்பதிலும், உலகுக்கு எங்களை எப்படி நாங்கள் காட்டிக் கொள்கிறோம் என்பதிலும் உள்ள இந்த முரண்நிலையை நான் ஆராய்ந்தறிய விரும்பினேன்.”

The Boat People என்னும் தமது முதலாவது நாவலூடாக ஆங்கில இலக்கிய உலகில் இன்று பிரபலம் அடைந்திருக்கும் தமிழ்க் கனடியரான ஷரோன் பாலா (Sharon Bala) அந்த நாவலைத் தாம் எழுதுவதற்குக் கால்கோளமைத்த அருட்டுணர்வின் பின்னணியை இவ்வாறுதான் குறிப்பிடுகின்றார்.

தொழிலின் நிமித்தம் டுபாயில் வசித்துக்கொண்டிருந்த தமிழ்ப் பெற்றோரின் பிள்ளையாக அங்கு பிறந்தவர், ஷரோன். பின்னர் எழுபதுகளின் நடுப்பகுதி வரை ஐக்கிய அரபு நாடுகளில் (UAE) வாழ்ந்து வந்த அவரது குடும்பம், இலங்கையில் நிலவிய பாதுகாப்பின்மை காரணமாக ஊர் திரும்ப விரும்பாமல், ஷரோனின் ஏழாவது வயதில் கனடாவுக்கு இடம் பெயர்ந்தது. ஒன்ராறியோ மாகாணத்தின் பிக்கறிங்ஸ் நகரில் வளர்ந்த ஷரோன், உலகின் சகல திசைகளிலிருந்தும் வந்து குடியேறிய மக்களை உள்ளடக்கிய அன்றைய கனடிய பன்முகக் கலாசாரச் சூழலே, தமது இன்றைய ஆளுமைக்கும் எழுத்தார்வத்துக்கும் வித்தூன்றியதாகக் கூறுகின்றார்.

அத்திலாந்திக் சமுத்திரத்தின் கரையோரமாக அமைந்திருக்கும் Newfoundland and Labrador மாகாணத்தின் St. John’s நகரில் தற்போது தமது கணவர் Tom Braid சகிதம் வாழ்ந்துவரும் ஷரோன், அங்குள்ள Port Authority எழுத்தாளர் குழுவில் ஓர் உறுப்பினராக அங்கம் வகித்து வருகிறார். 2017இல் அவரது Butter Tea at Starbucks என்ற சிறுகதை Writers’ Trust / McClelland & Atewart Journey பரிசைப் பெற்றிருந்தது. The Boat People நாவலின் கையெழுத்துப் பிரதி, 2015ஆம் ஆண்டுக்கான Percy Janes First Novel விருதைப் பெற்றிருந்ததுடன், Fresh Fish விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்- பட்டிருந்தது. Newfoundland and Labrador’s Arts and Letters விருதினை மூன்று தடவைகள் பெற்ற எழுத்தாளரான இவர் எழுதிய சிறுகதைகள் Hazlitt, Grain, The Dalhousie Review, Riddle Fence, Room, PRISM International, The New Quarterly இதழ்களிலும், Racket: New Writing From Newfoundland எனப்படும் சிறுகதைத் தொகுதியிலும் இடம்பெற்றுள்ளன.

“2010ஆம் ஆண்டு கனடாவின் மேற்குக் கரையோரமாக வந்தொதுங்கிய MV Sun Sea என்ற பெயர் கொண்ட, ஓர் உண்மையான கப்பலின், உண்மையான கதைதான் எனது The Boat People என்ற நாவலின் உந்து சக்தி” என CBC வானொலியின் On the Go நிகழ்ச்சியில் ஷரோன் கூறுகிறார். “இலங்கையில் இடம்பெற்று வந்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த தருணத்தில், நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 500 தமிழ் அகதிகளை அக்கப்பல் சுமந்து வந்தது. அவர்களுள், மனைவியை இழந்தவரான மகிந்தன் என்ற தமிழ் அகதியையும் அவரது ஆறு வயது மகனையும் சுற்றியே பிரதானமாக நாவல் நகர்கிறது. யுத்தத்திலிருந்தும், தடுப்பு முகாமிலிருந்தும் தப்பி வந்துவிட்டதாகவும், கனடாவை வந்தடைந்த மறுகணமே வாழ்வின் கொடூரமான பக்கங்களைக் கடந்துவிட்டதாகவும் மகிந்தனின் மனம் குதூகலித்தது. ஆனால் அது வெறும் கானல் நீர்தானென்பதை அதே மனம் பின்னர் உணர்ந்துகொண்டது!”

“துருப்பிடித்த சரக்குக் கப்பலில் வந்து கரையொதுங்கியவர்களுள் பயங்கரவாதிகளும் கலந்திருப்பதாக கனடிய அரச அதிகாரங்களும் ஊடகச் செய்தித் தலைப்புகளும் புரளியைக் கிளப்பிவிடுகின்றன. கப்பலில் வந்திறங்கிய அகதிகளை அரசு சிறைக்குள் தள்ளிவிடுகிறது. சந்தேகம் மென்மேலும் வலுவடைகிறது. குறுக்கு விசாரணைகள் முடுக்கிவிடப்படுகின்றன. தனக்கும் தனது மகனுக்கும் நிம்மதியான வாழ்வு தேடி, எண்ணற்ற உயிராபத்துக்களைக் கடந்து கனடா வந்து சேர்ந்த மகிந்தனின் நம்பிக்கை தவிடுபொடியாகிப் போகிறது! தமிழ் அகதி மகிந்தன், மனக் குழப்பத்துடனும், தயக்கத்துடனும் அகதிகளுக்காக வாதாட முன்வரும் இரண்டாம் தலைமுறைத் தமிழ் வழக்குரைஞர் பிரியா, மூன்றம் தலைமுறை யப்பானிய – கனடியரான, அகதி விசாரணைத் தீர்ப்பாயத்தின் தீர்மானங்களை எடுக்கும் தீர்ப்பாளர் க்கிறேஸ் ஆகியோரது மாறுபட்ட கண்ணோட்டங்களுடன் கூடிய கதைகளின் கூட்டுக் கலப்பாகவே இந்த நாவல் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.” இவ்வாறு தமது நாவல் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

‘சட்டவிரோதம்,’ (Illegal)  ‘குற்றவாளிகள்’ (Criminals) போன்ற சொற்பதங்களைக் கனடிய அரசு எவ்வளவு பொறுப்பற்ற விதத்தில் அடிக்கடி கையாண்டு வந்திருக்கிறதென்பதையும், சிலவேளைகளில் அவை பச்சைப் பொய்யான வார்த்தைகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பதையும் மிகுந்த விசனத்துடன் சுட்டிக் காட்டும் ஷரோன், கனடாவின் சமகால அகதி நெருக்கடிகளின் அதிர்ச்சியூட்டும் பக்கங்களைத் தமது நாவல் சித்திரித்திருப்பதாகச் சொல்கிறார். மேலும் Platform இணைய இதழுக்கு வழங்கியிருக்கும் செவ்வி ஒன்றில் இந்த நாவல் குறித்தும், தமது எழுத்துல அனுபவங்கள் குறித்தும் அவர் மனம் திறந்து கூறியிருப்பவை மிகுந்த கவனத்துக்குரியவை. இவை அவற்றுள் ஒரு சில –

எழுத்துக்கும் உங்களுக்குமான மனோரதியக் காதல் எப்போது ஆரம்பமானது?

நீங்கள் கேள்வி வடிவமைத்த விதத்தை நான் மிகவும் இரசிக்கிறேன். மிகச் சிறிய வயதிலேயே அது ஆரம்பமானது. கதை எழுதுதல்தான் அன்று, பாடசாலைப் பணிகளில் எனக்கு மிகவும் விருப்புக்குரியது. அதனை அவதானித்த தாயார் எனது 14 வயதில் தபால் மூலம் கதை எழுதும் வகுப்பில் என்னைச் சேர்த்திருந்தார். பல வருடங்கள் அவ்வகுப்பைத் தொடர்ந்தேன். ஆனால் ஆக்க இலக்கியங்களை எழுதுவது, ஓர் உகந்த தொழிற் துறை என நான் அப்போது நம்பவில்லை. ஆகையால் எனது பல்கலைக்கழக நாட்களில் அதனைக் கைவிட்டுவிட்டு, பொதுத்தொடர்புத் துறையில் தொழிலாற்றத் தொடங்கினேன். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர், எழுத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட பலரும் வாழும் St. John’s நகரில் குடியேறினேன். சற்றே துணிச்சலற்ற செயலாகத் தென்பட்ட போதிலும், வயது முதிர்ச்சி (முப்பதுகளின் முற்பகுதி) துணிச்சலைத் தந்தது. முயற்சித்தேன்.

பல்வேறு வெளியீடுகளிலும் தளங்களிலும் எழுதியிருக்கிறீர்கள்; ஓர் எழுத்தாளராக உங்களை ஈர்த்தது எது?

ஈர்ப்பு எல்லா இடங்களிலிருந்தும் ஏற்படுகிறது. சிலவேளைகளில் எனக்கு நண்பர்கள் சம்பவங்களைக் கொண்டு வருகிறார்கள்; அவை நம்ப முடியாதவையாகவோ அல்லது வெகு சாதாரணமானவையாகவோ இருக்கலாம். சில வருடங்களுக்கு முன்னர் தனது நினைவாற்றலைத் தன்னிச்சையாக இழந்த ஒரு பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அது பின்னர் ஒரு கதையாயிற்று. வெட்கமின்றி ஒட்டுக் கேட்கும் வழக்கமும் என்னிடம் உண்டு. ஒரு புகையிரதப் பிரயாணத்தின் போது, எனக்குப் பின்னாலிருந்த இரண்டு இளம் பெண்களது உரையாடல் அனைத்தையும் எனது தொலைபேசியில் இரகசியமாகப் பதித்தெடுத்தேன். இவ்வாறான யதார்த்தபூர்வமான உரையாடலை கண்டுபிடிப்பது கடினம்; ஆனால் கடன் வாங்குவது சுலபம். மேலும், ஏனைய எழுத்தாளர்களும், நான் தொடர்ந்து வாசிக்கும் எழுத்தாளர்களும் என்னை ஊக்குவிக்கின்றனர். இன்னுமின்னும் சிறந்த வசனங்களை எழுதவும், எனது பாத்திர வார்ப்புக்களை, கருப் பொருட்களை மேம்படுத்தவும் அவர்கள் என்னை ஊக்குவிக்கின்றனர்.

The Boat People  கதையைச் சிறிது சொல்லி, அதனை எப்படிக் கட்டமைத்தீர்கள் எனக் கூறுவீர்களா?

இந்த நாவல் மூன்று கண்ணோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தனது ஆறு வயது மகனுடன் கனடா வந்து சேரும், மனைவியை இழந்த கணவரான மகிந்தன், கதையின் மையப் புள்ளி.  கனடாவிலான அவர்களது முதல் வருட வாழ்க்கை வழியாக, இலங்கையில் அவர்கள் வாழ்ந்த சாதாரண வாழ்க்கை மற்றும் அவர்களது பிரயாணம் என்பவற்றைக் கதை விபரித்துச் செல்கிறது. ஆனால் அக்கதையை வெவ்வேறு கோணங்களில் உற்று நோக்கியபோதுதான், அதனால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஆகையால் மகிந்தனின் சட்டத்தரணி பிரியாவையும், மகிந்தனை நாடுகடத்துவதா அல்லது இங்கு தங்கி வாழ அனுமதிப்பதா என்பதைத் தீர்மானிக்கவேண்டிய தீர்ப்பாளர் க்கிறேஸையும் இந்த நாவல் பின்தொடர்ந்து செல்கின்றது. நாங்கள் மற்றவர்களது நிலையில் நின்று, மனிதாபிமானத்துடன் அவர்களது பிரச்சினைகளை அணுகுவதில் சிறந்தவர்கள் என நான் நம்பவில்லை. ஆகையால் முற்றிலும் மாறுபட்ட மூன்று கோணங்களிலிருந்து இந்த நாவலை அணுகவே நான் வாசகர்களைப் பெரிதும் வலியுறுத்துகிறேன்.

ஒரு கொஞ்சக் காலமாக நீங்கள் குறும் புனைவுகளை எழுதி வருகின்ற போதிலும், The Boat People தான் உங்களை ஒரு நாவலாசிரியராகப் பிரபலப்படுத்தியிருக்கிறது. சிறுகதைகளிலிருந்து நாவலுக்கு எப்படி உங்கள் அணுகுமுறை மாறுபடுகிறது?

சிறுகதைகள் சிறுதூர விரைவோட்டம் போன்றவை. பரீட்சார்த்தத்துக்கும் தெளிவின்மைக்கும் அங்கு அதிக இடமுண்டு. அத்துடன் அங்கு நெருக்குவாரம் குறைவு. சரிவரவில்லை என்றால் அல்லது அலுப்புத் தட்டினால் அதனைக் கைவிடுதல் சுலபம். நான் சிறுகதைகளுடன் என் எழுத்து முயற்சியை ஆரம்பித்ததையிட்டு மகிழ்கிறேன். அதன் மூலம் ஆராய்ச்சி செய்யவும், எனது குரலை நானே கண்டறியவும், கதாபாத்திரங்கள், கருக்கள், வடிவங்களுடன் விரும்பியவாறு விளையாடவும், அடிப்படையில் எப்படி எழுத வேண்டும் எனக் கற்றுக்கொள்ளவும் என்னால் முடிந்தது. ஆனால் நாவல் என்பது ஒரு தொலைதூர ஓட்டம். ஒரு தெளிவான ஆரம்பத்திலிருந்து, இறுதிவரை வாசகர் ஒரு பிரயாணத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார். எனது நாவல் பல நீண்டகாலத் தேடல்களுடன் ஆரம்பமாகிறது. முதல் வார்த்தையை எழுதும் கணப்பொழுதிலிருந்து இறுதி வரை, அதில் என்னை நான் மிகப் பெரியளவில் முதலீடு செய்திருக்கிறேன்.

ஓர் எழுத்தாளர் எனும் அடிப்படையில், உங்கள் வாசகர்களை நோக்கி, ஒரு வகையான பொறுப்பை நீங்கள் சுமப்பதாக உணர்கின்றீர்களா?

இது ஒரு மதிநுட்பமான கேள்வி! எழுதுதல் தொடர்பான மிகச் சிறந்த ஆலோசனைகளில் ஒன்றாக, கனடிய எழுத்தாளர் Sarah Seleckey சொன்ன ஆலோசனையைக் குறிப்பிடுவேன். ‘நீங்கள் படிக்க விரும்பும் கதைகளையே நீங்கள் எப்போதும் எழுத வேண்டும்’ என்பதே அது. நான் என்னை ஒரு வாசகராகக் கற்பனை செய்து – அந்த வாசகருக்கு நான் ஓரளவு பொறுப்பாளியென உணர்கிறேன்; ஆனால் மிகவும் குறிப்பிட்ட சில வழிகளில் மட்டும்! ஒரு வாசகராக என்னைத் தொந்தரவு செய்யும் விடயங்களை – விசேடமாக எனது எழுத்தைத் திருத்தும் போது – நான் தெரிந்து வைத்திருக்கின்றேன். ஒரு வாசகர் என்னும் வகையில், எழுத்தாளர் ஒருவர் எனது மதிநுட்பத்தை மதிப்பதையும், சில புதிர்களை நானாகவே அவிழ்ப்பதற்கென விட்டுவைப்பதையும், கதையினுள் எனது கற்பனையை உட்புகுத்தவெனச் சில இடைவெளிகளை ஏற்படுத்தி வைப்பதையும் நான் பெரிதும் மெச்சுகிறேன். ஆகையால், வாசகர்கள் தமக்கேயான சில சாகசங்களைப் புரிவதற்கென – ஓர் எழுத்தாளரென்னும் அடிப்படையில் – ஒரு சின்ன இடைவெளியையும் நான் விட்டு வைக்கின்றேன்.

“நீங்கள் ஓர் எழுத்தாளராக விரும்பினால் – அது கதையாக இல்லாவிட்டாலும் – தினமும் எதையாவது எழுதுங்கள்” என வலியுறுத்தும் ஷரோன் பாலா, பொதுத்தொடர்பு, நிகழ்ச்சித் திட்டமிடல் துறைகளில் பணியாற்றியவர். இன்று அவருக்கு வாழ்வாதாரத்தை வழங்கி வரும் ஒரேயொரு துறை, எழுத்து மட்டுமே! அதன் வழியாக, அவர் ஒரு பேச்சாளராகவும், கட்டுரையாளராகவும், போட்டி நடுவராகவும், எழுத்துப் பிரதி மதிப்பீட்டாளராகவும், இதழாசிரியத் தலையங்க உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றார். அவரது வாழ்வும் அனுபவங்களும் எழுத்தும், வளர்ந்து வரும் – வளர விரும்பும் எழுத்தாளர்களுக்கு அகத்தூண்டலை ஏற்படுத்தவல்ல ஊக்கிகளாக இருந்து உதவக்கூடியன என்பதில் சந்தேகமே இல்லை!

சான்றாதாரங்கள்:

https://sharonbala.com/
https://www.cbc.ca/books/sharon-bala-1.4503856
https://www.platform-mag.com/literature/sharon-bala.html

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.