- எழுபதுகளில் இலங்கை வானொலியில் தன் இலக்கிய பயணத்தை ஆரம்பித்துப்பின் பத்திரிகை, சஞ்சிகை எனத் தன் பயணத்தை விரிவு படுத்தியவர் எழுத்தாளர் தமிழ்ப்பிரியா (முத்தையா புஷ்பராணி). இலங்கையில் ஏழாலை , சுன்னாகத்தைச் சேர்ந்தவர். சிந்தாமணி, சுடர், சிரித்திரன், ஈழநாடு , வீரகேசரி போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் இவரது படைப்புகள் வெளியாகின. குங்குமம் (தமிழகம்) வெளியிட்ட அக்கரைச்சிறப்பு மலரைத்தயாரித்தவர் இவரென்று எங்கோ வாசித்த நினைவு. அதிலும் இவரது சிறுகதையொன்று வெளியாகியுள்ளது. சுடரில் சிறுகதைகளுடன் இவரது நாவலொன்றும் தொடராக வெளியானது. சுடரின் 'சந்திப்பு' பகுதிக்காகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன், எழுத்தாளர் குறமகள் ஆகியோருடன் இவர் நடாத்திய நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. புலம் பெயர்ந்து பாரிசில் வாழ்ந்து வந்த இவரது மறைவுச் செய்தியினை முகநூலில் இவரது நெருங்கிய தோழிகளிலொருவரான எழுத்தாளர் தாமரைச்செல்வி பகிர்ந்திருந்தார். எழுத்தாளர் முல்லை அமுதன் இவர் நினைவாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்குக் கட்டுரையொன்றினை அனுப்பியிருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். - பதிவுகள் -
உலகம் கைகளுக்குள் வந்தமை ஆச்சரியம் தான். வாழ்வில் பலரைச் சந்திக்கமுடியாமலேயே போய்விடுமோ என்கிற ஆதங்கம் மனதில் எழுந்துகொண்டே இருக்கும்.சிலசமயம் எல்லாம் கைகூடி வந்திருக்கும்.பலதடவைகள் கைகளுக்கு எட்டாதவையாகவே காலம் முடிந்திருக்கும். ஊரில் ஒவ்வொரு மாலைப்பொழுதுகளையும் ஆக்கிரமித்திருந்த பல நிகழ்ச்சிகளை வழங்கிக்கொண்டிருந்த இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் சிறு நாடகங்கள்,தொடர் நாடகங்கள் இவற்றுக்கப்பால் என் போன்றவர்களை அதிகம் வசீகரித்த நிகழ்வு எதுவெனில் 'இசையும் கதையும்' நிகழ்ச்சியாகும்.கதைக்கேற்ற பாடல்களுடன் மனதுள் இறங்கி நாளெல்லாம் அசைபோடவைக்கும்.பல நாட்கள் அவை பற்றியே பேசுவோம்.நண்பர்களின் வீட்டில் அல்லது யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவிலோ உட்கார்ந்து கேட்போம்.பொழுது போவதே தெரியாது..வேறு தெரிவுகளும் இல்லாத நாட்கள்.
அதே சமயம் யார் என்கிற தேடலும் நண்பர்களிடையே எழும். அந்த வேளையில் தான் ஈழநாடு, சுடர், கலாவல்லி, இலங்கை வானொலி, வீரகேசரி, சிந்தாமணி, அமிர்த கங்கை, மல்லிகை, சிரித்திரன் , குங்குமம்(இந்தியா), இதயம் பேசுகிறது போன்ற இதழ்களில் எழுதிய கதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்படப் பலரும் வாசிக்கும் படைப்பாளராக நாம் கண்டோம்.சுடரில் வெளிவந்த 'வீணையில் எழும் ராகங்கள்' மறக்கமுடியாத தொடராகும். அதே போலத் தினகரன் போன்ற பத்திரிகைகளிலும் எழுதத்தொடங்கினார். அப்போது 'நெஞ்சில் வரைந்த ஓவியம்', 'உண்மை அன்பிற்கு ஊறு ஏற்படாது', 'இறைவன் கொடுத்த வரம்' போன்ற தொடர்களை எழுதி எம்மை வியப்பில் ஆழ்த்தினார்.நாமும் எழுதத்தொடங்கிய காலம். அதே சமயம் கவிதைகள், கட்டுரைகள் எனவும் எழுதினார். குங்குமம் இலங்கைச் சிறப்பிதழுக்குத் தொகுப்பாசிரியராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ்வேளையில் தான் தமிழ்ப்பிரியாவின்(புஸ்பராணி இளங்கோவன்) ரசனைமிக்க பாடல்களுடன் இசையும் கதையும் கேட்போம்.அடுத்து எப்போது ஒலிபரப்பும் என்றும் காத்திருப்போம்.
அக் காலங்களில் ஏழாலையிலிருந்து இசையும் கதையும் பகுதிக்கு இருவர் எழுதினார்கள்.நமக்குள் ஒரு குழப்பம் .இருவரா அல்லது இருவரும் ஒருவரா?இல்லையென இருவரும் ஒருவரல்ல என்கிற பதில் வந்தது.மற்றவர் எழாலை ஜனகமகள் சிவஞானம்.ஆவார். நாலைந்து பேர்கள் இணைந்து எழுதும் கதைகளும் பத்திரிகைகளில் வந்தன. மத்தாப்பு என்கிற தொடர் பிரபலம். அமரர்.சி முத்தையா அவர்களுக்கும் பரமேசுவரிக்கும் அவர்களுக்கும் மகளாகப் பிறந்தவர் திருமதி.தமிழ்ப்பிரியா இளங்கோவன் அவர்கள் அறிஞர்கள் சூழ்ந்த ஏழாலை (சுன்னாகம்) எனும் கிராமத்தில் பிறந்த தமிழ்ப்பிரியா ஏழாலை சன்மார்க்க வித்தியாசாலையிலும், மல்லாகம் இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றார். யாழ்ப்பாணத்தில் தனியார் கணக்குப் பரிசோதகர் காரியாலயம் ஒன்றில் கணக்குப் பதிவாளராகவும் பணிபுரிந்தார்.
காலம் பலரை நகர்த்திச் சென்றிருக்கிறது. நம்மைப் போலவே புலம்பெயர்ந்து பிரான்ஸிற்கு வந்தார். அங்கும் தன் இலக்கிய முயற்சிகளைக் கைவிட்டுவிடவில்லை. .தொடர்ந்து எழுதினார். அவை ஈழநாடு(பிரான்ஸ்) ஈழமுரசு (பாரிஸ்) ஐ பி சி வானொலி,ரி.ரி.என் தொலைக்காட்சி என அச்சு ஒலி,ஒளி ஊடகங்களில் பிரசுரமாகியும், ஒலி/ஒளிபரப்பாகியும் வந்தன. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். தன் வாழ்நாளில் தன் படைப்புக்கள் நூலாக்கிவிடவேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டார். சிறுகதைத் தொகுக்கும் முயற்சியில் சில நண்பர்கள் ஊடாக சிலகதைகளைத் தேடிக்கொடுத்தேன். அவைகளைத் தொகுத்து கொழும்பு மீரா பதிப்பகம் ஊடாக 'காம்பு ஒடிந்த மலர்கள்','ஒரு நியாயம் விழிக்கிறது' என இரண்டு சிறுகதைத் தொகுதிகளாகத் தந்தார். இன்னும் தொகுக்க முடியாமல் / கிடைக்காமல் போன கதைகளுடன் முழுச் சிறுகதைகளையும் தொகுத்து வெளியிடவும், கவிதைகளையும், குறுநாவல்களையும் வெளியிடவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். பலதடவைகள் கதைக்கும் போது அந்த ஆர்வமும் வெளிப்படும். இயற்கை அழிவுகளாலும், யுத்தம்,இடப்பெயர்வுகளாலும் அழிந்துபோன செல்வங்களில் ஒரு படைப்பாளனுக்கு தன்படைப்புக்களின் இழப்பே அதிக வலிதரும் நிகழ்வாகும்.பல படைப்புக்கள் கிடைக்கவில்லை என்ற சோகமும் உண்டு.
இயல்பாகவே இரக்கமனம் கொண்டவர் தமிழ்ப்பிரியா.ஒவ்வொரு காலகட்டத்திலும் தாயகத்தில் ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்காக தன்னாலான உதவிகளைச் செய்வதில் முன்னின்றார்.பாரிஸ் நகரில் நடைபெறும் நண்பர்களின் நூல்வெளியீடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பு ஏற்பட்டது.தொலைபேசியிலும் அவ்வப்போது உலகநடப்புக்கள்,இலக்கியம்,தாயகம் பற்றிய திட்டங்கள் எல்லாம் பேசுவோம்.
தான் காணும் அனுபவங்களைக் கதைகளாக்கி அவற்றின் மூலம் தீர்வுகள் சொல்லிவிடலாமா என்றும் சிந்திப்பார்.நம்பிக்கையுடன் விரக்தி,வாழ்வின் மீதான நோவுகள்,யுத்தம் பற்றிய வலிகள் அவரின் பேச்சில் எப்போதும் இருக்கும்..நம்மைப் போல ஊர் போய்விடவேண்டும் என்கிற ஆதங்கம் அவரிடமும் இருந்தது.தந்து ஊருக்கு (ஏழாலை மேற்கு)ஏதாவது செய்யவேண்டும் என்றும்,படைப்பாளருக்கான தனது பங்களிப்பைச் செய்யவேண்டும் என்பதிலான உறுதியையும் காணமுடிந்தது.என்னுடனோ,எனது துணைவியாருடனோ பேசும்போது அவரிடமிருந்து வரும் கனிவு,இதம்,சுவாரஸ்யம் அதனூடே தெளிவான வார்த்தைகள் இன்னும் காதில் ஒலிக்கிறது. அவரது இரண்டு சிறுகதைகளின் தொகுப்பிற்கு அறிமுகம்,விமர்சனம் எழுதியிருந்தேன்.அவற்றை மீள எடுத்து வாசிக்கவேண்டும் போலிருந்தது. காலம் கொடுமையானது..தன்பாட்டில் கடந்துபோய்விடுகிறது.ஆனால் நமக்குத் தான் தீராத சோகத்தையும் தந்துவிட்டுப் போகிறது.
நாட்கள் நகர,நகர கனவுகளின் மீதான நீட்சி அதிகரித்தவண்ணமே இருக்கும். மாறாக வாழ்க்கை தன் கட்டுப்பாட்டிலேயே நம்மை வைத்திருக்க முனைகிறது.இங்குதான் நமக்கான வாழ்வுக்கும்,கனவுக்குமான போட்டியே.சில சமயங்களில் கனவு வென்றுவிடுகிறது. பலதடவைகள் வாழ்க்கை வென்றுவிடுக்கிறது.கனவுகள் அந்தரத்திலேயே எப்போதும் போலத் தொங்கிவிடுகிறது.எந்த விக்கிரமாதித்தனும் மீள மீட்டுவரமுடியாதபடி எல்லாம் முடிந்திருக்கும். இங்கும் நம் கண்முன்னால் நிறையக் கனவுகளுடன் வாழ்ந்த ஒரு கனிவான மனுஷியை (07/05/2020)இழந்திருக்கிறோம் என்று நினைக்கும் போது காலம் கொடியது என்றே தோன்றுகிறது. அவரின் முழுத் தொகுப்புக்களையும் (கவிதை,சிறுகதை,குறுநாவல்கள்) கொண்டுவரல் வேண்டும். அதுவே அவருக்காக நாம் செய்யும் பணியாகும்.ஒரு தலைமுறை எழுத்தாளரை நாம் மறந்துவிடுதல் தகாது.பலரை இழந்துவிட்டோம். இரங்கல் அல்லது பிரார்த்தனை என்ற வட்டத்திற்குள் நின்றுவிடாத நட்பின் எல்லைகள் நமக்குள் விரிவடைய வேண்டும். அப்போதுதான் நம் சமூகத்தில் வாழ்ந்த மனித சிந்தனையாளர்களை,படைப்பாளர்களை மனதிலிருத்தமுடியும். காலத்திற்காக நாம் காத்திருக்காது காலம் கடந்தும் நினைவுகொள்வதற்கான பணிகளைச் செயல்படுத்துவோமெனில் தமிழ்பிரியா போன்றவர்களுக்கு நாம் செய்யும் சிறப்பான அஞ்சலியாகும்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
07/05/2020
< Prev | Next > |
---|