நவஜோதி யோகரட்னம்திருவள்ளுவர், முப்பானூல், உத்தரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, பொதுமறை என்று பல்வேறு நாமங்கள்  சூட்டிப் போற்றப்படுகின்றது திருக்குறள். மனிதகுலம் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் எந்தச் சூழலில் வாழ்க்கை முறையை மெற்கொண்டிருந்தாலும் அங்கெல்லாம் ஒளியைப் பாய்ச்சி வாழ்வு சிறந்து விளங்க வழிகாட்டும் நூல் திருக்குறளாகும்.   இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்துக் குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால். இன்பத்துப்பால் என்று மூன்று பிரிவுகளாக வருகின்றன.  

இலக்கிய அழகு பொலிய அமைந்த மொழிநடை, காலந்தோறும் புத்தம் புதிய சிந்தiயைத் தூண்டும் அருள்வாக்கு ஆகியவை திருக்குறளின் தனித்தன்மையின் வெளிப்பாடாகத் திகழ்கின்றது. சாதி சமயங்களால் வேறுபட்டவர்கள் அனைவரும் ஏற்கும் கருத்துப் பொதுமை, கற்பவர் நெஞ்சில் ஆழப்பதியும் வண்ணம் எடுத்துரைக்கும் வெளிப்பாடும் இத்திருக்குறளின் அற்புத வெளிப்பாடு.  

அந்த வகையில் முதற் பாவலர் என்றழைக்கப்படுகின்ற திருவள்ளுவரின் சில திருக்குறள்களை முன்வைத்துப் பேசலாம் என்று நம்புகிறேன். அறத்தை வலியுறுத்துகின்ற அதிகாரத்தை எடுத்துக்கொண்டால்  

‘மனதுக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்  
ஆகுல நீர பிற’  (34)  

ஒருவன் தான் மனதில் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அதுவே அறம் ஆகும். மற்றவையெல்லாம் ஆரவாரத் தன்மை உடையவையாகும் என்று மிகச் சிறப்பாக எமது வாழ்வில் மனதளவில் நாம் குற்றமற்றவர்களாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். மனதில் நாம் பல குற்றங்களுக்குக் காரணமாகிக் கொண்டும் குற்றம் இழைத்துக்கொண்டும் மற்றவர்களுக்கு எப்படி நாம் நன்மை புரிய முடியும் என்பதைச் சிந்திக்க வைக்கும் திருக்குறளாகும்.

அடுத்து  பொறையுடைமை 16. நாங்கள் பார்க்கும்போது சிலரது சில வார்த்தைகளைக் கேட்டவுடனே, நாம் சினம் கொள்வது ஏன்? எளிதில் கோபம் கொள்ளும் குணம் நம்மிடம் இருப்பதனால்தான் எளிதில் கோபம் எழக் காரணம். நாம் நம்மை அதிகம் விரும்புவதால்தான் மண், பெண், பொன் முதலான எல்லாப் பற்றுகளையும் போல் இதுவும் ஒரு பற்றுத்தான். பற்றுப் படிந்த பாத்திரம் தூய்மை இழக்கிறது. பற்று என்பதும் ஒருவகை அழுக்குதான். சுய பற்றாகிய அவ்வழுக்கைக் கழுவக்கூடிய தண்ணீர்தான் பொறுமை. சுய பற்று இல்லாதவனின் மனம் தூய்மையாக இருக்கிறது. துறவியின் தூய்மை தன்னைப் பற்றியது. இல்லறவாசியின் பொறுமை பிறர் நன்மை கருதுவது. ஏனவே அது துறவியின் தூய்மையைவிடச் சிறந்தது. உறுத்துகின்ற சுடு சொற்களைப் பேசுபவன் உயிரோடு இருப்பினும் இறந்தவனே! அவற்றைப் பொறுத்துக் கொள்பவன் உலகப் பற்றுக்களை துறவாதிருப்பினும், யாவும் துறந்த துறவியினும் தூய்மையானவன் ஆவான்.  

‘துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்  
இன்னாச் சொல் நோற்கிற் பவர்’  (159)  

ஓழுக்க வரம்பைக் கடந்தவரின் வாயில் இருந்து வரும் வன் சொற்களை அதாவது தீயவர்களின் வெறுக்கத்தக்க சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், பற்றுக்களை விட்ட துறவிய ரினும் தூய்மை உடையவராவார் என்கின்றார் திருவள்ளுவர்.  

62 ஆள்வினை உடைமை என்ற அதிகாரத்தில் காணப்படும்  

‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்  
மெய்வருத்தக் கூலி தரும்’ (619)  

ஒருவன் முயன்ற தொழில் ஊழ்வயத்தால் கருதிய பயனைக் கொடுக்கவில்லை ஆயினும், அம்முயற்சி உடம்பை வருத்திய அளவுக்குக் கூலி தரும் என விளங்க வைக்கிறது இந்தக் குறள். இன்றைய கொரோனாக் காலத்துக்கும் மிகப் பொருத்தமாகவே நாம் இதனை எடுத்துக் கொள்ளலாம். நாம் செய்கின்ற எத்தொழிலாக இருப்பினும் பயன் தராவிட்டாலும் மனம் சோராது நாம் உற்சாகமாக நல்ல சிந்தனைகளோடு முயற்சி செய்த வண்ணமே இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. உற்சாகமாக உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் தற்கால வாழ்விலும் உற்சாகம் ஏற்படுத்தி அதற்குப்பயன் நிட்சயம் கிடைக்கும்; என்ற உணர்வை மக்களுக்கு அள்ளித் தெளிக்கின்றது இந்தக் குறள்.  

14 ஒழுக்கமுடைமை அதிகாரத்தைப் பார்ப்போயோனால்  
‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்  

என்றும் இடும்பை தரும்’ (138)  என்ற திருக்குளில்; நல்லொழுக்கம் ஆனது நன்மைக்குக் காரணமாகும். தீயொழுக்கம் எப்பொழுதும் துன்பத்தைக் கொடுக்கும் என்பதை அக்குறளின் மூலம் எமது வாழ்வியலை அவதானிக்க முடிகின்றது. நாம் எவ்வளவுதான் பிறருக்கு நன்மைகளைச் செய்து கொண்டிருந்தாலும் நாம் ஒழுக்கம் அற்றவர்களாக இருந்தால் அவை எதுவித பயனையும் அளிக்காது. அவற்றைப் பிறர் வேறு கண்ணோடுதான் உற்று நோக்குவார்கள். எனவே நம் வாழ்நாளில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்று விழிப்படையச் செய்கிறது. நாம் ஒழுக்கம் அற்றவர்களாக வாழ்ந்தால் அவை எப்போதும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டேயியிருக்கும் எனவே நாம் ஒழுக்கமுடையவர்களாக வாழ்வை முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறது இந்தக்குறள்.  

அடுத்து பொருட்பாலில் பெரியாரைப் பிழையாமை(90) என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர்  
‘குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு  

நின்றன்னார் மாய்வர் நிலத்து’  (898) என்ற குறளினூடாக பெருமையுடையவர்களை மனங்கள் தூய்மையானதாக இருக்கவேண்டும் என்பதைச் சுட்டும் விதம் அலாதியாக இருக்கின்றது. மலைபோன்ற பெருமையுடையவர், ஒருவனை அழிந்துபோக வேண்டுமென்று எண்ணினால். அவன் இவ்வுலகில் எவ்வளவு நிலைபெற்ற செல்வமுடையவன் ஆயினும் தன் குடும்பத்தோடு அழிந்து விடுவான் என்று பயமுறுத்துகிறார். எனவே எமது வாழ்வில் நாம் மற்றவர்களை மனதாலும் சாபமிடக்கூடாது என்பதை சுட்டிக் காட்டுகின்றார். அது அவர்களையே அழித்துவிடும் என்று உணர்த்துகிறார். ஏனவே நாம் இவற்றை எம் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற சமூக அறிவியலைப் புகட்டுகின்றார்.  

அடுத்து நாம் அறத்துப்பாலில் அதிகாரம் ஒப்புரவறிதலை எடுத்துக் நோக்கினால்:   

‘பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்  
நயனுடை யான்கண் படின்’ 216 என்கிறார் முதற்பாவலர்  

பிறருக்கு உதவி செய்பவனிடத்தில் செல்வம் உண்டாகுமானால், அது ஊரின் நடுவே உள்ள பயன் மிக்க மரத்தில் பழம் பழுத்தது போன்றதாகும். எமது வாழ்நாளில் சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் பின் நிற்பவர்கள். தாம் தமது குடும்பம் என்று சமூத்தோடு ஒட்டாது தமக்கென்றே ஒரு வாழ்வைப் பிரதிபலித்து விட்டுச் செல்கிறார்கள். அதில் எவ்வகையான மகிழ்ச்சியைக் காணுகின்றார்களோ தெரியவில்லை. அதன் அர்த்தமும் புரிவதில்லை. அதில் காணும் இன்பம் எத்தகையது என்று அவர்களுக்குத் தான் தெரியும் என்று எண்ணத்தோன்றுகின்றது. இக்குறள் மூலம் மாதானுபங்கி  (திருவள்ளுவரின் மறு பெயர்) அழகாக உதவி செய்பவர்களைப் பயன் மிக்க மரத்தில் குலுங்கிக் காட்சி தரும் அழகிய பழங்களாக மனதைக் குளிரச் செய்கின்றார்.  

அழுக்காறாமை 17  மனிதன் விரும்பிப் பெறுவது பேறு எனப் பேர் பெற்றது. கல்வி, செல்வம் முதலான பேறுகளிளெல்லாம் சிறந்தபேறு பொறாமை எனும் நோய் இல்லாமை. கொரோனா (கொள்ளை) நோய் பரவும் ஊரில் அந்த நோயால் பீடிக்கப்படாதவன் பெரும்பேறு பெற்றவன். மற்றவரின் வாழ்வைக் கண்டு  

சகிக்காமலே மாய்ந்து போவோர் வாழும் உலகில், பொறாமை நோய் பீடிக்கப்படாதவன் பெரும்பேறு பெற்றவன். பிறர் செய்யும் தீமையை மன்னிப்பது பொறுமை, பிறர் அடையும் நன்மையைப் பொறுத்துக்கொள்ளாமை பொறாமை. பொறாமைக்காரன் தன் எரிச்சலால், மனப்புழுக்கத்தால் மற்றவரை எப்படிக் கெடுக்கலாம் என்ற சிந்தனையிலேயே பொன்னான பொழுதையெல்லாம் கழிப்பான், அதனால் அமைதியை இழப்பான். அரிய நட்பை உறவை இழப்பான். அன்பான மனைவி மக்களின் இனிய பேச்சைக் கேட்பதை இழப்பான், உண்ண மாட்டான், உறங்கமாட்டான் அவன் அடையும் இன்னலும் இழப்பும் ஏராளமாகும். இவ்வாறு மனிதனை ஆட்டி அலைக்கும் பொறாமைக் குணம் இல்லாமல் இருப்பதே அரிய பேறு. புறத்தே பொருளைத் தேடி வைப்பது பெரிய பேறு ஆகாது அகத்தே பொறாமை அணுகாதவாறு பேணிக் காத்தலே விழுமியப் பேறு ஆகும.;  

‘விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்  
அழுக்காற்றின் அன்மை பெறின்’ 162  

எவரிடத்தும் பொறாமை கொள்ளாத் தன்மையே பெறர்க்கரிய பேறாகும். அதற்கு இணையான பெறு வெறொன்றும் இல்லை. பொறாமை இன்மை பொழியும்நன்மையே  

இல்வாழ்க்கை -5-  அதிகாரத்தில்  

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்  
தெய்வத்துள் வைக்கப்படும்’  

என்ற குறளைப் பார்ப்போமேயானால் இவ்வுலகத்தில் வாழவேண்டிய முறைப்படி வாழ்கின்றவன், மேலுலகத்திலுள்ள தேவர்களுள் ஒருவனாக மதிக்கப்படுவான். அதாவது நாம் வாழும் சமூகத்துக்கு முன்மாதிரியான நல்ல வாழ்க்கையை வாழ்ந்து காட்டுபவன் உயர்ந்தவனாகக் கணிக்கப்படுகின்றான். சமூகத்துக்கு எதாவது ஒரு வகையில் பங்களிப்பைச் செய்பவன் அவன் மறைந்த பின்னும் வணங்கப் படுகின்றான். திருக்குறளின் சிறப்புக் கருதி வணக்கத்திற்குரிய டாக்டர் ஜி.யு.போப் போன்ற பல அறிஞர்கள் அதனை பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்த்து பெருமை சேர்த்துள்ளனர். நாம் பிறந்த இவ்வுலகம் உயர்நிலை பெறவேண்டும் என்ற உணர்வால் உந்தப்பட்டுச் செயற்பட்ட சோக்ரட்டீஸ் (ளுழஉசயவநள). பிளேற்ரோ (Pடயவழ) ரூசோ (சுழரளளநயர) போன்ற  மிகச் சிறந்த சிந்தiனாயளர்களின் வழிகாட்டல்கள் பலவற்றையும் குறிப்பிடலாம். அந்த வகையில் உலக மக்களின் நல்வாழ்வு வாழ வழிகாட்டிய சிந்தiனாயளர்களில் பெருமையோடு வீற்றிருக்கும் திருவள்ளுவரைப் போற்றி வணங்குவோம்.  

22.1.2021

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.