நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்த நாள் நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு தென்னாபிரிக்க மக்கள் மட்டுமல்ல, உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் இன, மத, மொழி வேறுபாடின்றிக் கலந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். யூலை மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை அவரது பிறந்த நாளாகும். தனது மண்ணின் விடுதலைக்காக முன்னின்று உழைத்த இவர் 1994ம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார். இதற்காக இவர் 27 வருடங்கள் கடும் சிறை வாசம் செய்தார். மனிதநேயத்திற்காக உழைத்த இவர் பலராலும் போற்றப்பட்டதில் வியப்பே இல்லை.  அவர் நலமடைந்து வருவதாகத் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.  கடந்த சில வாரங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் ‘நலம் பெற வேண்டுகின்றோம்’ என்று ஊர் பெயர் தெரியாத பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் மனம் திறந்த பிரார்த்தனையைக் கடித மூலமும், பதாதைகள் மூலமும் அவருக்குத் தெரிவித்திருந்தனர். வேறு பலர் அவரை அனுமதித்திருந்த வைத்தியசாலைக்கு முன்னால் கூட்டமாக நின்று பாடல்கள் மூலம் அவர் விரைவாக நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். அவர் கடும் சுகவீனம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி வெளியே தெரிந்ததும் உலகின் பல பாகங்களில் இருந்தும் அவருக்காகப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது எதை எடுத்துக் காட்டுகின்றது? ஒரு மனிதனின் இறுதிக் காலத்தில் இத்தகைய பிரார்த்தனைகள்தான் அவன் மனிதனாக இந்த உலகத்தில் வாழ்ந்தான் என்பதை உறுதி செய்கிறது. பணம் கொடுத்து ஒருவரைப்பற்றிப் புகழாரம் பாடவைக்கும் நிகழ்ச்சிகள் பல மலிந்து விட்ட இந்தக் காலத்தில் நெல்சன் மண்டேலா போன்ற உயர்ந்த மனிதரின் வாழ்க்கைச் சரித்திரத்தை, கோடிக்கணக்கான உள்ளங்களில் எப்படி அவரால் குடிபுக முடிந்தது என்பதை நாமும் அறிந்து கொள்ளவது மிகவும் அவசியமாகும். மக்களின் உண்மையான பிரார்த்தனை வீண்போகவில்லை. அவர் நலமடைந்து வருவதாகத் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு அவரது வாழ்க்கைச் சரித்திரம் நல்லதோர் எடுத்துக் காட்டாக அமையும்.

 ‘இருமை வகை தெரிந் தீண்டறம் பூண்டார்                            
 பெருமை பிறங்கிற் றுலகு.’
 
நன்மை, தீமை என்பவற்றை ஆய்ந்தறிந்து அதன் மூலம் நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக் குரியவர்களாகிறார்கள். அவர்கள்தான் பலராலும் போற்றப்படுகின்றார்கள். அந்த வகையில் நெல்சன் மண்டேலாவிற்காக உலகெங்கும் பிரார்த்தனைகள் நடப்பதில் இருந்தே அவரது பெருமையை அறிந்து கொள்ள முடியும்.
 
தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த நெல்சன் மண்டேலா நுரையீரல் நோய் காரணமாக கடும் சுகவீனமுற்று கடந்த யூன் மாதம் 8ம் திகதி பிரிற்ரோறியாவில் உள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். அவரது நிலைமை கவலைக்குரியதாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். கடந்த ஆறுமாத காலத்தில் நாலாவது தடவையாக இவரை வைத்தியசாலையில் அனுமதித்திருக்கிறார்கள். இந்த யூலை மாதம் 18ம் திகதி அவருடைய 95வது பிறந்த தினம் வருகின்றது. அவருடைய இந்தப் பிறந்த தினத்தை விமர்சையாகக் கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு அவருடைய ஆதரவாளர்கள் பலர் காத்திருக்கின்றார்கள். 
 
வைத்தியர்கள் தங்களால் முடிந்தவரை அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்களும் நெல்சன் மண்டேலாவைச் சந்திப்பதற்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கியமான இருநாடுகளின் கறுப்பினத் தலைவர்களின் இந்தச் சந்திப்பைப் பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மண்டேலாவின் குடும்ப உறுப்பினரின் வேண்டு கோளுக்கு இணங்க அதிபர் ஒபாமா வைத்திய சாலைக்குச் சென்று மண்டேலாவைப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கின்றார். அதேபோல தென்னாபிரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜேக்கப் சூமா அவர்களும் மொஸாம்பிக் நாட்டிற்கான தனது பயணத்தையும் ரத்துச் செய்திருந்தார். பிரிற்ரோறியா வைத்திய சாலைக்குச் சென்று நெல்சன் மண்டேலாவைப் பார்வையிட்ட பின்பே அவர் இந்த முடிவிற்கு வந்துள்ளார். சுமார் 300 ஆண்டு காலமாக வெள்ளையின மக்களின் ஆட்சியின்கீழ் இருந்த தென்னாபிரிக்காவை மீட்டெடுத்த தலைவர் என்ற பெருமையைக் கொண்டவர் நெல்சன் மண்டேலா அவர்கள். 
 
53 கோடி மக்கள் வாழும் தென் ஆபிரிக்காவில் பெரும்பான்மை இனத்தவர்களாகக் கறுப்பின மக்கள் இருக்கின்றார்கள். ஜனநாயக முறைப்படி 1994ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். நெல்சன் மண்டேலாவின் கடந்த காலத்தை எடுத்துப் பார்ப்போமேயானால்,  தென்னாபிரிக்கா நாட்டில் 1918ம் ஆண்டு யூலை மாதம் 18ம் திகதி இவர் பிறந்தார். இவரது முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா என்பதாகும். மண்டேலா என்பது தாத்தாவின் பரம்பரைப் பெயராகும். இவரது தந்தையார் சோசா பழக்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தைக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். நான்கு ஆண் பிள்ளைகளும் ஒன்பது பெண்களுமாக மொத்தமாகப் பதின்மூன்று பிள்ளைகள் இருந்தனர். இவர்களில் மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர்தான் நெல்சன் மண்டேலா. இவரது ஒன்பதாவது வயதில் தந்தையார் மரணமாகிவிட்டார். நெல்சன் என்ற பெயரை இவரது ஆங்கில ஆசிரியரே இவருக்குச் சூட்டியிருந்தார். இவரது குடும்பத்தில் பள்ளிப்படிப்பு படித்த முதலாவது குடும்ப அங்கத்தவராகவும் இவரே இருந்தார். கல்வி அறிவைப் பெறுவதில் அதிக நாட்டம் கொண்ட இவர் தென்னாபிரிக்கா, லண்டன் போன்ற இடங்களில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். பகுதிநேர சட்டக்கல்வி பயின்ற இவர் தோட்ட முகவராகவும், தங்கச் சுரங்கத்தில் பாதுகாப்பு அதிகாரியாகவும் கடமையாற்றினார்.
 
அறப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்த இவர் அது பலன் தராமல்போகவே, பின்னாளில் ஆயுதப் போராளியாக மாறியிருந்தார். 1956ல் இவர் கைது செய்யப்பட்டு ஐந்து வருட சிறைத்தண்டனையின்பின் 1961ல் விடுதலை செய்யப்பட்டார். கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய ஆபிரிக்க தேசிய காங்கிரசுக்குத் தலைமை தாங்கியதால் மண்டேலா மீது குற்றம் சாட்டப்பட்டு 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் கைது செய்யப்பட்டு 1964ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு 27 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ராபன் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டபோது அங்கே பல கஸ்டங்களை அனுபவித்தார். சிறையில் இருக்கும்போது நிலச்சுரங்கத்தில் வேலை செய்யப் பணிக்கப்பட்டதால் தூசு படிந்த காற்றைச் சுவாசிக்க வேண்டி வந்தது. இதனால் அவரது நுரையீரல் பாதிப்புக்குள்ளானது. உலக நாடுகளின் முயற்சியால், 1990ல் அவரது 71வது வயதில் விடுதலை செய்யப்பட்டார். நோமாதாம் சங்கர் என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார். அரசியலில் அதிகமாக ஈடுபாடு கொண்டதால் அவருக்கும் மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. 1958ல் வின்னி மடிகிலேனா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். வின்னி தனது கணவரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவராக இருந்தார். மண்டேலாவிற்கு முதல் மனைவி மூலம் மூன்று பிள்ளைகளும், இரண்டாவது மனைவி மூலம் இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். உலக சமாதானத்திற்குப் பாடுபட்ட மண்டேலாவிற்கு சிறையில் இருக்கும்போதே, 1980ல் நேரு சமாதான விருது கிடைத்தது. 1984ல் புரூசேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து அவரைக் கௌரவித்தது. 1990 இந்தியாவின் பாரதரத்தனா விருதும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து 1993ல் நோபல் பரிசு கிடைத்தது.  தொடர்ந்து சமாதானத்திற்கான 2001ம் ஆண்டு மகாத்மாகாந்தி சர்வதேச விருதும் இவருக்குக் கிடைத்தது. 2008ம் ஆண்டு இவர் பொதுவாழ்வில் இருந்து விலகியிருந்தார். 
 
உலகெங்கும் மண்டேலாலைப் பாராட்டியபோது, ரொறன்ரோவின் ரையர்சன் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கியது மட்டுமல்ல, ஒரு பாடசாலையின் பெயரையும் மண்டேலா பார்க் பப்பிளிக் ஸ்கூல் என்று மாற்றியிருந்தது. அமெரிக்காவின் சிவிலியன் விருதான பிரசிடென்சியல் மெடல் ஆப் பிறீடம் என்ற உயர் விருது இவருக்குக் கிடைத்திருக்கின்றது. எந்த ஒரு நாட்டுத் தலைவருக்கும் கிடைக்காத வரவேற்பும், கௌரவமும் நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கும் கிடைத்திருக்கிறது. ‘உலகின் நாயகன்’ என்று நெல்சன் மண்டேலாவை அமெரிக்க அதிபர் ஒபாமாவே புகழாரம் சூடியிருக்கின்றார். நல்ல மனிதர்கள் நீண்டநாள் வாழவேண்டும், அந்த வகையில் நெல்சன் மண்டேலாவையும் நீடூழி வாழ்க என நாமும் வாழ்த்துவோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.