மீள்பிரசுரம்: “டேவிட் ஐயா எங்கே”

Friday, 14 February 2014 23:19 - மீராபாரதி - அரசியல்
Print

இந்தமுறை இந்தியப் பயணத்தின் போது டேவிட் ஐயாவை சந்திப்பது என தீர்மானித்திருந்தோம். எனது அரசியலும் அவர் மீதான மதிப்பும் நான் அவரை சந்திப்பதற்கான காரணமாகும். ஆனால் துணைவியாருக்கு தூரத்துச் சொந்தம். இருவரது பூர்வீகமும் கரம்பன். ஆகவே அவர் எங்கிருக்கின்றார் என்பதை அவரை முன்பு நேர்காணல் கண்ட அருள் எழிலன் மற்றும் சயந்தன் ஆகியோர் ஊடாக கேட்டு அறிந்து கொண்டோம். டேவிட் ஐயா அவர்கள் அண்ணா நகரில் இருக்கின்றார் எனவும் அங்கே எங்கிருக்கின்றார் என்ற தகவலையும் அருள் ஏழிலன் குறிப்பிட்டார். நன்றி அருள் எழிலன். குறிப்பிட்ட அந்த இடத்திற்கு பாண்டிபாஜாரிலிருந்து பயணத்தை ஆட்டோவில் ஆரம்பித்தோம். அவர் குறிப்பிட்ட இடத்தில் இருந்த தேநீர் கடை முடியிருந்தது. மீண்டும் அவருடன் தொடர்பு கொண்டபோது முன்னால் உள்ள பார்மசியில் மருந்துக் கடையில் கேட்கச் சொன்னார். அவர்களுக்கு தெரியாது என்றார்கள். மீண்டும் புதிய குறிப்பு ஒன்றைக் கூறி பாடசாலைக்கு அருகிலுள்ள விட்டிற்குள் சென்று விசாரிக்க கூறினார். அதேநேரம் வீதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமும் விசாரித்தோம்… “இந்த இடத்தில் தாத்தா ஒருவர் இருக்கின்றாரா.. நீண்ட வெள்ளைத் தாடியுடன்… அவர் ஆங்கில வகுப்புகளும் எடுப்பார்” எனக் கேட்டோம்.

அதிலிருந்த ஒரு சிறுவன்… “அந்தக் கிழவனா… அவர் போய்விட்டார்…” என்றான்… நீங்கள் அவரிடம் ஆங்கிலம் படித்தனீர்களா… அவர் எங்கு போய்விட்டார்” எனக் கேட்டோம்.

“அந்தாளுட்ட யார் படிக்கிறது… அவருக்கு ஆங்கிலம் தெரியுமா” என நக்கலாக கேட்டான்.

அந்த சிறுவனுக்கு அவரிடம் விருப்பமில்லை என்பது தெரிந்த்து… இன்னுமொரு சிறுவன் “டேய் உங்கட வீட்டில் இருந்த தாத்தாவாக இருக்கவேண்டும்…. அந்த வீட்டில் கேளுங்கள்” என ஒரு வீட்டை காட்டினான்… அந்த வீட்டில் போய்க் கேட்டோம்… அங்கிருந்த அந்த சிறுவனின் தாய்…. “ஆம் இங்கு தான் மேல் மாடியில் இருந்தவர்..  அவர் சும்மா சும்மா சத்தம் போட்டுக் கொண்டிருப்பார்.. எங்கட குழந்தைகள் சத்தம் போட முடியாது… விளையாட முடியாது… பெருநாளுக்கு பட்டாசு வெடிக்க முடியாது… சின்னப் பிள்ளைகள் விளையாட வேண்டும் தானே.. ஆனால் அவர் எல்லாவற்றக்கும் கத்துவார்… வீட்டை சுத்தமாக வைத்திருக்க மாட்டார்… ஒரே பத்திரிகைகளும் புத்தகங்களுமாக அறை நிறைந்திருக்கும்….” என்றார் அந்த வீட்டுப் பெண்…

எமக்கு இதைக் கேட்க மிகவும் கவலையாகப் போய்விட்டது… வயது போனவுடன் முதியவர்களும் குழந்தைகள் ஆகிவிடுகின்றார்கள்…  “இப்ப அவர் எங்கே இருக்கின்றார்” என்றோம். “அவரது சொந்தக்காரர்கள் பக்கத்தில் இருந்தார்கள். அவர்களிடம் நாம் முறையிட அவரைக் கொண்டுபோய் புழல் அகதிகள் முகாமில் விட்டுவிட்டார்கள்” என்றார்.

“சொந்தக்காரர்கள் எங்கே இருக்கின்றார்கள்” எனக் கேட்க… “எங்களுக்குத் தெரியாது… இப்படியே போய் லேப்டில கட் பண்ணி ரயிட்டில திரும்பினா டீ சொப்ப தாண்ட ஒரு பேப்பர் சொப் வரும்… அவகட்ட கேளுங்க” என்றார்…   பத்திரிகை கடையில் போய் நாம் விசாரித்தபோது சொந்தக்காரர்களும் வேறு இடத்திற்கு போய்விட்டதாக கூறினார்கள். ஆனால் அவர்களும் “அவரை புழல் அகதிகள் முகாமில் கொண்டு போய் விட்டதாக சொன்னங்க” என ஒரு தகவலை உறுதிசெய்தார்.  எனக்கு போய் பார்க்க விருப்பமிருந்தபோதும் துணைவருக்கு மதிய வேளையில் வெய்யிலில் சுற்றுவது சரிவராது என மனதுக்குள் நினைத்துக் கொண்டு,  “சரி வேறு என்ன செய்வது. இனி புழல் முகாமிற்கு போக முடியாது… அறைக்குத் திரும்புவோம் என நான் சொன்னேன்.”

துணைவருக்கு இரக்கம் குணம் கொஞ்சம் அதிகம். டேவிட் ஐயாவை அவ்வாறு தனியே அகதிகள் முகாமில் விட்டது அவருக்கு கவலையை ஏற்படுத்திவிட்டது. “ இல்ல… போய் பார்ப்போம்” என்றார். எனக்கு அவர் போவோம் என்றது ஆச்சரியமாக இருந்தது. “வெய்யிலில் அலைய வேண்டிவரும்… கஸ்டமில்லையா?” எனக் கேட்டேன். “இல்லை” எனக் கூறிவிட்டு “அவரைப் போல எதிர்காலத்தில் நீ இருக்கும் பொழுது உன்னையும் ஒரு பெண் இப்படி வந்து பார்க்கவேண்டுமல்லவா” என்றார். பொது நலத்திலும் ஒரு சுயநலம் என நினைத்துக் கொண்டு…..

“அப்ப நானும் வாழ்க்கையில் தோற்றுப் போய்…அநாதையாக இருக்கப் போகிறேன் என முடிவு செய்து விட்டாயா” என்றேன்.

“இப்படி அலைந்து கொண்டிருந்தால் வேறு என்ன நடக்கும்” என்றார்.

இந்த உரையாடல் இப்ப முடிவுக்கு வராது என்பதால் நிறுத்திவிட்டோம். நம்முடன் சுற்றிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஓட்டுனரிடம் இங்கிருந்து புழல் முகாமிற்குப் போவதற்கு எவ்வளவு முடியும் எனக் கேட்டோம். ஐநூறு ரூபாய்கள் என்றார். பேரூந்தில் செல்ல குறைய பணம் முடியும் என்றும் ஒரு மணித்தியாலங்கள் எடுக்கும் எனக் கூறினார். நாம் பேரூந்தில் செல்ல முடிவெடுத்தோம். ஓட்டுனருக்கு நாம் இப்படி ஒரு உறவினரை தேடியலைவதைப் பார்த்து நம் மீது கரிசனை வந்துவிட்டது. அவரே அண்ணா நகர் பேரூந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று எந்த இலக்கம் புழலுக்கு செல்லும் என விசாரித்து அதற்குரிய இடத்தில் எங்களை நிற்க சொல்லிவிட்டு சென்றார்.

பேரூந்து வர அதில் ஏறி நம்மை புழலில் இறக்கவிடக் கூறினோம். அவர்களும் இறக்கிவிட்டார்கள். அங்கிருந்து மூச்சக்கர வண்டி பிடித்து புழலுக்கு சென்றோம்.

புழல் வாசலுக்கு சென்ற போது “வயதான கிழவர் ஒருவர் “யாரைப் பார்க்க வந்தனிங்க” என்று யாழ் பேச்சு வழக்கில் கேட்டார். நாம் விபரங்களை கூறினோம். “டேவிட் ஐயா என்ற ஒருவரை பார்க்க வந்தனாங்க… அண்ணா நகரில் நீண்ட காலமாக இருந்தவர். கடந்த மாதம் தான் அவரது உறவினர்கள் அவரை இங்கு கொண்டு வந்து விட்டுச் சென்றனர் என அறிந்தோம். நீண்ட வெண்ணிற தாடி கொண்ட வயதான ஒருவர்.” என்றோம்.

“அப்படி ஒருவரும் எனக்குத் தெரிய இங்கில்லை. நாம் இங்கு முப்பது வருடங்கள் இருக்கின்றோம். சரி வாருங்கள் அந்தக் கடையிலுள்ளவரிடம் கேட்போம்” என்றார். அந்தக் கடையை நோக்கி நடந்தோம். போகின்ற வழியில் பத்மநாபாவின் படத்துடன் ஒரு நூலகம் ஒன்று மூடியிருந்தது. அதற்கு முன்னால் சிறு ஒழுங்கை போல ஒன்று சென்றது. மிகவும் சுத்தமாக இருந்தது. அதன் இரு பக்கங்களிலும் சிறுசிறு கொட்டில்கள் தகரங்கால் போடப்பட்டிருந்தன.  .இப்படி பல சிறு குச்சு ஒழுங்கைகள் இருந்தன.

இவற்றைக் கடந்து சென்றபோது ஒரு கடை வந்தது. அக் கடையிலுள்ள ஒரு பெண்ணிடம் நம்மை அழைந்து வந்த கிழவர் நமது குறிப்புகளைக் கூறிக் கேட்டார். அவர் இன்று புழல் முகாம் நிர்வாகம் முடியிருக்கின்றது என அருகிலிருந்த முடிய ஒரு அலுவலகத்தைக் காட்டினார். அவர்களிடம் விபரங்கள் இருக்கும். ஆனால் நீங்கள் குறிப்பிடுகின்ற மாதிரி ஒருவரும் இங்கு இல்லை. ஒரு மாதத்ததிற்குள் வரவுமில்லை.  ஆனால் டேவிட் ஐயா என்று ஒருவர் இருந்தார். அவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்றார். நாம் உடனடியாக மறுத்து “இல்லை இல்லை அவர் இறக்கவில்லை… கடந்த மாதம் மட்டுமல்ல கடந்த வருடம் கூட ஆனந்த விகடனில் அவரது நேர்காணல் வந்திருந்தது.” எனக் கூறினோம். “அப்படியா.. அப்ப எங்களுக்குத் தெரியாது” என்றனர்.  ஆனால் முகாமினுள் சென்று விசாரியுங்கள். வேறு யாருக்காவது தெரிந்திருக்கலாம் என்றனர்.

நாமும் உள்ளே நடந்து சென்றோம். பிரதான ஒழுங்கையிலிருந்து சிறு சிறு நடைபாதைகள் பல சென்றன. அதன் இரு மருங்கிலும் தகரங்களால் மறைக்கப்பட்ட பல கொட்டில்கள் வரிசைகளாக இருந்தன. அந்த ஒழுங்கையால் வந்த ஒருவரிடம் நமது விபரங்களைக் கூறி கேட்டோம். அவர் “தம்பி அந்த தாடி வளர்த்த ஐயா ஒருவர் இருக்கிறார் அல்லவா. தேவாரம் எல்லாம் பாடுவார். அவரது வீட்டைக் காட்டு” என அருகிலிருந்த ஒரு சிறுவனிடம் கூறினார். நமக்கு வந்த நம்பிக்கை மகிழ்ச்சி உடனடியாக பறந்தது. “அவராக இருக்காது. அவர் ஒரு கிருஸ்தவர்” என்றோம். “அப்படியா” என்றவர்கள் “அப்ப வாங்கோ இன்னுமொருவரின் வீட்டுக்கு அவ்வாறு ஒருவர் அடிக்கடி இங்கு ஒருவரிடம் வருகின்றவர். அவரிடம் விசாரிப்போம்” எனக் கூறி கூட்டிச் சென்றனர். அவர்கள் ஒரு பெண்ணிடம் நமது விபரங்களைக் கூறி விசாரித்தனர். ஒரு டேவிட் ஐயா இருந்தவர். அவர் ஐந்து வருடங்களுக்கு முதல் இறந்துவிட்டார் என முதல் கூறிய விடயத்தையே இவரும் கூறினார். இந்த முகாமில் 375 குடும்பங்கள் ;இருக்கின்றன. மொத்தமாக நாலாயிரம் பேரளவில் இங்கு இருக்கின்றோம் என்றார். தனக்கு அனைவரையும் தெரியும் என்றார். நாம் நம்பிக்கை இழந்து அவர்களிடமிருந்து விடைபெற்று வந்த வழியே மீண்டும் சென்றோம்.

முதல் சந்தித்த கடையடியில் இப்பொழுது பலர் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர். “யார் டேவிட் ஐயா” என்ற விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது முதல் மூடியிருந்த நூலகத்திலிருந்து சிலர் வந்தனர். இவர்கள் முன்னால் இயக்கமாக இருக்க வேண்டும் என மனதில் நினைத்தோம். ஆகவே இவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில் “முன்பு காந்தியத்தில் இருந்தவர். பின் புளொட் இயக்கத்துடன் இணைந்தவர் எனக் கைது செய்யப்பட்டவர். மட்டக்களப்பு சிறை உடைப்பில் தப்பிவந்தவர்.” என மேலும் சில தகவல்களைத் தெரிவித்தோம்.

அவர்களும். “டேவிட் ஐயாவா… யாரது” என்றார்கள். டேவிட் ஐயாவிடம் கல்வி இருக்கின்றது. தகமை இருக்கின்றது. ஆனால் அன்று இருந்த பேரும் புகழும் பணமும் இன்று இல்லை. ஆகவே இன்று அவரை யாரும் தேடுவார் இல்லைபோல… துணைவியாருக்கு டேவிட் ஐயாவை பார்ப்பது மட்டும்மல்ல அவரிடம் அவரது வாழ்க்கை தொடர்பாக பல கேள்விகள் கேட்க வேண்டும் என்று இருந்தார். அந்தக் கேள்விகள் கேட்கப்படாமலே போய்விட்டன…. இப்பொழுது நமது கேள்வி…

நன்றி: http://meerabharathy.wordpress.com

Last Updated on Friday, 14 February 2014 23:51