ஊடக அறிக்கை- தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் (கனடா) : 23 ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எமது பாராட்டுதல்கள்

Wednesday, 26 February 2014 00:14 - அனுப்பியவர்: நக்கீரன் - அரசியல்
Print

ஊடக அறிக்கை- தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் (கனடா) : 23 ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எமது பாராட்டுதல்கள்பெப்ரவரி 18,2014- இராஜிவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த  முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறோம். சென்ற மாதம்  உச்சநீதி மன்றம்  வீரப்பன் கூட்டாளிகள் 15 பேர் சமர்ப்பித்த  கருணைமனு மீது முடிவெடுக்க ஏற்பட்ட தாமதம், அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டமைனயாகக் குறைக்க ஒரு முகாந்திரமாகக் கருதலாம் என்று கூறி அவர்களுக்கு வழங்கபட்டிருந்த மரண தண்டனையைக் குறைத்திருந்தது. அதே  போல  இராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மனுவையும் விசாரித்த தலைமை நீதியரசர்கள் சதாசிவம்,  இரஞ்சன் கோகாய் மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு  இந்த வரலாற்றுப் புகழ்படைத்த  தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பில் இந்த வழக்கில் மூவரும் 23 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தங்கள் வாழ்க்கையை கழித்திருக்கிறார்கள் என்பதால்  குற்றவியல் சட்டத்தின் 432 மற்றும் 433 ஏ  பிரிவுகளின் அடிப்படையில், மாநில அரசு தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும் சட்ட அடிப்படையிலும்  இவர்களுடைய சிறை தண்டனை காலத்தை பற்றிய முடிவை எடுக்கலாம் என்று தலைமை நீதிபதி சதாசிவம் கூறி இருந்தார்.

ஏனைய  வழக்குகள் போல் இல்லாமல் இது தேசத்திற்கு துரோகம் விளைவிக்க கூடிய பயங்கரவாத செயல் என்பதால்   குற்றவாளிகள் விடுதலை செய்யக் கூடாது என்ற மத்திய அரசின் வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தை உச்ச நீதிமன்றம் புறம்தள்ளியுள்ளது.

இந்தத் தீர்ப்பை அடுத்து தமிழக அமைச்சரவையைக் கூட்டிய  முதல்வர் ஜெயலலிதா முருகள், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர்  மட்டுமின்றி 23 ஆண்டுகள் சிறையில்  ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி,  றொபேட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக  சட்ட சபையில் அறிவித்துள்ளார்.  மேலும், அதற்கான ஒப்புதலை மத்திய உள்துறை அமைச்சு 3 நாட்களில் தராத பட்சத்தில்  குற்றவியல்  சட்டப் பிரிவுகள் 432, 433 ஏ வழங்கும் அதிகாரத்தின் கீழ் தமிழக அரசு அவர்களை விடுதலை செய்யும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்த துணிச்சலான அறிவிப்பை  நாம் வரவேற்கிறோம்.  இவர்களது விடுதலைக்குக் குரல் கொடுத்த  கட்சிகளுக்கும்  அமைப்புக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் எமது நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க  இந்த வழக்கில் தோன்றி திறமையாக வாதாடிய  முன்னணி  வழக்கறிஞர்  இராம்ஜெத் மாலினி அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Thamil Creative Writers Association (TCWA)
56 Littles Road
Scarborough, ON
M1B 5C5
416-281-1165

அனுப்பியவர்: நக்கீரன்

Last Updated on Wednesday, 26 February 2014 00:31