இரு பிசாசுகளில் அபாயம் குறைந்த பிசாசைத் தேர்ந்தெடுத்தலும், இலங்கை ஜனாதிபதித்தேர்தலும்

Tuesday, 06 January 2015 19:33 - பதிவுகள் - அரசியல்
Print

இரு பிசாசுகளில் அபாயம் குறைந்த பிசாசைத் தேர்ந்தெடுத்தலும், இலங்கை ஜனாதிபதித்தேர்தலும்இரு பிசாசுகளில் அபாயம் குறைந்த பிசாசைத் தேர்ந்தெடுத்தல் பற்றி ஆங்கிலத்திலோர் வார்த்தைப்பிரயோகமுள்ளது. அது "Lesser of Two Evils". சர்வதேச அரசியலில் , உளநாட்டு அரசியலில் நாடுகள் இக்கொள்கையினைப் பயன்படுத்துவதொன்றும் அதிசயமானதொன்றல்ல. உலகம் கம்யூனிசம், முதலாளித்துவமென்று இரு கூடாரங்களாகப் பிளவுண்டிருந்த காலகட்டத்தில் ஜனநாயகத்தைக் கடைப்பிடிப்பதாகத் தம்பட்டமடிக்கும் மேற்கு நாடுகள் தாராளமாகவே சர்வாதிகாரிகளை, மன்னர்களை ஆதரித்தன தாம் ஆதரித்த நாடுகளில் அவர்கள் குறிப்பிடும் ஜனநாயகம் குழிதோண்டிப்புதைக்கப்பட்டிருந்தன என்பதை அறிந்திருந்த நிலையிலும் அவை ஆதரித்தன. . சீனாவும், ருஷ்யாவும் மார்க்சியத்தை நம்புமிரு நாடுகள். ஆனால் எழுபதுகளில் சீனாவோ தத்துவார்த்தரீதியில் எதிரான அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணத்தொடங்கியது. கலாச்சாரப்புரட்சியாலும், சோவியத்துடனான பிளவினாலும் தனது நலன்களுக்காக அது அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணத்தொடங்கியது. இதற்காக அவர்கள் மேற்படி இரு பிசாசுகளில் அபாயம் குறைந்த பிசாசுக் கொள்கையினையே கடைப்பிடித்தார்கள். இதுபோல்தான் அமெரிக்கா தன் நலன்களுக்காக, தத்துவார்த்தரீதியில் தனக்கு முரணாகத்திகழ்ந்த நாடுகளுடனெல்லாம் நட்பினைப் பாராட்டி வந்தது. உள்நாட்டு அரசியலைப்பொறுத்தவரையிலும் இதுதான் நிலை. தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களுக்கிடையிலான தெரிவின்போதும் வாக்களிக்கப்போகும் மக்கள் இந்த Lesser of Two Evils என்னும் சிந்தனையின் அடிப்படையிலேயே வேட்பாளரைத்தெரிவு செய்வதொன்றும் புதியதல்ல. ஆயுதப்போராட்ட காலத்திலும் அமைப்புகள் இக்கொள்கையின் அடிப்படையில் இயங்கியதற்கு உதாரணமாக இந்திய அமைதிப்படையினருக்கெதிரான போரில் விடுதலைப்புலிகள் பிரேமதாச அரசுடன் இணைந்து செயற்பட்டதையும், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி இந்தியப் படையினருடன் இணைந்து செயற்பட்டதையும் குறிப்பிடலாம். இந்தியாவா இலங்கையா என்ற நிலையில் அன்றைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு பிரேமதாச அரசானது ஆபத்து குறைந்த பிசாசாகத் தென்பட்டது. அதுபோல் பிரேமதாசா அரசுக்கு இந்தியாவை விட விடுதலைப்புலிகள் அபாயம் குறைந்ததொன்றாகத் தென்பட்டது.. இந்த நிலைதான் இன்று இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலிலும் ஏற்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களைப்பொறுத்தவரையில் இரண்டு பிராசுகளில் ஏதாவதொன்றைத்தேர்ந்தெடுப்பதா அல்லது ஒதுங்கியிருப்பதா என்ற நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளார்கள். எமது தனிப்பட்ட கருத்தின்படி ஆட்சி மாற்றம் அவசியமானது. தற்காலிகமாவது தமிழ்ப்பகுதிகளில் நடைபெறும் இராணுவமயமாக்கலைத் தடுப்பது அல்லது தாமதப்படுத்துவது அதுபோல் திட்டமிட்ட குடியேற்றங்களைத்தடுப்பது, மேலும் யுத்தக்குற்றங்களுக்கான விசாரணையினைதத்துரிதப்படுத்துவது இவை போன்ற காரணங்களுக்காகத் தெற்கில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நல்லதென்பதெம் கருத்து. தென்னிலங்கைக் கட்சிகளைப் பொறுத்தவரையில் அங்கு மாற்றுக்கட்சியினரின்மேல் ஆளுங் கட்சியினர் கைக்கொள்ளும் அடக்கு முறைகள், ஊழல், குடும்ப ஆட்சியினை வளர்த்தெடுத்தல், இராணுவத்தின் கைகளைப் பலப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் இராணுவ ஆட்சிக்கெதிரான சாத்தியக்கூறுகளைத் தவிர்த்தல் இவற்றுக்காக அங்கு ஆட்சி மாற்றத்தை அங்குள்ள மாற்றுக் கட்சியினர் வேண்டுகின்றார்கள். ஈழத்தமிழர்களும், ஈழத்துச்சிங்களவர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக ஆட்சி மாற்றத்தை நாடுகின்றார்கள்.

Last Updated on Tuesday, 06 January 2015 19:51