அதிபர் நியமனத்தில் முறைகேடு - எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசன் பாதிப்பு!அதிபர் நியமனத்தில் முறைகேடு - எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசன் பாதிப்பு!

- கவிஞர் கருணாகரன் -


எழுத்தாளர் பெருமாள் கணேசன், அதிபர் நியமனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த விசயம் குறிப்பிடத்தக்களவு பொதுக்கவனத்தைப் பெற்றுமுள்ளது. இருந்தும் அவருக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை. அது தொடர்பான வெளிச்சங்களும் தென்படவில்லை. இதைச் சட்டரீதியாக அணுகுவதற்கும் அரசியல் ரீதியாக நீதியான தீர்வை நோக்கிக்கி, இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கும் பலரும் முன்வந்திருப்பதாகத் தகவல்.

குறிப்பாக வடக்கு முதலமைச்சர்ன் விக்கினேஸ்வரனின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் முன்வந்திருக்கின்றனர். இது சமரசமா? அல்லது மெய்யாகவே நீதி, நியாயத்துக்கான முயற்சியா என்பதை பொறுத்திருந்தே கவனிக்க வேணும். இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கமும் இதில் அக்கறை செலுத்தியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், மனித உரிமைகள் அமைப்பில் நீதி கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. இந்த மாதிரியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே மனித உரிமைகள் அமைப்பை நாடியபோது, அது அவற்றையெல்லாம் புசி மெழுகி அமுக்கி விட்டது. வடக்கில் செயற்படும் மனித உரிமைகள் அமைப்பு மற்றும் பொது லேபிள் அமைப்புகளில் பெரும்பாலானவை சார்வு அரசியல் மயப்பட்டவை. ஆகவே அவற்றை நம்பிப் பயனில்லை.

கணேசன் கடந்த ஆண்டு கிளி/ பாரதிபுரம் வித்தியாலயத்திலிருந்து அதிரடியாக விலக்கப்பட்டவர். அதற்குச் சொல்லப்பட்ட காரணம், அது ஒரு 1AB பாடசாலை. எனவே அதற்கு அதிபர் தரம் 01 ஐச் சேர்ந்தவர்களே அதிபராக இருக்க முடியும் என்று. அது நியாயமானதே. ஆனால், அந்தப் பாடசாலையைப் பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள் அதை 1AB பாடசாலையாகத் தரமுயர்த்துவதற்கு முயற்சித்து அதைச் சாத்தியமாக்கியது கணேசனே.

அதேவேளை கணேசனின் அதிபர் தரம் மற்றும் கல்வித் தகுதியை ஒத்ததாக இருக்கும் பலர் இன்னமும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல 1AB பாடசாலைகளில் அதிபர்களாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், கணேசனுக்கும் அவரோடு ஒத்த ஒரு சிலருக்கும் மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம்?

பாரதிபுரம், மலையத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்து குடியேறிய மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பின்தங்கிய பிரதேசமாகும். ஆகவே இந்தப் பிரதேசத்தில் தரம்வாய்ந்த பாடசாலைகள் வேணும் என்ற அடிப்படையில் மீள்குடியேற்றத்தின் பின்னர் புதிதாக மூன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

1. விவேகானந்த வித்தியாலயம்.
2.திருவள்ளுவர் வித்தியாலயம்
3.இராமகிருஸ்ணா வித்தியாலயம்

ஆகியவையே இந்தப் புதிய பாடசாலைகள். இவற்றுக்கு ஒரு மையப்பாடசாலையாக இருக்க வேணும் என்ற அடிப்படையிலேயே உயர்தர கணித, விஞ்ஞானப்பிரிவுகளைக் கொண்ட 1AB பாடசாலையாக பாரதிபுரம் வித்தியாலயம் தரமுயர்த்தப்பட்டது. இந்தப்பாடசாலையைத் தரமுயர்த்தும்போதே பெரிய தடைகள் உருவாக்கப்பட்டன. அந்தச் சவால்களை எல்லாம் முறியடித்தே அதை 1AB பாடசாலையாக மாற்றினார் கணேசன்.

இருந்தும் அவர் ஒரு அதிபர் தரம் 03 ஐச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால் தொடர்ந்து அங்கே பதவி வகிக்க முடியாது என்ற அடிப்படையில் விலக்கப்பட்டிருந்தார். அப்படி விலக்கப்பட்டவருக்கு அவருடைய அதிபர் தரத்துக்குரிய மாற்றுப்பாடசாலை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கணேசன் அக்கராயன் ம.வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். அங்கே ஒரு வருடமாகக் கற்பித்த பின்னர், இப்பொழுது - சரியாக ஒரு வருசத்துக்குப்பிறகுதான் கணேசனுக்கு கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் அதிபர் நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நியமனத்தை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கியிருக்கிறார். செயலாளருடைய கடிதத்தின் பிரகாரம், கணேசன் கலைமகள் வித்தியாலயத்தில் கடந்த 07.07.2016 அன்று கடமையைப் பொறுப்பேற்றிருக்க வேணும்.

கடமையை 07.07.2016 அன்று பொறுப்பேற்றதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும்போதே 06.07.2016 அன்றிரவு அவருக்கு தொலைபேசி மூலமாக ஒரு இடைநிறுத்த அறிவித்தல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மூலமாக வந்திருக்கிறது. அவை தொடர்பான செய்திகளும் தகவல்களும் ஏற்கனவே ஊடகங்களில் பரவலாக வந்துள்ளன. ஆகவே அவற்றைப்பற்றி இங்கே மீளக் குறிப்பிடுவதைத் தவிர்க்கிறேன்.

இதனையடுத்து, கணேசன் குறித்த பாடசாலையில் கடமையேற்பதைத் தவிர்த்தார். இந்த விசயம் தொடர்பாக இப்பொழுது சட்ட நடவடிக்கைக்கு கணேசன் தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று அறிய முடிகிறது. அத்துடன் சிலருடைய முயற்சியின் விளைவாக இது முதலமைச்சர் மற்றும் ஆளுநரின் கவனத்திற்கும் மத்திய கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், அமைச்சர் மனோ கணேசன், மல்லியப்பு திலகர் என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

கணேசன் ஆசிரிய சேவையில் அதிபர் தரம் (SLPS) 3
தவிர,10 years teacher of ENglish, அத்துடன், 13 yrs ISA English, மேலும் 5 months ADE English, கூடவே, 3 yers principal ஆகியவற்றுடன் BEd lecturer English ஆக பதவிகளையும் பட்டங்களைளையும் கொண்டிருந்திருக்கிறார்.

தமிழ், ஆங்கிலம், சிங்கம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதவும் பேசவும் கூடிய மிகுந்த தேர்ச்சியுடையவர். இந்த மொழிப்பரிச்சயத்தின் வழியாக தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும் சிங்களத்துக்கும் சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றிலிருந்து தமிழுக்கும் படைப்புகளையும் பிற முக்கிய விசயங்களையும் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார. இன்னும் மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டும் வருகிறார். இதைவிட ஏராளமான குறிப்பிடத்தக்க நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கும் படைப்பாளியும் கூட.

ஒரு கல்வியலாளராகவும் சமூகச் செயற்பாட்டாளராகவும் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டு வரும் பெருமாள் கணேசனுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி கண்டனத்துக்குரியது.

பாடசாலைகளிலும் கல்வியிலும் அரசியல் உதவிகரமாக - ஊக்கமாக இருக்க வேண்டுமே தவிர, அவை தடைகளாகவும் குழப்பங்களை உண்டாக்குபவையாகவும் இருக்கக்கூடாது. கல்வியில் உண்டாகும் - உண்டாக்கப்படும் பாதிப்பு என்பது எதிர்காலத்துக்கு ஊட்டப்படும் நஞ்சாகும்.

குறிப்பாக பின்தங்கிய நிலைச்சமூகங்களின் வளர்ச்சிக்கும் ஆளுமை உருவாக்கத்திற்கும் ஏனையவர்கள் தூண்டலாகவும் உதவிகரமாகவும் இருப்பதே சிறப்பு. மாறாக அவற்றை அமுக்கிச் சிதைப்பது அநீதியும் வன்முறையும் இழிசெயலுமாகும்.

பெருமாள் கணேசனுக்கான நீதிக்காக குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது. இது அவரைப்போல எழுந்து வரும் ஏனையவர்களுடைய தடைகளை நீக்குவதற்கான பணியுமாகும்.

நியாய மறுப்பைக் கண்டிப்போம். நீதிக்காகப் ஒன்றிணைவோம்.


பெருமாள் கணேசன் விவகாரம் - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கை

அதிபர் நியமனத்தில் முறைகேடு - எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசன் பாதிப்பு!வடமாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நியமனங்களில் அரசியல்வாதிகளின் தேவையற்ற தலையீடுகளும் பிரதேசவாதங்களும் செல்வாக்கு செலுத்துவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் அதிபர் நியமனம்
வழங்கப்பட்டிருந்த பெருமாள் கணேசனுக்கு - கல்வியமைச்சின் செயலாளருடைய கடிதத்ததன் பிரகாரம் கலைமகள் வித்தியாலயத்தில் கடந்த 07.07.2016 அன்று கடமையைப் பொறுப்பேற்கவிருந்த நிலையில் - அவருக்கு தொலைபேசி மூலமாக ஒரு இடைநிறுத்த அறிவித்தல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மூலமாக வந்திருப்பதாக - அவை தொடர்பான செய்திகளும் தகவல்களும் ஏற்கனவே ஊடகங்களிலும் பரவலாக வந்துள்ளன.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அநீதி கண்டனத்துக்குரியது.

இத்தகைய செயற்பாடுகள் வடமாகாண கல்வி அமைச்சின் முறைகேடுகளின் மற்றுமொரு பரிமாணமாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது.  இந்தத் தவறான - முறையற்ற நடவடிக்கைகளால், சமூகத்தில் பகையும் மோதலும் அணிபிரிதல்களும் உண்டாகக்கூடிய பொறுப்பற்ற செயற்பாடுகளில் வடமாகாண கல்வியமைச்சு ஈடுபட எத்தனித்துள்ளதாகவே பார்க்கவேண்டியுள்ளது.

அரசியல் அதிகாரங்கள் தேவேயற்ற விதமாக கல்வியில் குழப்பங்களை உருவாக்க முயலுமாயின் - அது வடமாகாண கல்வியில் இனியும் மீளமுடியாத பின்னடைவைஉருவாக்கிவிடும்.

எனவே - இவ்விடயத்தில் வடமாகாண முதலமைச்சர் தலையிட்டு - பாதிக்கப்பட்ட
அதிபருக்கு நீதியான தீர்வை வழங்கவேண்டும்.

ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்.

'பதிவுகளு'க்கு அனுப்பியவர்: யாதுமாகி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.