அலைகள் ஓய்வதில்லை - பெருமாள் கணேசன் அதிபர் விவகாரம்

Thursday, 21 July 2016 01:03 - கருணாகரன்; 'பதிவுக'ளுக்கு அனுப்பியவர்: யாதுமாகி - அரசியல்
Print

அதிபர் நியமனத்தில் முறைகேடு - எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசன் பாதிப்பு!எழுத்தாளர் கருணாகரன்எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசனின் நியமனம் இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இப்பொழுது இரண்டு அதிபர்கள். கடந்த 07.07.2016 இல் இருந்து இந்த நிலை நீடிக்கிறது. ஏற்கனவே அந்தப் பாடசாலையில் இருக்கும் திருமதி இந்திராதேவி சுந்தரமூர்த்தி,  தன்னுடைய இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு மாகாணக் கல்விச் செயலாளரிடம் விண்ணப்பித்ததாகத் தகவல். அவருடைய கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு முடிவு வரும்வரை இந்த இழுபறி நிலை – தீர்மானமில்லாத தளம்பல் நிலை நீடிக்கும் என்று தெரிகிறது. இதைக்குறித்து கல்வி நிர்வாகம் எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்பதே இப்பொழுது பலருடைய எதிர்பார்ப்பும். இதற்கிடையில் இது தொடர்பாக மாகாணக் கல்வி அமைச்சர் திரு. த. குருகுலராஜாவிடம் கேட்டதற்கு அவர் முறையான பதிலை அளிக்கவில்லை என குளோபல் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது.  எனவே இவற்றைப் பற்றியெல்லாம் நான் இப்பொழுது எதையும் எழுதவில்லை. காரணம், கல்வி நிர்வாகம் குறித்த நடவடிக்கையை எடுப்பதற்கான அவகாசத்தைக் கோரியிருப்பதால் அதற்கிடையில் நாம் பேச முற்படுவது பொருத்தமற்றது என்பதே. ஆனால், நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருப்போம். இந்த நிலையில் என்னுடைய இந்தப் பதிவு இங்கே வேறு சில முக்கியமான விசயங்களைச் சொல்ல முற்படுகிறது. இது அவசியமானதாக இருப்பதால் இதைப் பதிவிடுகிறேன்.

கடந்த 09.07.2016 அன்று எழுத்தாளரும் அதிபருமான பெருமாள் கணேசனுடைய அதிபர் நியமனத்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக என்னுடைய முகப்புத்தகத்தில் ஒரு பதிவையிட்டிருந்தேன். அந்தத் தகவலை வேறு பல இணையத்தளங்களும் செய்தியாகப் பிரசுரித்துமிருந்தன. அதைப் பலரும் பகிர்ந்திருந்தனர். தொடர்ந்து பலவிதமான தொனியிலும் நிலைப்பாடுகளிலும் பல்வேறு தரப்பினரும் கருத்துகளையும் எழுதியிருந்தனர். அனைத்துத்தரப்பினருக்கும் நன்றிகள். இந்த அதிபர் நியமனத்தைத் தொடர்ந்த விவகாரமும் என்னுடைய பதிவும் பலவிதமாக விளங்கப்பட்டும் திசை திருப்பப்பட்டும் வருகிறது. இதில் நியாயமான அணுகுமுறைகளும் உண்டு. நியாயமற்ற அணுகுமுறைகளும் உண்டு. ஒவ்வொரு தரப்பும் தத்தமது நியாயங்களை வலுவூட்டவே முயற்சிக்கின்றன. மிகச் சில தரப்புகளே இந்தப் பிரச்சினையை அதன் மெய்யான நிலையில், அதற்கான சமூக புறக்காரணிகள், நிர்வாக விதிமுறைகள், சட்டம், மற்றும் நியாயம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அணுகி வருகின்றன. “மெய்ப்பொருள் காண்பது அறிவு“ என்பது இவர்களின் புரிதல். ஏனைய பல தரப்புகள் உண்மையைக் கண்டு அஞ்சும் பதற்றத்தினால் தமது அரசியலை முன்வைக்கத் துடிக்கின்றன. அதற்காக அவை அடைகின்ற பதற்றமும் அதிகம். இவர்கள் முற்று முழுதாகத் தமது அரசியலை முன்வைக்கும் முனைப்பை மட்டுமே கொண்டிருக்கின்றன. நியாயத்தை அல்ல. இதனால், இவர்கள் மையப்பிரச்சினையான இந்த அதிபர் நியமனத்தின் சிக்கல்கள், இதிலுள்ள தயக்கங்களைப்பற்றிப் பேசாமல், சாதி, பிரதேச, தேசியவாத விவாதங்களில் கவனத்தைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி, அதைச்சிதைக்கும் முகமாக இந்தப் பெருமாள் கணேசன் விவகாரம் கையாளப்படுகிறது என்ற பெருங்கதையாடலைச் செய்ய முற்படுகின்றன. இந்தப் பிரச்சினை அல்லது இந்த மாதிரிப்பிரச்சினைகளை உரிய முறையில் அணுகாமல், திட்டமிட்ட முறையில் வேறு விதமாக இழுத்தடிப்புச் செய்வதனால்தான் ஏனைய அடையாளங்களை (சாதி, பிரதேசம், பால் போன்றவற்றை) பாதிக்கப்படுவோர் முன்னிலைப்படுத்துகின்றனர்.

ஆகவே தவறான புரிதல்கள் கவலையளிக்கின்றன. கல்வித்துறையைச் சேர்ந்தவர்களில் சிலர்கூட நான் எழுதியிருக்கும் பதிவை சரியாகப் புரிந்து கொள்ளாமல் பக்கச் சார்பானது, அரசியல் உள்நோக்கமுடையது, கணேசனை நியாயப்படுத்துவது, அல்லது கணேசனுக்கு ஆதரவளிப்பது, பிரதேசவாதத்தைக் கிளப்புவது என்ற தொனிப்படப் பேச முனைந்திருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். அவர்கள் என்னுடைய பதிவை மீளவும் ஊன்றிப் படிக்க வேண்டும் என்று கேட்கிறேன். அப்படிப் படிக்கும்போது இத்தகைய தவறான புரிதல்களுக்கு இடமிருக்காது. என்னுடைய பதிவில் சாதியம், பிரதேசவாதம் போன்றவை குறிப்பிடப்படவில்லை. ஆனால், கணேசனைப்போன்று அடிநிலையில் இருந்து வருவோருக்கு இடமளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டிய பொறுப்பு ஏனைய தரப்பினருக்கு உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறேன். அது நியாயமான ஒரு கூற்றே.

இருந்தும் இந்த விசயத்தை மீளவும் அதன் மெய்யான நிலையில் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது சலிப்பையும் கவலையையும் அளிக்கிறது. இருந்தாலும் இதைச் செய்தே தீர வேண்டும் என்ற நிலை. எனவே இது ஒரு தொடரும் விளக்கமாக அமையும்.

இதேவேளை “இவர்கள் செய்யும் வசைகளையும் அவதூறுகளையும் எதற்காக தேவையில்லாமல் சந்திக்க வேண்டும்? பேசாமலிரு“

எனச் சில நண்பர்கள் என்னிடம் கேட்கிறார்கள். “இது மீண்டும் குப்பையைக் கிண்டும் ஒரு விசயம். நீ என்னதான் எழுதினாலும் சிலருக்கு அது விளங்கவே போவதில்லை. விளங்கினாலும் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் ஞானக்கண்ணும் நல் மனமும் கிடையாது“ என்கிறார் இன்னொரு நண்பர். “பெருமாள் கணேசன் என்ற தனி ஒரு மனிதர் அல்லது ஒரு பாடசாலை அதிபருடைய விடயத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து ஏன் தொடர்ந்து எழுதவும் செயற்படவும் வேண்டும்?“ என்ற கேள்வியும் சிலரிடம் உண்டு.

என் மீதான நண்பர்களின் அக்கறையை மதிக்கிறேன்.  பொதுவெளியில் செயற்படும் நாம் இதைப்போன்ற நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டும். தவிர, எல்லா மேலாண்மைவாதத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகச் செயற்பட்டு  வரும் நாம் இந்தச் சந்தர்ப்பத்திலும் அதை எதிர்கொள்வோம். ஒதுங்கிக் கொள்ள முடியாது. எனவே, “பொது அபிப்பிராயம்“ “பொது நிலைப்பாடு“ என்ற சாதிய, மத, இன, பிரதேச, மொழி மேலாண்மைவாதக் கதையாடலுக்கெதிராகவே இயங்கி வந்த மரபையுடைய அனுபவத்தின்படி இதையும் எதிர்கொள்கிறேன். நண்பர்கள் மன்னித்துக் கொள்ளுங்கள். 

இதைவிட இது தனியே ஒரு மனிதருடைய அல்லது ஒரு பாடசாலை அதிபருடைய விசயமாகத் தோன்றலாம். ஆனால், உண்மையில் அவ்வாறில்லை. ஒரு விசயம் விவகாரமாகும்போது அதைப்பொதுவெளியும் சம்மந்தப்பட்ட தரப்புகளும் சம்மந்தமில்லாத தரப்புகளும் எப்படியெல்லாம் எதிர்கொள்கின்றன என்பதை விளங்கிக்கொள்வதற்கான ஒரு களமாகும் இது. ஆகவே இதைத் தொடர்ந்து உரையாடல் பரப்பாக ஆக்கிக் கொள்வதன் மூலமாக தமிழர்களின் அரசியல், சமூக, பண்பாட்டு, ஊடக, அற அடையாளங்களை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாகும். பாராட்டும் எதிர்ப்பும் நியாயமான அணுகுமுறையும் ஒதுங்கலும் மௌனமும் இந்த அடிப்படையில்தான் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியவை. எல்லாமே ஒரு பண்பாட்டு நடவடிக்கை என்பதாக.

தவிர, வசைபாடிகளும் நிராகரிப்பான்களும் திரிபுவாதிகளும் அவதூறாளர்களும் இருக்கலாம். அவர்களை விட்டு விடுவோம். அவர்களுக்கு அப்பாலும் உலகம் உள்ளது. நல்ல இதயமும் கூர்மதியுமுடைய மனிதர்கள் உள்ளனர். அறியும் வேட்கையும் உண்மையை உணரும் தாகமும் உள்ளவர்கள் இவர்கள். இவர்களில் நம்பிக்கை வைத்ததன் அடையாளமே இந்தப்பதிவு.

“பெருமாள் கணேசனுக்கு மட்டும்தானா இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டது? இதைப்போல வேறு இடங்களிலும் வேறு காலத்திலும் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம் நீங்கள் இப்படி ஆவேசமாகக் குரல் எழுப்பினீர்களா?“ என்ற கேள்வியை இன்னொரு நண்பர் எழுப்பினார். நியாயமான கேள்வியே. அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் அவற்றைப்பற்றிய பதிவுகளையும் கேள்விகளையும் ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் வெளிப்படுத்தியிருக்கிறேன். அவற்றைப் பொதுவெளியின் உரையாடற் பரப்புக்கும் கொண்டு சென்றிருக்கிறேன். இதை ஏன் நீங்கள் கண்டு கொள்ளவில்லை என்றேன். பதிலில்லை.

இதேவேளை இங்கே பெருமாள் கணேசன் பற்றிய விசயம் சற்று வேறானது. இது சக படைப்பாளியும் நண்பருமான ஒருவர் என்பதைப்  பற்றியது. எனவேதான் இந்த விசயத்தை சக படைப்பாளி என்ற அடிப்படையில் என்னுடைய முகநூல் பதிவில் பகிர்ந்தேன். அந்தப் பதிவின் தொடக்கமே, “எழுத்தாளர் பெருமாள் கணேசன், அதிபர் நியமனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்“ என்றே ஆரம்பிக்கிறது. அதாவது, இங்கே முன்னிலைப்படுத்தப்பட்டது படைப்பாளியாக இருக்கும் கணேசன், தான் சார்ந்த கல்வித்துறையில் செயற்படும்போது பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதேயாகும். அதாவது, சக எழுத்தாளர் என்பதற்கான சக படைப்பாளி ஒருவருடைய தார்மீகக்குரல் என்பதாகும். இது இன்னொருவருக்கான உரிமையை மறுப்பதாகாது. அதாவது, பெருமாள் கணேசன் புதிதாக அதிபர் நியமனத்தைப் பெற்று கிளி/ சாந்தபுரம் பாடசாலைச் செல்லும்போது அங்கே அதிபராகக் கடமையாற்றிக்கொண்டிருக்கும் திருமதி இந்திராதேவி சுந்தரமூர்த்தியின் நியாயத்தையும் உரிமைகளையும் மறுப்பதாகாது.

கணேசனுக்கு புதிய இடத்தில் அதிபர் நியமனமோ பதவி உயர்வோ கிடைத்திருந்தால் வாழ்த்துவதைப்போல, அவருக்கு நியமனத்தில் இடைஞ்சல் ஏற்பட்டபோது கண்டனத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியது. இரண்டுக்கும் ஒரே அடிப்படைத் தகுதிகள் உண்டு. ஆனால், கண்டனம் என்று வரும்போதும், அதற்கான காரணங்கள் என்று வரும்போதும் அதை அணுகும் மனங்கள் வேறுபடுகின்றன. அதன் வெளிப்பாடே தொடர்ந்த, தொடரும் விவாதங்கள்.  வாழ்த்தாக இருந்திருந்தால் சர்ச்சையே வந்திருக்காது.

அடுத்ததாக, இந்த விவாதங்களில் ஈடுபட்டவர்களில் அதிகமானவர்களும் பார்வையாளர்களாக இருப்போரும் கேட்கும் கேள்விகளில் ஒன்று, “கணேசனுக்கு எந்த அடிப்படையில் முக்கியத்துவத்தைக் கருணாகரன் அளிக்கிறார்” என்பதுவாகும். முக்கியமாக அரசியல் ரீதியாகக் கணேசன் பழிவாங்கப்பட்டதன் வெளிப்பாடே இது என்று கருணாகரன் காட்ட முற்படுகிறார்“ என்பதாகும்.   இது தவறு. என்னுடைய பதிவை மறுபடியும் வாசிக்கலாம். https://www.facebook.com/sivarasa.karunagaran/posts/1140469439344096 . அதில் நான் எந்த அரசியற் தரப்பையும் குற்றம் சாட்டவில்லை. எந்த நபரையும் கூட. எவருடைய பெயரையும் நான் குறிப்பிடவேயில்லை. நடந்த விவரத்தை மட்டும் தகவலாக தரவுகளின் அடிப்படையில் முன்வைத்திருக்கிறேன். அதற்கான ஆதாரங்கள் உண்டு. தவிர, கல்வி அமைச்சை மட்டுமே குற்றம் சாட்டியிருக்கிறேன். குறிப்பாக அதற்கான நிர்வாகத்தை. ஆனால் வேறு ஊடகங்களில் கல்வி அமைச்சரைக் குற்றம் சாட்டும் தொனியில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு உதாரணத்துக்குக் கவனிக்க. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134034/language/ta-IN/article.aspx

முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான கருத்துகள் தொடர்பாக மேலும் ஒரு சுருக்கக்குறிப்பு.

அ) பெருமாள் கணேசன், நான் அறிந்தவரையில் எந்த அரசியலோடும்  அரசியற் தரப்புகளோடும் சேர்ந்து இயங்கியவரல்லர். அவருடைய அரசியல் தெரிவுகளை அவர் ஒருபோதும் பகிரங்கமாக வெளிப்படுத்தியதுமில்லை. கணேசனுடைய முதல் தெரிவு கல்வி. அதனோடு இணைந்த சமூகச் செயற்பாடுகள். கூடவே இலக்கியம். அதாவது எழுத்தும் அது சார்ந்த செயற்பாடுகளும். இதனால் “கணேசன் அரசியல் அடையாளங்கள் தன்மீது படிந்து விடாதவாறு அங்குமிங்குமாக ஊசலாடுகிறார்“ என்ற விமர்சனங்களை அரசியற் தரப்புகள் அவர் மீது வைத்ததுண்டு. இதைப்பற்றிய கணேசனின் பதில், “நான் அரசியல்வாதியல்ல. அதில் எனக்கு நாட்டமுமில்லை. நல்ல பணிகளை யார் செய்தாலும் அதை வரவேற்பேன். சமூக அக்கறை யாருக்கு உண்டோ அவர்களை ஆதரிப்பேன். தமிழ் மக்களின் உரிமை தொடக்கம் அனைத்து ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையிலும் அக்கறை உண்டு. அதற்காக ஆதரவளிப்பேன்“ என்பார்.

ஆனால், அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாருடன் நெருக்கமாக செயற்பட்ட காரணத்தினால்தான் அவருக்கு பாரதிபுரம் பாடசாலையின் அதிபர் நியமனம் கிடைக்கப்பட்டது என்ற ஒரு அபிப்பிராயம் முன்வைக்கப்படுகிறது. கூடவே கணேசன் பிரதேசவாதத்தை (குறிப்பாக மலையக வம்சாவழியினர் என்ற அடையாளத்தை) தேவையில்லாமல் எழுப்புகிறார் என்றும் கூறப்படுகிறது. அல்லது குற்றம் சாட்டப்படுகிறது.

இதுபற்றிய மெய்விவரம் என்னவென்றால்,  பாரதிபுரம் பிரதேச மக்களின் கோரிக்கையின் அடிப்படையில்தான் அந்தப் பாடசாலைக்கான அதிபராக 7-1-2013 இல் கணேசன் அங்கே சென்றார். இதற்கு அந்த மக்கள் அப்பொழுது எழுதிய கோரிக்கைக் கடிதங்கள் வடமாகாண கல்வி அமைச்சிலும் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளரிடமும் அப்போது கிளிநொச்சிப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரிடமும் உள்ளன. தவிர, மக்கள் இந்த இடங்களுக்கு நேரிலும் சென்று தங்கள் விருப்பத்தைக் கோரிக்கைப்படுத்தியிருக்கிறார்கள். அந்த மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அதிபர் நியமனத்தின் போது இந்த நியமனத்தைக் கணேசன் பெற்றிருக்கிறார். இவற்றை அந்த நாட்களில் நான் செய்தியாக அறிக்கையிட்டிருக்கிறேன்.

தவிர, பாடசாலைச் சமூகத்தின் இத்தகைய நடவடிக்கைகள் புதியவை அல்ல. நகர்ப்புறப்பாடசாலைகளில் இந்த வழக்கத்தையும் நடைமுறையையும் நாம் அதிகமாகக் காணமுடியும். தங்கள் பாடசாலைக்கு பொருத்தமான அதிபரை குறித்த பாடசாலைகளின் பழைய மாணவர்களும் பெற்றோரும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் அபிவிருத்திச் சபையும் பிற அமைப்புகளும் கோருவதுண்டு. இந்தக் கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்து உரிய அதிபர்கள் நியமிக்கப்படுவதும் வழமை. கணேசனின் விசயத்திலும் இதுதான் நடந்தது. இதில் அரசியற் செல்வாக்கு எங்கே இருந்தது என்று தெரியவில்லை. பாடசாலை தரமுயர்ந்த பின்னர், அதற்குரிய அதிபர் தராதரமுள்ளவரே நியமிக்கப்படவேண்டும் என்பது நியதி. அதை என்னுடைய பதிவும் ஏற்றிருக்கிறது. அதன்படி அந்தப் பாடசாலையிலிருந்து கணேசன் விலக்கப்பட்டார். ஆனால், பாரதிபுரம் வித்தியாலயத்திலிருந்து விலக்கப்பட்ட பெருமாள் கணேசனுக்கு அவருடைய தகுதியின் அடிப்படையில் மாற்றுப்பாடசாலை வழங்கப்படவில்லை. இது ஏன்? இதுவே கேள்வி. இதில் கல்வி அமைச்சுத் தவறிழைத்தது என்பது கல்வித்துறையைச் சேர்ந்தவர்களின் கருத்தாகும். இதைப்போல வேறு அதிபர்களும் அந்தச் சமயத்தில் தாங்கள் பதவி வகித்த பாடசாலைகளின் வளர்ச்சிக்குப் பங்களித்திருந்தும் அதற்குரிய மரியாதை வழங்கப்படாமல், மாற்றுப்பாடசாலை வழங்கப்படாமல் விலக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஆ) கல்வித்துறையில் கணேசன் அதிபர் தரம் மூன்றில்தான் உள்ளார். தற்போது அவர் கடமையைப் பொறுப்பேற்றிருக்கும் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய அதிபர் திருமதி இந்திராதேவி சுந்தரமூர்த்தி அதிபர் தரம் இரண்டு உள்ளவர். மட்டுமல்ல, அவர் இந்தப் பாடசாலையைப் பொறுப்பேற்று ஒரு வருடமே ஆகிறது. குறித்த பாடசாலையைப் பொறுப்பேற்றபின்னர் அந்தப் பாடசாலையில் மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவருக்கு எதற்காக இப்போது திடீர் இடமாற்றம் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கேள்வி நியாயமானதே. ஆனால், இதற்கான பதிலைச் சொல்ல வேண்டியது மாகாணக் கல்வி அமைச்சே. மாகாணக் கல்வி அமைச்சே குறித்த பாடசாலையில் இந்த நிலையில் ஒரு அதிபர் செயற்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது பெருமாள் கணேசனையும் அங்கே அதிபராக நியமித்திருக்கிறது. இது மாதிரியே முன்னர் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் கிளிநொச்சி பாரதிவித்தியாலயத்திலும் மாகாணக் கல்வி அமைச்சு நடந்திருந்தது. அதனால் ஏகப்பட்ட குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டுமிருந்தன. இதனையும் நான் என்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

///இந்த மாதிரியான சம்பவங்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் நடந்திருக்கின்றன. இதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சே  முழுப்பொறுப்பு. இந்தத் தவறான - முறையற்ற நடவடிக்கைகளால், அதிபர்களிடையே பகையும் மோதலும் அணிபிரிதல்களும் உண்டாகின்றன. ஆசிரியர்கள் சங்கடங்களுக்குள் சிக்க வேண்டியிருக்கிறது. பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடுகிறார்கள். மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்//// என.

இதேவேளை குறித்த கலைமகள் வித்தியாலயத்திலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி வலயக்கல்விப்பணிப்பாளருக்கு திருமதி இந்திராதேவி சுந்தரமூர்த்தி ஏற்கனவே கடிதம் எழுதியதாகவும் தகவல். (இதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை).

இ). இதேவேளை தமிழ்ச்சமூகத்தில் பிரதேசவாதங்களும் சாதியமும் மத வேறுபாடுகளும் பால் அசமத்துவமும் நீங்கி விட்டன என்று சொல்கின்றவர்களைக் குறித்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் சூரியன் மேற்கில் உதிக்கிறது என்று நான் நம்பவில்லை.

ஈ) பெருமாள் கணேசனை வைத்து அரசியல் செய்யவோ, ஆதாயம் தேடவோ வேண்டியதில்லை. அதற்குரிய ஆளும் கணேசன் அல்ல. அவரை வைத்து வேறு தரப்புகள் கூட அரசியல் ஆதாயத்தைப் பெற்றன என்று நான் நம்பவில்லை. ஆனால், அவருக்கு ஒரு சமூக ஈடுபாடுண்டு. குறிப்பாக தான் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சியில். கணேசன் அரசியற் பலத்தோடிருந்தால் இப்படித் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை. தவிர, அவர் ஒரு அரசியற் தரப்பின் ஈடுபாட்டாளராக ஒரு போதும் செயற்பட்டதில்லை என்பதை இந்தப் பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.

உ)  தான் சந்தித்து வரும் பாதிப்பின் அனுபவங்களை கணேசன் எழுதுகிறார். அவை எப்படியானவை என்பது அவருடைய சொந்த அனுபவம். அவர் எந்த அடையாளத்தின் காரணமாக தான் நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறேன், புறக்கணிக்கப்படுகிறேன் என்று தெளிவாகவே முன்வைத்திருக்கிறார். அதை வெளிப்படுத்துவது அவரைப்பொறுத்தவரையில் தவிர்க்க முடியாதது.அது  அவருடைய உரிமையும் கூட. அப்படி அவரை உணர்ந்து கொள்ளும் நிலைமையை உருவாக்கியவர்களே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். அது அப்படியல்ல என்றுமறுப்பதற்குரிய ஆதாரங்களை முன்வைக்க வேண்டியது மறுப்போரின் கடமை. அதுவும் கணேசனுக்கே தவிர, எனக்கல்ல.

ஊ). பெருமாள் கணேசன் பாதிக்கப்பட்டது உண்மை என்பதை அனைவரும் முதலில்ஆராய்ந்தறிய வேண்டும். அவரும் அவரைப்போன்றவர்களும் எப்படிப் பாதிப்புக்குள்ளாகிறார்கள்? அவர்களுக்காக ஏன் நியாயம் கேட்பதற்கு பென்னாம் பெரியவர்களும் முதன்மையாளர்களும் பின்னிற்கிறார்கள்? இந்த விசயத்தைப் பேச முற்படும் போது கூச்சலடிப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை ஏன் நியாய அடிப்படையில் வழங்க முடியாமலிருக்கிறது என்பதைக் கண்டு பிடியுங்கள். அதை விட்டு விட்டு இது தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிரான சதி. ஒற்றுமையைக் குலைக்கும் முயற்சி. இல்லாத ஒன்றை இட்டுக்கட்டும் நடவடிக்கை. தேவையில்லாத பிரச்சினை. முந்திய அரசின் அபிமானிகள் செய்கின்ற காரியம் என்றெல்லாம் சொல்ல விளைவது உண்மையை எதிர்கொள்ள முடியாமையின் தன்மையே.

தமிழ்ப் பேரரசியல் விரிக்கின்ற திரைகள் ஆயிரம்.

தகவல்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 21 July 2016 01:11