வாசிப்பும், யோசிப்பும் 207: ஹிலாரி கிளிண்டனின் கனவாகிய கனவும், டொனால்ட் ட்ரம்ப்பின் நனவாகிய கனவும்

Thursday, 10 November 2016 06:53 - வ.ந.கிரிதரன் - அரசியல்
Print

வாசிப்பும், யோசிப்பும் 207: ஹிலாரி கிளிண்டனின் கனவாகிய கனவும், டொனால்ட் ட்ரம்ப்பின் நனவாகிய கனவும்நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை மக்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு அளித்துள்ளனர். விபரங்கள் வருமாறு:

ஹிலாரி ஹிளிண்டன்: 59,626,052 votes (47.7%) | டொனால்ட் ட்ரம்ப்: 59,427,652 votes (47.5%)

ஆனால் அமெரிக்கத் தேர்தலில் அதிகப்படியான மக்களின் வாக்குகளை ஹிலாரி கிளிண்டன் பெற்றுள்ளார்.

Hillary Clinton 228 | Donald J. Trump 279

ஆனால் அமெரிக்கத்தேர்தல் சம்பந்தமான சட்ட விதிகளின்படி அதிகளவு மக்களால் விரும்பப்படும் ஒருவர்தான் ஜனாதியாகவும் வரவேண்டும் என்பதில்லை. யாரும் 270 எண்ணிக்கையில் 'எலக்டோரல் (Electoral) வாக்குகளை, குறைந்தது 270 வாக்குகளைப் பெற வேண்டும். அப்பொழுதுதான் அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில் அவரால் வெற்றிபெற முடியும்.

இம்முறை தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை நிர்ணையித்தது சில தேர்தல் தொகுதிகள்தாம். அமெரிக்காவைப்பொறுத்தவரையில் குடியரசுக்கட்சியினருக்கு எப்பொழுதும் ஆதரவு தெரிவிக்கும் தொகுதிகளும், ஜனநாயகக் கட்சியினருக்கே ஆதரவு தெரிவிக்கும் தொகுதிகளும் உள்ளன. அவை தவிர்ந்த ஏனைய தொகுதிகள்தாம் எப்பொழுதும் ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி , தோல்வியை நிர்ணயிப்பவையாக எப்பொழுதும் விளங்குகின்றன. சில வேளைகளில் குடியரசுக்கட்சியினரின் தொகுதிகள் சில ஜனநாயகக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினரின் தொகுதிகள் சில குடியரசுக்கட்சியினருக்கும் போவதுண்டு. அவ்விதம் நடப்பது அரிதாகத்தானிருக்கும். பெரும்பாலும் இரு கட்சியினரினதும் ஆதரவுத்தொகுதிகள் தவிர்ந்த ஏனைய தொகுதிகளான ஓகியோ, மிச்சிகன்,, புளோரிடா, போன்ற கடும் போட்டி நிலவும் தொகுதிகளை வென்றெடுக்கத்தான் இரு கட்சியினரும் கடுமையாகப்போட்டியிடுவார்கள். இம்முறையும் அவ்விதமே போட்டி நிலவியது.

ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் ட்ரம்பை விட அதிகளவு ஆதரவு பெற்றவராக தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்னர்வரையில் திகழ்ந்தார். அச்சமயம் பார்த்து அமெரிக்க மத்திய புலனாவுத்துறையின் இயக்குநர் ஏற்கனவே முடிவுக்கு வந்திருந்த , ஹிலாரி கிளிண்டன் தன் பதவிக்காலத்தில் அந்தரங்கமாகப் பாவித்த மின்னஞ்சல் சேர்வர் பற்றிய விசாரணையை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருந்தார். அதனையடுத்து குடியரசுக்கட்சியினரின் கடுமையான பிரச்சாரத்தினால் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவு அதிகரிக்கத்தொடங்கியது. அதுவரையில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராகப்பிரிந்திருந்த குடியரசுக்கட்சியினரை அவருடன் மீண்டும் ஒன்றுபட்டு தேர்தலைச் சந்திக்க ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணை பற்றிய அறிவிப்பு உதவியது. தேர்தலுக்கு ஓரிரு நாட்களின் முன்னரே மத்தியப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணையை மீண்டும் முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தார். இதற்கிடையில் தேர்தலில் முன்னதாக வாக்களிக்கும் சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி சுமார் 25 மில்லியன்களுக்கு அதிகமான வாக்காளர்கள் வாக்களித்து விட்டார்கள். மத்தியபுலனாய்வுத்துறை இயக்குநரின் ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணை பற்றிய அறிவிப்பும் இறுதி நேரத்தில் புளோரிடா போன்ற எந்தக் கட்சியினரினதும் கோட்டையாகக்கருதப்படாத தொகுதிகளைச்சேர்ந்த வாக்காளர்கள் மனம் மாறுவதற்குக் காரணமாக அமைந்து விட்டது. மேலும் சி.என்.என் தொலைக்காட்சியினரின் ஆய்வுகளின்படி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணங்களிலொன்று இம்முறை ஜனநாயகக்கட்சியினர் பலர் தேர்தலில் வாக்களிக்காமல் அதனைப்புறக்கணித்ததுதான் என்பதாகும். கடந்த தேர்தல்களின் குடியரரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான் மைக்கயின், மிற் ராம்னி ஆகியோர் டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகளை மேற்படி தொகுதிகளில் பெற்றிருந்தும் தோற்றுள்ளார்கள். அதற்குக் காரணம் அத்தேர்தல்களில் பெருமளவில் ஜனநாயகக்கட்சியினர் வாக்களித்திருந்தார்கள் என்பதுதான். ஆனால் இம்முறை அவ்விதம் ஜனநாயகக் கட்சியினர் அதிகளவில் வாக்களிக்கவில்லை என்பதும் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

இன்னுமொரு காரணத்தையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. சட்ட விரோதக்குடிவரவாளர்கள், முஸ்லீம் மக்கள், பெண்கள், மற்றும் ஒரு பால் உறவினர் ஆகியோருக்கெதிரான உணர்வுகளைத்தூண்டுவதன் மூலம், கடந்த எட்டு வருடங்களாகக் கறுப்பினத்தைச் சேர்ந்தவரான ஜனாதிபதி ஒபாமாவின் கீழ் அமெரிக்காவின் பெருமை சர்வதேச அரங்கில் குறைந்து விட்டது என்று குற்றஞ்சாட்டுவதன் மூலம் வெள்ளையின மக்களின் ஒரு பகுதியினரத் தன் பக்கம் வளைப்பதில் ட்ரம்ப் வெற்றியடைந்திருந்தார் என்றுதான் கூற வேண்டும். நடுத்தர வயது, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப்படிப்பற்ற வெள்ளையின மக்களில் பலர் ட்ரம்பின் இந்த வலையில் விழுந்தார்கள் என்றுதான் கூற வேண்டும்.

பெண் என்பதால் ஹில்லாரியின் நம்பகத்தன்மையினைத் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய விடயமாகக்கையாண்ட குடியரசுக் கட்சியினரின் தீவிரமான பிரச்சாரமும் ஹிலாரி கிளிண்டனுக்குக்கெதிராக மக்களில் ஆணாதிக்கச் சிந்தனை மிக்க சிலரை அணிதிரள வைத்து விட்டது எனலாம்.

இவ்விதமான காரணங்களினால் வெற்றிக்கனியைத் தட்டிப்பறிக்கும் தூரத்திலிருந்த ஹிலாரி கிளிண்டனின் கனவு இம்முறையும் கனவாகவே போய்விட்டது.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it