நினைவு கூர்வோம்: 1966 அக்டோபர் 21 எழுச்சி..! 51 வருட நிறைவு!

Wednesday, 25 October 2017 08:20 - வி. ரி. இளங்கோவன். - அரசியல்
Print

சாதிய தீண்டாமைக் கொடுமைக்கெதிரான புரட்சிகரக் கலை இலக்கிய படைப்புகள் மலர்ந்து இலக்கிய வரலாற்றில் அழியா இடம்பெற்றனதீண்டாமைக்கு எதிரான போராட்ட இயக்கத்தை ஆரம்பிக்கும் வகையில் 1966 -ம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (அன்று சீனச் சார்பு என அழைக்கப்பட்டது) ஓர் ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் வடபிரதேசத்தில் நடாத்துவதென தீர்மானித்தது.

அதற்கமைய 1966 அக்டோபர் 21-ம் திகதி சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊர்வலம் நடாத்துவதற்கான தயாரிப்புகளைக் கட்சி மேற்கொண்டது. ஊர்வலத்திற்கான அனுமதி பொலிசாரிடம் கோரப்பட்ட போதிலும் அனுமதி மறுக்கப்பட்டது. வடபிரதேசத்தின் சகல பகுதிகளிலிருந்தும் கட்சி வாலிப இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதரவாளர்களும் மற்றும் முற்போக்கு எண்ணங்கொண்ட பொதுமக்களும் பெருமளவில் ஊர்வலத்தில் கலந்துகொள்ளவென சுன்னாகத்தில் திரண்டனர்.
1966 அக்டோபர் 21-ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் சுன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து ''சாதி அமைப்புத் தகரட்டும்..! சமத்துவ நீதி ஓங்கட்டும்..!!" என்ற செம்பதாகையை உயர்த்திப்பிடித்த வண்ணம் ஊர்வலம் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டது. ஊர்வலத்தின் முன்னணியில் தோழர்கள் கே. டானியல் - வீ. ஏ. கந்தசாமி - கே. ஏ. சுப்பிரமணியம் - டாக்டர் சு. வே. சீனிவாசகம் - எஸ். ரி. என் நாகரத்தினம் ஆகியோர் தலைமைகொடுத்துச் சென்றனர். அடுத்து கட்சி வாலிபர் இயக்கத்தைச் சேர்ந்த எம். ஏ. சி. இக்பால் - கு. சிவராசா - நா. யோகேந்திரநாதன் - கி. சிவஞானம் - கே. சுப்பையா ஆகியோர் அணிவகுத்துச்செல்லத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கானோர் அணியணியாக முன்னோக்கி விரைந்தனர். ஊர்வலம் பிரதான வீதியில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை அண்மித்ததும் பொலிசார் வீதிக்குக் குறுக்கே அணிவகுத்து நின்று ஊர்வலத்தைத் தடுத்தனர். ஊர்வலத்தினர் முன்னேற முயன்றபோது பொலிசாரினால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தோழர்கள் பலர் பலத்த காயங்களுக்குள்ளாகினர். அந்த இடம் போர்க்களம்போன்று காட்சியளித்தது. காயங்களுக்குள்ளான தலைமைத் தோழர்கள் சிலரை பொலிசார் இழுத்துச்சென்று பொலிஸ் நிலையத்தில் அடைத்தனர்.
இத்தனை இடர்கள் மத்தியிலும் ஊர்வலத்தினர் கலைந்துசெல்ல மறுத்து நின்றனர். நிலைமை மோசமாகுவதை உணர்ந்த பொலிஸ் உயரதிகாரிகள் முழக்கங்கள் இன்றி இருவர் - இருவர் என வரிசையாக யாழ்ப்பாணம் நோக்கிச் செல்ல அனுமதித்தனர். நீண்ட ஊர்வலமாக முன்னேறத் தொடங்கியது.

ஊர்வலம் யாழ்நகரை வந்தடையும்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். யாழ் முற்றவெளியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் டாக்டர் சு. வே. சீனிவாசகம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் நா. சண்முகதாசன் சிறப்புரையாற்றினார்.

தீண்டாமைக்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்குப் புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டித் தலைமை தாங்குமென தோழர் நா. சண்முகதாசன் அறைகூவல் விடுத்தார். கே. டானியலும் உரையாற்றினார். அக்டோபர் 21 -ம் திகதி ஊர்வலம் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும் மீண்டும் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் சுன்னாகம் சந்தை வளாகத்தில் 26 - 11 - 1966 அன்று நடைபெற்றது.  தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் நா. சண்முகதாசன் - எஸ். டி. பண்டாரநாயக்கா - கே. டானியல் - வி. ஏ. கந்தசாமி - சுபைர் இளங்கீரன் உட்படப் பலர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து வடபகுதியெங்கும் பல ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன.

1967 -ம் ஆண்டு மேதினம் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. ''அடிமை குடிமை முறை ஒழியட்டும்..! ஆலயத் தேநீர்க்கடைப் பிரவேசம் தொடரட்டும்..!!" என்ற கொள்கை நிலைப்பாட்டை கட்சி முன்னெடுத்துப் பிரச்சாரங்களை மேற்கொண்டது. சங்கானையில் தேநீர்க்கடை பிரவேசத்தைத் தொடர்ந்து போராட்டம் வெடித்தது. நிச்சாமம் கிராமம் சாதிவெறிக் குண்டர்களால் சுற்றி வளைக்கப்பட்டுத் தாக்குதலுக்குள்ளானது. பல வீடுகள் தீக்கிரையாகின. துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது. சங்கானை பட்டினசபையின் முன்னாள் தலைவரும் கம்யூனிஸ்ட் கட்சித் தோழருமான நா. முத்தையாவின் (மான்) வீடு குறிவைத்துத் தாக்கப்பட்டது.

அடிபணியாத விட்டுக்கொடுக்காத மனத்தைரியத்தோடு கிராம மக்கள் ஒன்றிணைந்து சாதிவெறியர்களைப் பின்வாங்கச் செய்தனர்.  கட்சித் தோழர்கள் பல இடத்திலிருந்தும் சென்று ஆதரவு வழங்கி உறுதுணையாக இருந்தனர். இலங்கை பாராளுமன்றம் முதல் சீன வானொலிவரை இது பேசப்பட்டது. சாதிவெறியர்களின் துப்பாக்கிச் சு+ட்டில் சின்னர் கார்த்திகேசு (வயது 55) மரணமடைந்தார். பின்னர் வன்னியன் குமரேசு என்ற போராளியும் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகினார். யாழ்ப்பாணம் முஸ்லீம் வட்டாரத்தில் மிகுந்த பலமுடையதாக விளங்கிய புரட்சிகர கம்யூஸ்ட் கட்சி வாலிப இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் முன்னணியில் நின்று செயற்பட்டார்கள். அன்று கட்சிப் பத்திரிகையான ''தொழிலாளி"யின் ஆசிரியராக தோழர் சுபைர் இளங்கீரன் பணிபுரிந்தார். தோழர்கள் எம். ஏ. சி. இக்பால் - சலீம் - காதர் - கன்சு+ர் - றசீன் - அஸீஸ் - கமால் உட்படப் பலர் முன்னணியில் இருந்து செயற்பட்டனர். சங்கானைப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில்தான் 1967-ம் ஆண்டு ''தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்" உருவாக்கப்பட்டது.

தீண்டாமைக்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்குப் புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டித் தலைமை தாங்குமென தோழர் நா. சண்முகதாசன் அறைகூவல் விடுத்தார்

யாழ்ப்பாண மாநகரசபை மண்டபத்தில் சங்கானைப் போராட்டத்தின் முதல் தியாகி ''சின்னர் கார்த்திகேசு அரங்கில்" தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் வெகுஜன இயக்கத்தின் அமைப்பாளராக கே. டானியல் (எழுத்தாளர்) - தலைவராக எஸ். ரி. என் நாகரத்தினம் - இணைச்செயலாளர்களாக அல்வாய் சி. கணேசன் - மட்டுவில் எம். சின்னையா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். உபதலைவர்களாக டாக்டர் சு. வே. சீனிவாசகம் - கே. ஏ. சுப்பிரமணியம் - நா. முத்தையா (மான்) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

மாவிட்டபுரம் - அச்சுவேலி - சாவகச்சேரி - கொடிகாமம் - மந்துவில் - மட்டுவில் - நெல்லியடி- கரவெட்டி - கன்பொல்லை -கோப்பாய் - மாதகல் - புன்னாலைக்கட்டுவன் ஆதியாம் இடங்கள் உட்படப் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. வெற்றிகள் பெறப்பட்டது..!

சாதிய தீண்டாமைக் கொடுமைக்கெதிரான புரட்சிகரக் கலை இலக்கிய படைப்புகள் மலர்ந்து இலக்கிய வரலாற்றில் அழியா இடம்பெற்றன. நெல்லியடி அம்பலத்தடிகளின் "கந்தன் கருணை" நாடகம் கிராமங்கள் தோறும் அரங்கேறியது. சுபத்திரனின் ''சங்கானைக்கென் வணக்கம்" கவிதை அழியாப் புகழ் பெற்றது. டானியலின் சிறுகதைகளும் நாவல்களும் பெரும்புகழ் படைத்தன.

1969 -ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் இரண்டாவது மாநாடும் 1979 -ம் ஆண்டு இயக்கத்தின் மூன்றாவது மாநாடும் யாழ்ப்பாணத்தில் சிறப்புற நடைபெற்றன.

* புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை வழிகாட்டல்
* சாதியம் - தீண்டாமை குறித்த தெளிவான பார்வை
* போராட்ட வழிமுறை பற்றிய தெளிவு
* எதிரி யார் - நண்பர் யார் - என்ற கணிப்பு
* கட்டுப்பாடான முறையில் போராட்ட நடவடிக்கை
* சாதிவாதப் போராட்டமாகவன்றி அனைத்து மக்களினதும் முற்போக்கு சக்திகளினதும் ஆதரவைப் பெற்றுக்கொண்டமை.
இளங்கோவன்
இத்தகைய தன்மைகளால் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து தொடர்ந்த நீண்ட போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சமத்துவ நீதியை நிலைநிறுத்தி வந்தமையையும் அதற்கு வழிகாட்டி தலைமைகொடுத்துச் செயற்பட்ட புரட்சிகர கம்யூஸ்ட் கட்சி வரலாற்றையும் நினைவிற்கொள்ள வேண்டும்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 25 October 2017 17:57