கார்த்திகேசன் மாஸ்ட்டர்- கார்த்திகேசன் 'மாஸ்ட்டர்' அவர்களின் நினைவாக வெளிவந்த நூலில் எழுத்தாளர் நீர்வை பொன்னையன் எழுதிய இக்கட்டுரை கார்த்திகேசன் 'மாஸ்ட்டர்' அவர்களின் ஆளுமையை , அவர் ஏன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் ஆதர்ச மனிதராக விளங்கினார் என்பதை நன்கு பிரதிபலிக்கும் கட்டுரை. இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவரது சமூக, அரசியற் செயற்பாட்டினை நன்கு விளக்குமொரு கட்டுரை. இதனையும் கூடவே அவரது புகைப்படத்தையும் எம்முடன் பகிர்ந்துகொண்ட அவரது புதல்வி ஜானகி பாலகிருஷ்ணனுக்கு நன்றி. - பதிவுகள் -


‘மனிதனது மதிக்க முடியாத இனிய உடமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும் அவன் ஒரு தடவைதான் வாழமுடியும். காலமெல்லாம் குறிக்கோளில்லாமல் பாழாக்கிவிட்டேனென்ற வருத்தம் வதைப்பதற்கு இடம் கொடுக்காத வகையில் அவன் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழவேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக என் வாழ்வு முழுவதையும் சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும் பொழுது கூறும் உரிமைபெறும் வகையில் அவன் வாழவேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவவொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.’ நிக்கொலாய் அஸ்றாவஸ்க்கிய் என்ற சோவியத் எழுத்தாளன் ‘வீரம் விளைந்தது’ என்ற தன் நவீனத்தில் மேற்கண்டவாறு கூறியுள்ளான்.

எங்கள் தோழன் கார்த்திகேசன் அவர்களும் தன் வாழ்வு முழுவதையும் தனது இறுதி மூச்சுவரை மனித குலத்தின் விடுதலைக்கான போராட்டம் என்ற பொன்னான லட்சியத்துக்காக அர்ப்பணித்துள்ளார். தோழர் கார்த்தி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர். அது மாத்திரமல்ல அவர் இலங்கையின் வடபுலத்தில் இடதுசாரி இயக்கத்தைப் பரப்பிய முன்னோடிகளில் முதன்மையானவர். அவர் ஓர் ஆழமான கல்விச் சிந்தனையாளர். தலைசிறந்த ஆசிரியன், அர்ப்பணிப்புள்ள சமூகத்தொண்டன், மனித நேயப்பண்பாளர், எளிமையான தூய வாழ்வைக் கடைப்பிடித்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஓர் உன்னத மார்க்ஸிசவாதி. அற்புதமான கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளன்.

மலேசியாவில் பிறந்து வளர்ந்து கல்விகற்று உயர்கல்வியை மேற்கொள்வதற்காக இலங்கை வந்தார் மு. கார்த்திகேசன். இலங்கைப் பல்கலைகக்கழக கல்லூரியில் அவர் மாணவனாக இருந்த காலத்திலேயே தனது லட்சியப் பயணமான மார்க்ஸிசப் பாதையில் காலடியெடுத்து வைத்தார். அன்று ஆரம்பித்த அவரது மகத்தான நீண்ட பயணத்தில் எண்ணற்ற இன்னல்களும் இடையூறுகளும் நேரிட்ட போதிலும், அவர் உறுதி தளராது, அர்ப்பணிப்புடனும், உளத்தூய்மையுடனும் விடாப்பிடியாக செயலாற்றி முன்னேறிச் சென்றுள்ளார்.

கொழும்பிலமைந்திருந்த இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில், ஏகாதிபத்திய பாசிச எதிர்ப்பு மாணவர் அமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்பட்டவர்களின் முன்னணியில் நின்றார் கார்த்திகேசன். அந்த மாணவர் அமைப்பின் குரலான ‘மாணவர் செய்தி’ (Student News) என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கிலம், கணிதம் முதலிய பாடங்களைக் கற்றார். ஆங்கிலத்தில் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறிய கார்த்திகேசன் அன்று இலங்கை அரசாங்க நிர்வாக சேவையில் சேர்ந்திருந்தாரானால் அவர் தனக்கு ஒரு வளமான சொகுசு வாழ்க்கையை இலகுவில் அமைத்திருக்க முடியும். பதிலாக மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபக முன்னோடிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக தோழர் கார்த்திகேசன் தமது கட்சிவேலையை ஆரம்பித்தார். அவர் கட்சியின் முழுநேர ஊழியராக இணைந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக முழுநேர ஊழியர்களான தோழர்கள் ஆரியவன்ச குணசேகர, ஐசோதிஸ், ஹரி அபேகுணவர்த்தன, பி.கந்தையா, கே.இராமநாதன், பிரேம்லால் குமாரசிறி, என். சண்முகதாசன், ஏச்.ஜி.எஸ். ரத்னவீர, மு. கார்த்திகேசன், அ.வைத்திலிங்கம், பீற்றர் கெனமன் ஆகியோர் தோழர் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்ஹா தலைமையில் இயங்கினர். இக்காலகட்டத்தில் சேவையாற்றிய கம்யூனிஸ்ட் கட்சி முழுநேர ஊழியர்கள் அனைவரும் லட்சிய வேட்கையுடன் பரித்தியாக உணர்வுடன் பொரளை கொட்டா றோட் கம்யூனிஸ்ட் கட்சிக் காரியாலயத்தில் ‘கம்யூன்’ வாழ்க்கையை மேற்கொண்டனர். இத்தோழர்கள் ஒவ்வொருவரும் தத்தமக்குக்கிடைத்த சொற்ப ஊதியத்தை பொதுமையாக ஒன்று சேர்த்து தங்கள் கம்யூன் வாழ்க்கையை மேற்கொண்டனர். இது ஒரு லட்சிய ‘கம்யூன்’ வாழ்க்கை முறையாகும். தோழர் கார்த்திகேசன் கொழும்பிலிருந்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆங்கில வார ஏடான போவர்ட் (Forward) பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினர். கட்சி தோழர் கார்த்தியை இலங்கையின் வடபுலத்தில் கட்சியை ஸ்தாபிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு பணித்தது. அவர் முழுமனதுடன் கட்சியை யாழ் பிரதேசத்தில் ஸ்தாபிப்பதற்கு சென்றார்.

யாழ் மண்ணில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஸ்தாபித்து கட்சிக் கொள்கையைப் பரப்பியவர்களில் தோழர் கார்த்திகேசன் முதன்மையானவர். கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய தோழர் கார்த்தி, தமது குடும்ப வாழ்க்கையை மேற்கொள்வதில் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிட்டது. இதன்காரணமாக அவர் யாழ் இந்துக்கல்லூரியில் ஓர் ஆசிரியராக கடமையாற்றும பொறுப்பை மேற்கொள்ளும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். யாழ் சமூகத்தின் மிகக்கொடுமையான பழைமைவாத, வைதீக இந்துக்கள் செறிந்து வாழ்கின்ற வண்ணார் பண்ணையில் யாழ் இந்துக் கல்லூரி அமைந்திருந்தது. இப்படிப்பட்ட ஒரு சமூகப் பின்னணியைக் கொண்ட கல்லூரியில் ஒரு மார்க்ஸிசவாதி சேவையாற்றுவது ஒரு பெரும் சவாலாக இருந்தது. தோழர் கார்த்தி மன உறுதியுடன் இந்தச் சவாலை ஏற்று பணியாற்ற முன் வந்தார். அவர் இக்கல்லூரியில் தமது அர்ப்பணிப்பான சேவை மூலம் பெரும் எண்ணிக்கையான நற்பிரஜைகளை உருவாக்கியுள்ளதுடன் பெரும் தொகையான முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களையும் உருவாக்கினார். இக்கால கட்டத்தில் தமது அர்ப்பணிப்பான சேவை மூலம் தோழர் கார்த்தி மாணவர் சமுகத்தில் அமோக ஆதரவைப் பெற்றார். அவரைச் சுற்றி ஒரு பெரும் முற்போக்கு மாணவர் படையணி உருவாகியது. அது மாத்திரமல்ல தமது அர்ப்பணிப்பான ஆசிரியத் தொண்டின் மூலமும், பரித்தியாக உணர்வுடைய சமூகத் தொண்டின் மூலமும் தோழர் கார்த்திகேசனின் மார்க்ஸிசக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத யாழ் சமூக பழைமைவாத வைதீக இந்துக்களின் கணிசமான தொகையினரது மதிப்பையும், ஆதரவையும் அவரால் பெற்றக்கொள்ள முடிந்தது. இதன் காரணத்தால்தான் அவர் அன்றைய காலகட்டத்தில் யாழ் மாநகரசபைத் தேர்தலில், மிகவும் பணபலம் வாய்ந்த அப்பிரதேசவாசியான ஒரு பெரும்புள்ளியைத் தோற்க்கடித்து மாநகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, யாழ் மாநகரசபை மக்கள் அனைவருக்கும் சேவை செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.

கல்வி ஒரு தேசத்தின் வளத்திற்கும் மேம்பாட்டுக்கும் அத்தியாவசியமானது. ஆனால் அத்தேசத்தில்லுள்ள சகல தரப்பினருக்கும் கிடைக்கக்கூடியதாக அக்கல்வி முறை அமைந்திருக்க வேண்டும். ஆனால் முதலாளித்துவ நாடுகளிலுள்ள கல்வி முறை, அந்நாடுகளிலுள்ள சமூகத்தின் ஒரு சிறு பிரிவினருக்கு மட்டும்தான் அதாவது சுரண்டும் வர்க்கத்தைச் சார்ந்த பிள்ளைகளுக்கு மாத்திரம்தான் கல்விகிடைக்கக்கூடிய வகையில் அமைந்தள்ளது. அது மாத்திரமல்ல இந்த நாடுகளிலுள்ள கல்விக்கும் நாட்டின் பொருளாதார உற்பத்திக்கும் எதுவித தொடர்புமற்ற கல்விமுறை அமைந்துள்ளது. இக்கல்விமுறை அகற்றப்பட்டு, சமூகத்தின் சகலருக்கும் கல்விகிடைக்கக் கூடியதாகவும், நாட்டின் உற்பத்தித் துறைக்கும் நெருங்கிய தொடர்புள்ள சோஷலிசக் கல்விமுறை அமைந்திருக்க வேண்டும் என்ற கல்விச் சிந்தனையை உடையவரக இருந்தார் தோழர் கார்த்தி. இதற்காகத்தான் அவர் தமது வாழ்நாளில் போராடினார்.

ஆசிரியரும் டாக்டரும்தான் ஒரு சமூகத்தின் இரு விழிகள். ஒரு சமூகத்தை ஆரோக்கியமுள்ளதாக உருவாக்குவதற்கு ஆசிரியரும் டாக்டரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று தோழர் கார்த்தி அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். ஒரு சமூகத்தை விழிப்படையச் செய்து அதை மேம்படுத்துவதற்கு ஆசிரியனுடைய பங்கு அத்தியாவசியம். அன்று யாழ் சமூகத்தின் விழிப்புக்கும் மேம்பாட்டுக்குமாக பணியாற்றிய ஆசிரியப் பெருந்தகைள் பலர் இருந்துள்ளனர். இவர்களில் பலர் சுதந்திரம், ஜனநாயகம், மனிதநேயம், சமத்துவம் பற்றிய சிந்தனைகளை வலியுறுத்தி யாழ் மண்ணில் விதைத்துப் பரப்புவதில் முழுமூச்சாக ஈடுபட்டனர். இவர்களில், கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் ஹன்டி பேரின்பநாயகம், ஸ்கந்தவரோதயா கல்லூரி ஓறேற்ரர் சுப்பிரமணியம், பரமேஸ்வராக் கல்லூரி அதிபர் சிவபாதசுந்தரம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களான அ.வைத்திலிங்கம், மு.கார்த்திகேசன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அனைவரும் மார்க்ஸிசவாதிகளாகவும் இடதுசாரிகளாகவும் இருந்தனர். இவ்வாசிரியப் பெரும்தகைகள் தமது அர்ப்பணிப்பான சேவை மூலம் யாழ் சமூகத்தின் பெருமதிப்பைப் பெற்றுள்ளதுடன் இவர்கள் உத்தம ஆசிரியர்களுக்கான உதாரண புருஷர்களாகத் திகழ்கின்றனர்.

தோழர் கார்த்திகேசன் வடபுலத்திற்குச் சென்றபொழுது, யாழ் சமூகத்தின் எந்தப் பகுதி மக்களுக்கு, அதாவது சமூகத்தின் எந்த மட்டத்திலுள்ள மக்களுக்கு தமத சேவை அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றது என்பதைச் சரியாக இனம் கண்டு, அப்பகுதி மக்களிடையே அவர் தமது அரசியல் வேலையை ஆரம்பித்தார். யாழ் சமூகத்தில் சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்டு, சுரண்டிச் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்ற சமூகத்தினர், நிலமற்ற விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் மத்தியில் தமது அரசியல் வேலையை தோழர் கார்த்தி ஆரம்பித்தார். அவர் தம்மைப் போல அன்று அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்ற தோழர்கள் அ.வைத்திலிங்கம், ஐ.ஆர்.அரியரத்தினம், எம்.சி.சுப்பிரமணியம், இராமசாமி ஐயர், வி.ஏ.கந்தசாமி, டாக்டர் சினிவாசகம், ஆர்.ஆர்.பூபாலசிங்கம், மகாலிங்கம், ஜனகன் ஆகியோருடன் இணைந்து வேலை செய்தார். இவர்களுடன் தோழர்கள் இளங்கீரன், கே.டானியல், டொமினிக் ஜீவா, அரசடி இராசையா, எஸ். பொன்னுத்துரை ஆகியோருடன் நானும் பின் இணைந்து கொண்டோம்.

யாழ் குடாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனமயமாக்கப்படுவதற்கு முன்னர் யாழ் ஆஸ்பத்திரிக்குப் பின்னாலுள்ள விக்ரோரியா றோட்டிலமைந்துள்ள, தோழர் கார்த்தியினால் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள அவருடைய வீட்டில்தான் கட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அநேகமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் கட்சியின் அரசியல் வகுப்புக்கள் அல்லது கூட்டங்கள் நடத்தப்படும். 1947ம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் நடத்த அரசியல் வகுப்பில் நான் பங்குபற்றினேன். அந்த வகுப்பை எடுத்தவர்தான் தோழர் கார்த்திகேசன் என்பதை வகுப்பு முடிந்த பின்னர் அறிந்தேன். ‘மனித சமூதாய வளர்ச்சியின் வரலாற்றை' மிக இலகுவான முறையில் தெளிவாக எடுத்துக் கூறினார் தோழர் கார்த்திகேசன். விடயம் மிகவும் கடினமானதக இருந்தாலும் அதை மிகவும் எளிமையாகவும் நாம் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் சுவாரசியமான முறையிலும் எடுத்துக் கூறினார் தோழர் கார்த்தி. கொழும்பிலிருந்து கட்சித் தலைவர்கள் வருகின்ற பொழுதெல்லாம் கார்த்தியின் வீட்டிலேதான் தங்குவார்கள்.

பின்னர் கட்சிக் காரியாலயம் வின்சர் படமாளிகைச் சந்திக்கு சமீபமாக உள்ள ஸ்ரான்லி வீதியிலமைந்த மஸ்கன் கட்டிடத்திற்குப் பக்கத்திலுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தின் கீழ் மாடியில் படக்கடையும் மேல்மாடியில் கட்சிக்காரியாலயமும் இயங்கியது. இதன் பின்னர் ஸ்ரான்லி வீதியிலுள்ள ‘கனகபவனம்’ மேல்மாடியில் காரியாலயம் இயங்கியது. கட்சி பிளவுபட்ட பின்னர் ஸ்ரான்லி வீதியிலுள்ள ‘மொம்ஸாக் பில்டிங்’ என்று அழைக்கப்பட்ட கட்டிடத்தின் மேல் மாடியில் கட்சி அலுவலகம் இயங்கியது. இதன் பின்னர் யாழ் வீதியிலமைந்த ஒரு வீட்டிலும், பின்னர் ஆஸ்பத்திரிச் சந்திக்க அருகாமையிலமைந்த இன்சூரன்ஸ் கூட்டுத்தாபனத்திற்குப் பக்கத்திலுள்ள கட்டிடத்திலும், இதையடுத்து ஸ்ரான்லி வீதி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு முன்னாலுள்ள யாழ் புத்தகநிலைய கட்டிடத்தில் கட்சி அலுவலகம் இயங்கியது. கட்சிக் காரியாலயம் வாடகைக் கட்டடங்களில் இயங்கியதைப் போல தோழர் கார்த்திகேசனின் குடும்பமும் விக்ரோரியா றோட், கலட்டி அம்மன் கோவிலடி, நார்ச்சிமார் கோவிலடி, சிவப்பிரகாசம் வீதி, மறுபடி கலட்டிப் பிள்ளையார் கோவிலடி, நார்ச்சிமார் கோவில் முன்னமைந்த இராமநாதன் வீதி ஆகிய வண்ணார்பண்ணையில் அமைந்த வாடகை வீடுகளில்தான் வாழ்ந்து வந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்து அதைக் கட்டி எழுப்பும் வேலையில் முழுமூச்சுடன் ஈடுபட்ட தோழர் கார்த்தி அதேவேளைதான் ஒரு கம்யூனிஸ்டாக வாழந்து முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அவர் விசால உள்ளம் படைத்தவராக இருந்ததுடன், வற்றாத அன்புள்ளம் கொண்டவர். நேர்மையான தூய எளிமையான வாழ்வைக் கடைப்பிடித்தவர். கட்சியினதும், கட்சி உறுப்பினர்களதும் நலனைத் தனது சொந்த நலனாகக் கருதி செயலாற்றியவர். தான் வரித்துக்கொண்ட தத்துவத்தையும் தமது வாழ்வையும் இணைத்து செயல்பட்டவர். அவர் சரியான கோட்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்து வந்ததுடன், தவறான கருத்துக்களுக்கும் செயல்பாடுகளுக்கும் எதிராக உறுதியாக விடாப்பிடியாகப் போராடியவர். கட்சிக்குள் காலத்துக்காலம் தலை தூக்கிய அதிதீவிர இடது சாரிப் போக்கிற்கும், வலதுசாரிச் சந்தர்ப்பவாதப் போக்கிற்கும் எதிராக தத்துவார்த்த ரீதியாக உறுதியாகவும் விடாப்பிடியாகவும் போராடி கட்சியைச் சரியான வழியில் செல்ல நெறிப்படுத்தியவர் தோழர் கார்த்தி. காலத்துக்குக்காலம் சில சந்தர்ப்பவாதிகள் கட்சியில் பிளவை ஏற்படுத்தியபொழுது, தோழர் கார்த்தி நிதானமாகவும் உறுதியாகவும் நின்று தத்துவார்த்த ரீதியில் போராடி கட்சியைக் காப்பாற்றியுள்ளார். கட்சி உறுப்பினர்களையும் கட்சி ஊழியர்களையும் தட்டிக்கொடுத்து வளர்த்தெடுப்பதில் கரிசனையுடன் செயல்பட்டார்.

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தூய்மையான எளிமையான கம்யூனிஸ்ட்டிற்குரிய சீரிய வாழ்க்கையைக் கடைப்பிடித்தவர் தோழர் கார்த்தி. இந்தியாவின் பிரதமராக இருந்த லட்சிய புருஷர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் வாழ்ந்த காலத்திலும் அவர் இறந்த பின்னரும் அவரது குடும்பம் வறுமை நிலையிலேயே இருந்தது. சாஸ்திரிக்கு எதுவித வங்கிக் கணக்கோ பெரும் சொத்தோ இருந்ததில்லை தமிழ் நாட்டின் கர்மவீரர் காமராஜர் மறைந்தபின் அவரது தயார் வாடகை வீட்டிலேதான் வாழ்ந்தார். மேற்கு வங்க முதல்வர் தோழர் ஜோதி பாசு தேசிய உடையில் எளிமையான வாழக்கையை நடத்தினார். அவருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மெய்ப்பாதுகாவலர்கள் எவருமின்றி சுயாதீனமாக வாழ்ந்தவர். கேரளாவின் முதல்வராக இருந்த நம்பூதிரிபாட் தமது இறுதிக்காலத்தில் அவர் எழுதிய நூல்கள் மூலம் கிடைத்த றோயல்ரி (உரிமைக்கட்ணம்) மூலம்தான் அவர் வசித்த வீட்டு வாடகைப் பணத்தைக் கட்டிவந்தார். வியட்நாம் மக்களின் மகத்தான தலைவர் ஹோசி மின் அவர்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பொழுது, அந்த வைபவத்திற்கு செல்வதற்கு உடுப்பு இல்லாமல் தனது சகாவின் உடுப்பை இரவலாக வாங்கி உடுத்துச் சென்றார். அவர் இறக்கும் வரை மூன்றே மூன்று உடைகளை மாத்திரம் தனக்கு சொந்தமாக வைத்திருந்தார். அவருக்கு எதுவித சொத்தோ செல்வமோ என்றுமிருந்ததில்லை. அவரது வற்றாத செல்வம் வியட்நாமிய மக்கள்தான். இவ்வாறான லட்சிய புருஷர்களைப் போல தோழர் கார்த்தி தூய்மையான வாழ்வைக் கடைப்பிடித்தவர். அவர் எதுவித சொத்தையும் சேகரித்தவருமல்ல, வைத்திருந்தவருமல்ல. வறுமையில் செம்மை கண்டவர். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர் தோழர் கார்த்தியின் மனைவி. இருபதாம் நூற்றாண்டின் தத்துவ மேதை கார்ள் மார்க்ஸ் அவர்களது சாதனைகளுக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தவர் அவரது மனைவி ஜென்னி மார்க்ஸ். மகத்தான தலைவர் லெனின் அவர்களது புரட்சி நடவடிக்கைகளுக்கும் வெற்றிக்கும் உறுதுiணாகவும் பக்கபலமாகவும் இருந்தவர் அவரது வாழ்க்கைத் துணைவி குப்ஸ்கயா. அதேபோல தோழர் கார்த்தியின் உன்னத வாழ்விற்கு உறுதுணையாகவும் பங்காளியாகவும் இறுதிவரை இருந்தவர் அவரது வாழ்க்கைத் துணைவியார் வாலாம்பிகை என்பது யாவரும் அறிந்த உண்மை.

தனது சொந்த  நலனிலும் பார்க்க, தன் குடும்ப நலனிலும் பார்க்க கட்சியின் நலனே பெரிதெனக் கொண்டு அதற்காக இரவும்பகலும் இடையறாது உழைத்தவர் தோழர் கார்த்தி. கட்சியை வடபுலத்தில் ஸ்தாபித்தவர்களில் முதன்மையானவரும், அதைக் கட்டி வளர்ப்பதில் தோழர் கார்த்தி முனைப்பாகச் செயல்பட்டார். கட்சிக் கிளைகளை யாழ் நகரத்தின் பலபகுதிகளில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் ஸ்தாபித்தார். அத்துடன் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்சிக் கிளைகளை நிறுவுவதில் முனைந்து அதில் குறிப்பிடத்தக்களவு வெற்றியையும் நிலை நாட்டக்கூடியதாக இருந்தது. யாழ் நகரின் கொட்டடி, ஆரிய குளத்தடி, வண்ணார்பண்ணை, பலாலி வீதி, அரியாலை, குருநகர், முஸ்லிம் வட்டாரம் போன்ற இடங்களிலும் குடாநாட்டின் முக்கிய இடங்களான காங்கேசன்துறை, பருத்தித்துறை, உடுப்பிட்டி, நெல்லியடி, கரவெட்டி, மட்டுவில் போன்ற இடங்களிலும் கட்சிக் கிளைகளை அமைப்பதில் கரிசனையுடன் முயற்சித்து இம் முயற்சியில் குறிப்பிடத்தக்களவு வெற்றிகாணக்கூடியதாக ஏற்படுத்தினார். இப்பிரதேசங்களில் தோழர் கார்த்தியின் உதவியுடன் கிரமமாக குறிப்பிட்ட கால கட்டத்திற்கு அரசியல் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. இப்பகுதிகளில் கட்சிப் பத்திரிகைகளும் கிரமமாக குறிப்பிட்ட காலத்திற்கு விற்பனையாகின. இப்பிரதேசங்களிலுள்ள கட்சி உறுப்பினர்களை அரசியல் தத்துவார்த்த ரீதியில் வளர்த்தெடுப்பதில் கார்த்தி அக்கறையுடன் செயல்பட்டார். கட்சி உறுப்பினர்களுடன் இதயபூர்வமாக தோழமையுடன் பழகியதன் மூலம் அவர்களது பேரன்பையும் பெரு மதிப்பையும் தோழர் கார்த்தி பெற்றார். கட்சி உறுப்பினர் அனைவரும் ‘எங்கள் தோழர் கார்த்தி’ என்று உரிமையுடனும் வாஞ்சையுடனும் அழைத்து வந்துள்ளனர்.

கட்சிப் பணிகளை உறுப்பினர்கள் செய்யும் பொழுது கட்சியின் தலைவர்களான தோழர்கள் கார்த்தி, எம்.சி. சுப்ரமணியம், இராமசாமி ஐயர் ஆகியோர் இணைந்து உற்சாகத்துடன வேலை செய்வார்கள். கட்சிக்கு நிதி சேகரிப்பதிலும் கட்சிப் பத்திரிகையை யாழ் பஸ் நிலையத்திலும் கடைத் தெருவிலும் விற்பதிலும் கட்சி உறுப்பினர்களாகிய எம்முடன் இம் மூவரும் சேர்ந்து இயங்குவார்கள். கட்சிப் பிரசாரக் கூட்டங்களையும் மேதினக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதிலும் ஏனைய தயாரிப்பு வேலைகளிலும் இம் மும்மூர்த்திகள் ஊக்கத்துடன் எம்முடன் செயற்படுவர். இக்கூட்டங்களுக்கான போஸ்டர்களை ஒட்டுவதிலிருந்து கூட்டத்துக்கான மேடைகளை அமைப்பது வரை இவர்கள் எம்முடன் சேர்ந்து வேலை செய்வார்கள். அதுமாத்திரமல்ல கூட்டம் முடியும்வரை இவர்கள் எம்முடன் நின்று மேசையைக் கழற்றி அகற்றப்படும்வரை எம்முடன் சேர்ந்து வேலை செய்வார்கள். கட்சியின் கூட்ட சுவரொட்டிகளை (போஸ்டர்கள்) இரவு வேளைகளில் நாங்கள் ஒட்டும்பொழுது பொலிசாரின் கெடுபிடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். இதைச் சமாளிப்பதற்கு இம்மூவரும் இரவு முழுவதும் யாழ்நகர வீதிகளில எம்முடன் அலைந்து திரிவார்கள். முக்கிய இடங்களில் சுவரொட்டிகளை பொலிசாரோ, கட்சி விரோதிகளோ கிழித்து நாசமாக்காமலிருக்கும் வகையில் உயரமான இடங்களில் ஒட்ட வேண்டியநிலை ஏற்படும். ‘தோழர் என்னுடைய தோளில் ஏறிநின்று போஸ்டரை உயரத்தில் ஒட்டு’ என்று வாட்டசாட்டமான உடல்வாகைக் கொண்ட தோழர் இராமசாமி ஐயர் கட்டளையிடுவார். யாழ் சுண்டிக்களி பிரதான வீதியிலமைந்துள்ள ‘கொன்வெனட்’ சுவர் ‘கம்யூனிஸ்ட் கட்சியின் டயறி’ என்று அழைக்கப்படும். 1953ம் ஆண்டின் ஹர்த்தால் காலத்திலிருந்து 70ம் ஆண்டு வரையான காலபப்பகுதிவரை முதலாளித்துவ யூ.என்.பி. எதிர்ப்பு சுலோகங்கள் சிவப்பு மையினால் பெரிய எழுத்துக்களில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும்.

யாழ் வின்சர் தியேட்டருக்கண்மையில் கட்சி அலுவலகம் இயங்கிய காலகட்டத்தில், கட்சிக் கூட்டங்கள் முடிந்த பின்னர் அல்லது கட்சிப் பத்திரிகை விற்பனைக்குப் பின்னர் தேனீர் குடிப்பதற்கு நாங்கள் யாழ் ஆஸ்பத்திரி வீதியிலமைந்துள்ள சிங்ககிரி பேக்கரிக்கு அருகாமையிலுள்ள ஒரு சிங்களவரின் கடைக்கு செல்வது வழக்கம். ஏன் இந்தக் குறிப்பிட்ட கடைக்கு மாத்திரம் நாங்கள் தேனீர் குடிக்க வருகின்றோம் என்று நான் ஒருநாள் தோழர் கார்த்தியைக் கேட்டேன். ‘பிளேயின் ரீ, பொடி நடை, பீக்கொக் சிகறட், இவைதான் கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு இங்கு கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன’ என்று கார்த்தி நகைச்சவையுடன் கூறியதுடன் இவற்றை நகரிலுள்ள ஏனைய தமிழ் தேனீர்க் கடைகள் எங்களுக்கு தரமாட்டார்கள். இந்த ஒரே ஒரு சிங்களத் தேனீர் கடையில்தான் எங்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்று அர்த்தபுஷ்டியுடன் கூறினார். இத்தருணத்தில்தான் சாதி ஒடுக்குமுறையின் தார்ப்பரியத்தை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. சாதி ஒடுக்குமுறைக்கெதிராக தோழர் கார்த்தியின் வழிகாட்டுதலுடன் போராடிவந்த கம்யூனிஸ்ட் கட்சியை அன்றைய தமிழ் மேட்டுக்குடியினர் ‘நளக்கட்சி’ என்று திமிர்த்தனத்துடன் கூறினர். கம்யூனிஸ்ட் கட்சியினதும் தோழர் கார்த்திகேசனதும் வழிகாட்டுதலுடன் சிறுபான்மைத் தமிழர் மகாசபை தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆகிய ஸ்தாபனங்கள் நிறுவப்பட்டு, சாதி ஒடுக்கு முறையைத் தகர்ப்பதற்காக சாத்வீகமான முறையிலும், ஆயுதம் தாங்கிய முறையிலும் பல போராட்டங்கள் யாழ் மண்ணில் நடத்தப்பட்டு குறிப்பிடத்தக்களவு வெற்றிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன.

வடபிரதேசத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியெழுப்புவதில் தோழர் கார்த்திகேசன் கரிசனை காட்டியதோடல்லாமல், கட்சியின் வெகுஜன அமைப்புக்களான தொழிற்சங்கம், வாலிப சங்கம், சீன சோவியத், வியட்நாமிய நட்புறவுச் சங்கங்கள், ஆசிரிய சங்கம் போன்றவற்றையும் கட்டி எழுப்புவதில் ஆர்வத்துடன் செயல்பட்டார். அறுபதாம் எழுபதாம் ஆண்டுகளில் நான் இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தின் (C.T.U.F) வடபிராந்திய பிரதிநிதியாக செயற்பட்ட காலகட்டத்தில் தோழர்கள் கார்த்திகேசனும், வீ.ஏ.கந்தசாமியும் எனக்கு வழிகாட்டியாகவும் போராட்டத் தோழர்களாகவும் செயல்பட்டார்கள். இலங்கைப் போக்குவரத்துச்சபை (C.T.B) தொழிற் சங்கம், காங்கேசன் தொழிற்சாலை தொழிலாளர் சங்கம், பரந்தன் இராசாயன தொழிற் சாலையின் தொழிலாளரின் சங்கம், பீடித் தொழிலாளர் சங்கம், வல்லை நெசவாலை தொழிலாளர் சங்கம், ஆனையிறவு உப்பள தொழிலாளர் சங்கம், ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை தொழிலாளர் சங்கம், மில்க்வைற் சோப் தொழிலாளர் சங்கம், யாழ் நகர சாய்ப்புச் சிப்பந்திகள் சங்கம், வடபிரதேச சினிமா படமாளிகைத் தொழிலாளர் சங்கம் ஆகியவை இலங்கைத் தொழிற் சங்க சம்மேளனத்துடன் இணைந்திருந்தன. வட பிரதேசத்தில் இத் தொழிற்சங்கங்களை ஸ்தாபிப்பதிலும் வலுப்படுத்துவதிலும் நாம் பலநெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த இக்கட்டான வேளைகளில் தோழர் கார்த்தி எமக்கு அர்த்தபுஷ்டியான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் நல்கி பெரும் உறுதுணையாகச் செயற்பட்டார். இத் தொழிற்துறைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்களது உரிமைகளையும் கோரிக்கைகளையும் வென்றெடுப்பதற்கு நாம் மிகக் கடினமான நீண்டகாலப் போராட்டங்களை நடாத்தவேண்டியிருந்தது. இந்த தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டகால கட்டங்களின்போது இத்துறைகளைச் சார்ந்த நிர்வாகத்தினரதும், பொலிஸ் தரப்பினரது அச்சுறுத்தல்களுக்கும் அடக்கு முறைக்கும் தொழிலாளர்கள் முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ் நிலைகளில் தோழர் கார்த்திகேசன் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் நெறிப்படுத்தல்களையும் வழங்கி இப்போராட்டங்கள் வெற்றியீட்டுவதற்கு பெரும்பங்காற்றியுள்ளார். இதன் விளைவாக இத் தொழிற் சங்கங்களின் தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் கம்யூனிஸ்ட் கட்சியின் மேதின ஊர்வலங்களிலும் கட்சியின் பல போராட்டங்களிலும் உணர்வு பூர்வமாக பங்கு பற்றி வெற்றிவாகை சூட்டச் செய்துள்ளார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் துணை ஸ்தாபனமான வடபிரதேச கம்யூனிஸ்ட் வாலிப சங்கத்தை ஸ்தாபித்ததில் தோழர் கார்த்தி முன்னணியில் நின்று செயலாற்றினார். இவ்வாலிபர் சங்கம் வடபிரதேசத்தில் கட்சியின் செயல்பாடுகளுக்கும், தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திற்கும், தொழிற்சங்கப் போராட்டங்களுக்கும் உறுதுணையாக நின்று பெரும்பங்காற்றியுள்ளது. இவ்வாலிப சங்கத்தின் கிளைகள் யாழ் நகரின் பல பகுதிகளில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற கொட்டடி, நாவாந்துறை, யாழ் பலாலி வீதி, கொழும்புத்துறை, அரியாலை, ஆரிய குளம், முஸ்லிம் வட்டாரம், வண்ணார் பண்ணை ஆகிய இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டன. அதேவேளை யாழ் நகரத்திற்கு வெளியே நெல்லியடி, பருத்தித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, துன்னாலை, காங்கேசன்துறை, கலட்டி, தெல்லிப்பளை, சுன்னாகம், இணுவில், சங்கானை, சுழிபுரம், மட்டுவில், கொடிகாமம், அச்சுவேலி, ஆவரங்கால் ஆகிய இடங்களில் வாலிப சங்கக் கிளைகள் நிறுவப்பட்டன. இக்கிளைகளில் கட்சியின் அரசியல் வகுப்புக்கள் அதாவது மார்க்ஸிசம் லெனினிஸசம் மாஓசேதுங் சிந்தனை பற்றிய அரசியல் வகுப்புக்களும், அரசியல் முகாம்களும் நடத்தப்பட்டன. இதன் விளைவாக இவ்வாலிபர் சங்க கிளைகளின் உறுப்பினர்கள், கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய சகல வெகுஜனப் போராட்டங்களிலும் உணர்வு பூர்வமாகக் கலந்து பலசாதனைகளை நிலை நாட்டியுள்ளனர்.

கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கத்தின் வடபிரதேச மகாநாடுகளையும் அரசியல் முகாம்களையும் நடத்துவதற்கு உருப்படியான ஆலோசனைகளையும் திட்டங்களையும் வகுப்பதற்கு தோழர் கார்த்தி அளப்பரிய பங்கினை வழங்கியுள்ளார். இன்றும் இப்பிரதேசங்களிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் தோழர் கார்த்தியை மறக்காமல் தமக்கு இன்னல்கள் நேரிடும் வேளைகளில் நினைவுகூருகின்றனர். வடபிரதேச கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கத்திற்கு நானும் தோழர் கே. ஏ. சுப்ரமணியமும் தலைமை தாங்கி ஆர்ப்பாட்ட ஊர்வலங்களையும் பல போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.

வடபிரதேசத்தில் குறிப்பாக அறுபது எழுபதுகளில் வன்னிப் பிரதேசத்தில் முல்லைத் தீவு, கிளிநொச்சி, மல்லாவி, வன்னிக்குளம் ஆகிய பகுதிகளில் விவசாய சங்கங்களை அமைத்து, அப்பகுதியிலுள்ள விவசாயிகளின் உரிமைகளுக்காக பலபோராட்டங்களை நடத்தி பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம். இப்பிரதேசங்களிலுள்ள உயர் பதவி வகிக்கின்ற விவசாய நீர்பாசன உயர் அரசாங்க அதிகாரிகளதும் பெருநில உடமையாளர்களதும் அதிகாரத்திமிருக்கும் பாரபட்சங்களக்கும் எதிராகப் போராடி வெற்றி பெற்றள்ளோம். இப்போராட்டங்களில் என்னுடன் இணைந்து தோழர் வீ.ஏ.கந்தசாமி தமது வாதத்திறமையாலும் தீவிர போராட்ட உணர்வு மூலமும் பெரும் பங்காற்றியுள்ளார்.

எமது நாட்டில் ஆசிரிய சமூகத்தைப் பிளவுபடுத்தி இனவாத அடிப்படையில் சிங்கள, தமிழ் பகுதிகளில் சிங்கள ஆசிரியர் சங்கங்களையும், தமிழ ஆசிரியர் சங்கத்தையும் நிறுவி செயல்பட்டு வந்துள்ளனர். இந்த இனவாத அணுகுமுறைக்கு மாற்றீடாக ‘ஜாதிக்க குரு சங்கமய’ (தேசிய ஆசிரியர் சங்கம்) என்ற முற்போக்கு சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டு செயலாற்றி வருகின்றது. இதன் கிளையை வடபிரதேச நிறுவி ஆசிரிய சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்குடன் தோழர் கார்த்தி செயல்பட்டு வந்தள்ளார்.

தோழர் கார்த்தியுடன் அ.வைத்திலிங்கம், ஐ.ஆர்.அரியரத்தினம், எம்.பி. செல்வரத்தினம், சிவலிங்கம், எம்.குமாரசாமி, எஸ்.பி.நடராஜா ஆகியோர் இணைந்து இலங்கை தேசிய ஆசிரியர் சங்கத்தை ஸ்திரப்படுத்துவதற்கு தீவிரமாக உழைத்தனர்.

இந்த நாட்டில் பிற்போக்கு முதலாளித்துவ சக்திகளை முறியடித்து ஒழித்துக் கட்ட வேண்டும் என்றால் முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். அதாவது இடது சாரிகள் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை முன்வைத்துத் தோழர் கார்த்தி போராடி வந்தள்ளார். பெருமுதலாளித்துவக் கட்சியான யூ.என்.பியை முறியடித்து ஒழித்துக் கட்டவேண்டும் என்றால் சகல முற்போக்குச் சக்திகளும் அதாவது இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட், சமசமாஜக் கட்சிகளும் ஏனைய சிறிய இடதுசாரிக் கட்சிகளும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல், நிரந்தரமாக ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்பட்டு செயலாற்ற வேண்டுமென்று தோழர் கார்த்தி வலியுறுத்தி வந்துள்ளார். அதேவேளை இந்த ஐக்கியம், இடது சாரிக் கட்சிகளின் தலைமை மட்டங்களில் மாத்திரமல்லாமல், அடிமட்ட உறுப்பினர்கள் மத்தியிலிருந்தே கட்டி எழுப்பப்பட வேண்டும் என்று கார்த்தி வலியுறுத்தி வந்தது மாத்திரமல்லாமல் அதற்காகப் போராடி வந்துள்ளார். அதாவது இந்த நாட்டில் ஒரு இடதுசாரிகளின் ஐக்கிய முன்னணியின் மூலம்தான் முதலாளித்துவ யூ.என்.பி. தலைமையிலான பிற்போக்குச் சக்திகளை முறியடித்து ஒரு முற்போக்கான அரசை நிறுவமுடியும் என்ற கூறிவந்துள்ளதுடன் இதற்காகவும் அந்தரங்க சுத்தியுடனும் போராடி வந்துள்ளார் தோழர் கார்த்தி.

கம்யூனிஸ்ட்டுகள் வரட்டுச் சித்தாந்தவாதிகள், அவர்கள் கலாரசனையற்றவர்கள், அவர்கள் மத்தியில் சிறந்த எழுத்தாளர்களோ கலைஞர்களோ இல்லை என்ற கருத்தை மக்கள் மத்தியில் பரப்புவதில் பிற்போக்கு முதலாளித்துவ சக்திகள் ஈடுபட்டு வந்துள்ளன. இது ஒரு தவறான பொய்ப்பிரசாரமாகும். பிற்போக்குச் சக்திகளின் இப் பொய்ப்பிரசாரத்தைத் தகர்க்கும் வகையில், அறுபதாம் எழுபதாம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் அணியைச் சார்ந்த முற்போக்கு எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஸ்தாபன ரீதியாக ஒன்றுதிரண்டு, கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் நடத்திய வெகுஜனப் போராட்டங்களில் உணர்வுபூர்வமாகப் பங்குகொண்டு அந்த மக்கள் போராட்ட அனுபவங்களை கலைத்துவத்துடன் மறுபிரசவிப்புக்குள்ளாக்கி தரமான சிருஷ்டிகளைப் படைத்துள்ளார்கள். இதுதான் மக்கள் இலக்கியம் அல்லது முற்போக்கு இலக்கியம் என்று கூறப்படுகின்றது. இதற்குப் பின்னணியில் நின்று செயற்பட்டவர்களுள் தோழர் கார்த்தி முதன்மையானவர். இந்த எழுத்தாளர்களுக்கு வழிகாட்டி வளர்த்தெடுத்தவர் கார்த்தி. அவரே ஒரு சிறந்த மார்க்சிஸ இலக்கிய விமர்சகராகவும் ஆங்கில கவிதைகள் புனைபவராகவும் இருந்துள்ளார். வடபிரதேசத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாகவிருந்த சிறந்த மக்கள் இலக்கியப் படைப்பாளிகளான தோழர்களான கே.டானியல், டொமினிக் ஜீவா, எஸ்.பொன்னுத்துரை, என்.கே.ரகுநாதன், கவிஞர் பசுபதி, இளங்கீரன், எஸ்.அகஸ்தியர் ஆகியோருடன் நானும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிரதான உறுப்பினர்களாகச் செயல்பட்டோம். நாம் அறுபது எழுபதுகளில் வடபிரதேசத்தில நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திலும், தொழிலாளர்களது போராட்டங்களிலும் நேரடியாகப் பங்குபற்றியதுடன் இந்தப் போராட்ட உணர்வின் உந்துதலினால் தரமான மக்கள் இலக்கியம் சிருஷ்டிகளைப் படைத்தோம். இந்த எழுத்தாளர்களை சித்தாந்த ரீதியில் நெறிப்படுத்தி, தரமான முற்போக்கு இலக்கியப் படைப்புகளை உருவாக்குவதற்கு வழிவகுத்தவர் தோழர் கார்த்தி.

‘தோழர் பெத்யூன் அவர்களின் உணர்வு, தம்மைப் பற்றிய சிந்தனை ஒன்றமின்றி பிறருக்கான அவருடைய பூரண தியாகம், தமது வேலையில் அவர் கொண்டிருந்த எல்லையற்ற பொறுப்புணர்ச்சியிலும் தோழர்கள் மீதும், மக்கள் மீதும் அவர் வைத்திருந்த எல்லையற்ற இதய-ஆர்வத்திலும் காணப்பட்டது. ஒவ்வொரு கம்யூனிஸ்டும் அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

எள்ளத்தனையும் சுய-நலமற்ற உணர்வை நாம் எல்லோரும் அவரிடமிருந்து கற்றக்கொள்ள வேண்டும். இந்த உணர்வைக் கொண்டு ஒவ்வொருவரும் மக்களுக்கு மிகப் பயனுள்ளவராக வாழ முடியும். ஒருவருடைய திறமை பெரிதாக அல்லது சிறிதாக இருக்கலாம். ஆனால் இந்த உணர்வு அவருக்கு இருந்தால், அவர் உன்னத சிந்தையும் தூய்மையும் உடையவராக, ஆத்மீக பலமுடையவராக, கொச்சை நப்பாசைகளைக் கடந்த ஒரு மனிதனாக மக்களுக்குப் பயனுள்ள ஒரு மனிதனாக இருப்பார்.’

‘தோழர் பெத்யூனின் நினைவுக்காக’ என்ற ஒரு கட்டுரையில், மகத்தான தலைவர் மாஓ சேதுங் அவர்கள் நோர்மன் பெத்யூனின் மக்களுக்கான அர்பபணிப்புப் பற்றி மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதேபோல, எங்கள் தோழன் கார்த்தியும் மக்களுக்கும் கட்சிக்கும் சேவை செய்வதில் தம்மை உணர்வுபூர்வமாக அர்ப்பணித்தவர். ஆகவே எண்ணத்தையும் சுயநலமற்ற உணர்வையும் நாமெல்லோரும் தோழர் கார்த்தியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

அனுப்பியவர்:  ஜானகி பாலகிருஷ்ணன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.