ஆனமடுவ மக்களைப் பாராட்டுவோம்!

Friday, 16 March 2018 13:19 - பதிவுகள் - அரசியல்
Print

ஆனமடுவ மக்களைப் பாராட்டுவோம்!ஆனமடுவ மக்களே! நீங்கள் வாழி!
நீங்கள் சீர் செய்தது உணவகத்தை மட்டும்
அல்ல;
இனங்களுக்கிடையிலான குரோதங்களையும்தாம்.
நீர் வாழி! உம் செயல் வாழி!
வெறிபிடித்த மானுட உணர்வுகள்
விளைவித்த அழிவினை மட்டுமா
சீர் செய்தீர்! கூடவே
மானுட நேயமென்னும் பண்பினையும்தான்
மலர்வித்தீர்!
மானுடரே! நீர் வாழி! வாழி!

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற முஸ்லீம் மக்களுக்கெதிரான வன்முறையின்போது ஆனமடுவப் பகுதியில் சேதத்துக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம் உணவகத்தை அப்பகுதிச் சிங்கள மக்கள் , பெளத்த மதகுருமார் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைந்து சீரமைத்துக்கொடுத்திருக்கின்றார்கள் என்னும் செய்தியினை பி.பி.சி.தமிழ் இணையத்தளத்தில் வாசித்தேன். மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இவ்விதம் தாங்களாகவே முன் வந்து இனவாதிகளால் சேதமாக்கப்பட்ட உணவகத்தைச் சீராக்கியதன் மூலம் அப்பகுதிச் சிங்கள மக்கள் அனைவருக்கும் முன் மாதிரியாகத் திகழ்கின்றார்கள். அவர்கள் சேதமாக்கப்பட்ட உணவகத்தை மட்டுமல்ல சீர் செய்தது, இனங்களுக்கிடையிலான குரோத உணர்வுகளையும்தாம். அச்செய்தியினை முழுமையாகக் கீழே தருகின்றேன் ஒரு பதிவுக்காக:


பி.பி.சி தமிழ் செய்தி!

பி.பி.சி தமிழ்: இன மோதலால் சிதைக்கப்பட்ட உணவகத்தை சீரமைத்து தந்த பெளத்த மதகுருமார்கள்

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற இன மோதலில் ஆனமடுவவில் சேதப்படுத்தப்பட்ட முஸ்லிம் உணவகத்தை உள்ளூர் சிங்கள மக்கள், பௌத்த மதகுருமார் மற்றும் வணிகர் சங்கத்தினர் சீரமைத்து கொடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கண்டி மாவட்டத்திலும், அம்பாறையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் நடந்தபோது பெரிதும் இலக்கு வைக்கப்பட்டவை முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள்தான். அவற்றில் பெரு வணிக நிறுவனங்களும் மிகச் சிறிய கடைகளும் உணவு விடுதிகளும் அடக்கம். குறிப்பாக, கண்டி மாவட்டத்தின் நிலைமை மிகவும் மோசம். முஸ்லிம்கள் அங்கு பெருத்த சேதத்தை எதிர்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது நாம் கூறப்போகும் நிகழ்வு நடந்தது புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ என்னும் இடத்தில். இங்கும் முதலில் நடந்தது வன்செயல்கள்தான் என்றாலும் இங்கு மனிதம் இன்னமும் உயிர்வாழ்கிறது என்று காண்பிக்கும் ஒரு நிகழ்வும் அதன் தொடர்ச்சியாக நடந்துள்ளது. அது மட்டுமல்ல சிங்கள மக்கள் தமது மனித நேய உணர்வை பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய நிகழ்வு இது என்றேகூட சொல்லலாம்.

 

ஆனமடுவவில் இருப்பது ஒரேயொரு முஸ்லிம் உணவகம். அது நேற்று அதிகாலையில் திடீரென இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது. உரிமையாளர்கள் ஓடிவந்து பார்த்தபோது எரிந்துகொண்டிருந்த உணவகத்தை உள்ளூர் சிங்கள மக்கள் அணைத்துக்கொண்டிருந்தார்கள். உள்ளே இரு பாட்டில்கள் இருந்ததால் பெட்ரோல் குண்டுமூலம் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. சிறிது நேரத்தில் அங்கு வந்த உள்ளூர் சிங்கள மக்கள், பௌத்த மதகுருமார் மற்றும் வணிகர் சங்கத்தினர், 'இன்று இரவுக்குள்ளேயே கடையை மீண்டும் கட்டி வியாபாரம் ஆரம்பிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்கள். மாலையே உணவகம் முழுமையாக சீரமைக்கப்பட்டு, சிறு சிறு பழுதுகள் போக புதிய உணவகமாக அது உருவெடுத்திருந்தது.
பொதுமக்களும், வணிகர்களும், மதகுருமாரும் ஒன்றாகக் கூடி உணவகத்தை கட்டியிருக்கிறார்கள். எரிந்துபோன கூரையை நீக்கிவிட்டு புதிதாக அமைத்து கொடுத்திருக்கிறார்கள்.

தனது தந்தை முழுமையான மகிழ்ச்சியில் இருப்பதாகவும், தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார் கடையின் உரிமையாளர் நவ்பரின் மகனான ஏ.எம். அனூஸ். இவர் ஒரு ஆசிரியர். உணவகத்தை சீரமைத்து தந்த ஊர் மக்களுக்கு நன்றியுடன் இருப்போம் என்றும் அனூஸ் கூறுகிறார். இலங்கையில் கடந்த காலங்களில் பல வன்செயல்கள் நடந்திருக்கின்றன. தமிழர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் இப்படி நடந்திருக்கின்றன.
தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான மோதல்களும் நடந்திருக்கின்றன. இவற்றினால் இலங்கையின் பெயர் சர்வதேச மட்டத்தில் பின்னடைந்தும் இருக்கிறது. ஆனால், அவ்வப்போது கேட்கும் ஆனமடுவ சம்பவம் போன்றவவை கூறும் செய்திகள்தான் இங்கு இன்னமும் மனிதம் எஞ்சியிருக்கிறது என்பதை நிரூபிக்கின்றன.

இங்கு சாந்தியும், சமாதானமும் திரும்பும் என்பதில் நம்பிக்கை கொள்ள வைப்பவையும் இவையே என்கின்றனர் இங்கு உள்ள சகவாழ்வுக்கான சில செயற்பாட்டாளர்கள்

நன்றி: http://www.bbc.com/tamil/sri-lanka-43373677?SThisFB

 

Last Updated on Friday, 16 March 2018 13:23