கோத்தபாய ராஜபக்சசஜித் பிரேமசாசாஇலங்கையின் பெரும்பான்மையின மக்கள் தமது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சவைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். அதே சமயம் சிறுபான்மையின மக்கள் சஜித் பிரேமசாசாவைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

இன, மத மற்றும் மொழிரீதியாகப் பிளவுண்ட இலங்கையில், ஓரினத்தின் ஜனாதிபதியாக கோத்தபாயா ராஜபக்ச வென்றிருக்கின்றார். சிறுபான்மையின மக்களுட்பட நாற்பத்தொரு வீத மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். அதே சமயம் 52.51  வீத மக்கள் (6,883,620) அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். இனவாதத்தை அள்ளி வீசி, தென்னிலங்கையில் சிங்கள மக்களை இனரீதியாகத் தூண்டி பெரு வெற்றியினைக் கோத்தபாயா பெற்றிருக்கின்றார். இலங்கையின் பெரும்பான்மையின மக்களைப்பொறுத்தவரையில் இலங்கையில் அவர்கள் இனரீதியாக ஒடுக்கப்பட்டு வாழ்பவர்களல்லர். அவர்களில் பலர் சிறுபான்மையினர் அடையும் துன்பங்களை இன்னும் அறிய முடியாதிருப்பது துரதிருஷ்ட்டமானது. தமிழர்களுக்கு அதிக உரிமைகளைப்பெற்றுக் கொடுத்து விடுவார் சஜீத் என்று இனவாதத்தைக் கக்கித் தென்னிலங்கையில் அமோக வெற்றி பெற்றிருக்கின்றார் கோத்தபாயா ராஜபக்ச. இவரது வெற்றி இனவாதத்துக்குக் கிடைத்த வெற்றி. அதே சமயம் 41.7% வீத மக்கள் (5,467,088) இனவாதத்துக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். அதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

கோத்தபாயாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்களிலொன்று தற்போதுள்ள மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் செயலற்ற தன்மை. மகிந்தவின் ஆட்சியிலிருந்து விடுதலையைப் பெற்றுத்தந்த மைத்திரி -ரணிலின் அரசின் முக்கிய நன்மையாக நான் கருதுவது அது உருவாக்கித்தந்த ஜனநாயக வெளி. அந்த வெளி தொடருமா இல்லையா என்பதை கோத்தபாயா ராஜபக்சவின் தொடரப்போகும் ஆட்சியின் தன்மைதான் தீர்மானிக்கும். ஏற்கனவே அவருக்கு எதிராகப் பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், வழக்குகள் உள்ளன. அவரது அமெரிக்கக் குடியுரிமை பற்றிய வழக்கு கூட உச்ச நீதிமன்றத்திலுள்ளது. இந்நிலையில் இவரது ஆட்சி எப்படியிருக்கப் போகின்றது? சிறுபான்மையின மக்கள், அரசியல் எதிரிகள் அச்சமுறும் வகையில் இருக்கப் போகின்றதா அல்லது அனைத்து மக்களும் அமைதியாக, சமாதானமாக வாழும் நிலை அமையப்போகின்றதா?

அதே சமயம் இத்தேர்தல் இன்னுமொரு விடயத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது. தமிழர்களைப்பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் இன்னும் அவர்களின் ஆதரவைப்பெற்ற பிரதான கட்சி. இலங்கையின் சிறுபான்மையின மக்களின் ஆதரவு தனக்குக் கிடைக்கவில்லையென்பதற்காக தொடர்ந்தும் அவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் கோத்தபாயா அரசு ஈடுபடுமா இல்லையா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவையெல்லாவற்றையும் மீறி நாட்டில் முதல் முறையாக பெரிதாக அசம்பாவிதங்கள் ஏதுமின்றி ஜனாதிபதித்தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. அது ஆரோக்கியமான விடயம். ஆட்சி அமைதியான வழியில் மாறியுள்ளது. இச் சூழல் தொடருமா? அல்லது அரசியல் பழி வாங்கல்கள், வெள்ளை வான் கடத்தல்கள் போன்ற அரசியல் எதிரிகளின் குரல்களை அடக்குதல் போன்ற மானுட உரிமை மீறல்கள் தொடருமா என்பதைக் காலம் காட்டி நிற்கும். தனது தேர்தல் பிரச்சாரத்தில் கோத்தபாயா ராஜபக்ச பல வாக்குறுதிகளையும் வழங்கியிருந்தார். தனது ஆட்சியில் தமிழர் பிரச்சினை முற்றாகத் தீர்த்து வைக்கப்படும் என்று கூறியிருக்கின்றார். அரசியல் கைதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறியிருக்கின்றார். அவற்றை அவர் வாக்குறுதியளித்தபடி செய்வாரா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த இருண்ட காலத்தைப் போலில்லாமல் , நாட்டில் அனைத்துச் சமூகங்களும் அச்சமின்றி வாழும் நிலையை உருவாக்குவதுதான் புதிய ஜனாதிபதியின் முதலாவது பணியாக இருக்க வேண்டும். செய்வாரா? இல்லையா என்பதைப்பொறுத்தே நாட்டின் எதிர்காலம் இருண்ட காலமா அல்லது ஒளிமயமான காலமா என்பதிருக்கும்.

தேர்தல் முடிவுகள்: https://results.elections.gov.lk