'யாரும் ஊரே! யாவரும் கேளிர்' என்று பாடி வைத்தான் பண்டையத் தமிழ்க்கவிஞன் ஒருவன். உலக மக்கள் அனைவருமே எனது சுற்றத்தவர்கள் என்பது அதன்பொருள். அன்றுள்ளதை விட இன்று உலகம் மிகவும் சுருங்கி விட்டது. பல்லின, பன்மொழி, மத மக்களுக்கிடையிலான புரிந்துணர்வும், தொடர்புகளும் அதிகமானதொரு சூழல் நிலவும் காலகட்டத்தில் நாம் வாழுகின்றோம். இவ்விதமானதொரு சூழலில் சீனதேசத்து மக்கள் 'கொரோனா' வைரஸின் தாக்கத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டு வாழ்கின்றார்கள். இந்நிலையில் அவர்களுக்கு வேண்டியவை மானுடர்கள் அனைவரினதும் உதவியும், நோயினைக்கட்டுத்துவதற்கான செயற்பாடுகளில் ஒத்துழைப்புமே. & தார்மீக ஆதரவுமே.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக'ச் சில நாடுகளில் (இலங்கையுட்பட) சீனர்கள் (கொரோனா வைரஸ் சீனாவில் சீனர்களை ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படுவதால்) பல்வேறு வகைகளில் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் கூட உணவகமொன்று சீனர்களை அனுமதிக்க மறுத்துள்ளதாக இணையத்தில் செய்தியொன்றினை வாசித்தேன்.

ஒரு சில நாடுகள் அரசியல், பொருளாதாரரீதியில் வலிமை பெற்று வரும் சீனாவில் ஏற்பட்டுள்ள இந்நிலைமை தம் நாட்டுபொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்குமென்று நம்புகின்றார்கள். அரசியல் மற்றும் ஆயுதரீதியிலான சீனாவின் ஆதிக்கத்தை உடைக்கக் கொரோனா உதவும் என்று சிலர் கருத்துகளை உதிர்த்துள்ளார்கள்.

இந்நிலையில் சிறு கோளொன்றில் வாழ்ந்து வரும் மானுடர்களாகிய நாம்  அனைவருமே ஒருவருக்கொருவர் உதவிகள் செய்பவர்காளக இருக்க வேண்டும்; ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். சந்தப்ப சூழலைப் பாவித்துச் சீன மக்களை உளரீதியாகப் பாதிப்படையச் செய்யும் செயல்களைச் செய்பவர்கள் எவராயினும் அவர்களின் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

கொரோனா வைரஸுனால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் ,  குறிப்பாக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள சீன மக்கள் அனைவரும் விரைவில் பூரண சுகத்துடன் திரும்புவார்கள் என்றும் நம்புவோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.