இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையின் பின்னால்....

Friday, 22 May 2020 10:58 - பல்லவராயன் - அரசியல்
Print

மே 21, 1991 இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி

மே 21, 1991 இந்திய முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்ட தினம். இலங்கைத்தமிழர்கள் விடயத்தில் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றக்காரணமாக அமைந்த படுகொலை. எந்த இந்திய அரசு இலங்கைத்தமிழ் ஆயுத அமைப்புகளைப் பெரிதாக்கித் தன் ஆதிக்கத்தை இலங்கையில் நிலைநிறுத்தப் பாவித்ததோ அதே இந்திய அரசு அந்நிலைப்பாட்டிலிருந்து தன் நிலைப்பாட்டை மாற்றுவதற்குக் காரணமாக அமைந்த படுகொலை.

ராஜிவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னணியில் யார் யார் இருந்திருக்கக் கூடுமென்று எண்ணிப்பார்க்கையில் , என்னைப்பொறுத்தவரையில் விடுதலைப்புலிகள் மட்டும் பின்னணியில் இருந்திருப்பார்கள் என்று நினைக்க முடியவில்லை. முக்கிய காரணமாக அன்று நிலவிய இலங்கை, இந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழல் முக்கிய பங்கினையளித்திருக்க் கூடுமென்றே தோன்றுகின்றது.

என்னைப்பொறுத்தவரையில் முக்கிய காரணமாக இருக்கக்கூடுமென்று நான் நினைப்பது...  அக்காலகட்டத்தில் மீண்டுமிந்தியப்படைகள் இலங்கைக்கு வருவதைக் கடுமையாக எதிர்த்தவர்கள் இருவர் ஒருவர் பிரேமதாசா. மற்றவர் பிரபாகரன். இந்தியப்படைகளை இலங்கையை விட்டு அனுப்புவதற்குப் பிரேமதாசா கடுமையாக முயற்சித்தவர். விடுதலைப்புலிகளைப்பற்றிக் குறிப்பிடுகையில் நாங்கள் அண்ணன் ,தம்பிகள் எம் பிரச்சினைகளை நாம் தீர்த்துக்கொள்வோம் என்று கூறியவர்.
விடுதலைப்புலிகளைப்பொறுத்தவரையில் இந்தியபடைகளிருந்தபோது கடுமையான அழிவுகளுக்குட்பட்டிருந்தனர். மீண்டும் கட்டியெழுப்பிப் பலமான நிலையில் இருந்தனர். இந்நிலையில் மீண்டுமிந்தியப்படைகள் வந்தால் அது அவர்களுக்கு மீண்டும் அழிவினை ஏற்படுத்தும் . அக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கும் பிரேமதாசா அரசுக்குமிடையில் ஓரளவு முரண்பாடுகள் குறைவாகவிருந்த காலகட்டம். விடுதலைப்புலி உறுப்பினர் பிரேமதாசாவின் இருப்பிடத்துக்கே சென்று தொடர்புகளை ஏற்படுத்தி வைத்திருந்த காலகட்டம். ராஜிவ் காந்தியோ வெல்வதற்கு அண்மையிலிருந்தார். மீண்டும் ஒப்பந்தத்தை அமுல் படுத்தப் படைகளை அனுப்புவாரென்று தேர்தல் பிரச்சாரங்களில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பிரேமதாசாவின் தூண்டுதலும் ராஜிவைக்கொல்ல புலிகளைத்தூண்டியிருக்கலாம் என்று நினைக்கின்றேன். அதனால்தான் அவர்கள் ராஜிவைக்கொன்ற கையோடு பிரேமதாசாவையும் கொன்றார்கள். ஏனென்றால் அவருக்குத்தான் இது பற்றிய உண்மை தெரிந்திருக்கும். இது என்னுடைய ஊகம்.

அதே சமயம் பிரேமதாசாவின் ஐக்கிய தேசியக் கட்சி தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் எப்பொழுதுமே குறிப்பாக அப்பொழுது (இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி காலகட்டத்தில்) மேற்கு நாடுகளின் செல்லப்பிள்ளை. ராஜிவ் காந்தி இலங்கை மீது படையெடுப்பதற்கு முன்னர் இந்திரா காந்தி சென்னையில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் பேசியபோது இலங்கை விடயத்தில் இனியும் பொறுப்பதிற்கில்லை என்று பேசியுள்ளார். அதன் பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டார். அக்காலகட்டத்தில் பாகிஸ்தானெல்லையில் படைகளைத் தயார் நிலையில் வைத்து விட்டு, இலங்கை மீது படையெடுக்க அவர் தயாராகவிருந்தாரென்றும் அறியப்படுகின்றது. அதனால்தான் அக்காலகட்டத்தில் அப்பிராந்தியத்தில் சோவித் -இந்தியக் கூட்டணிக்கெதிராகத் தன் நலன்களை முன்னிறுத்த அமெரிக்கா இந்திரா காந்தியின் படுகொலைக்குப்பின்னணியில் இருந்திருக்கலாமென்றும் கருதுவதற்கு நியாயமான காரணங்களுண்டு. இந்திரா காந்தி இலங்கைத் தமிழ் அமைப்புகளைக் கட்டியெழுப்புவதற்கு முக்கிய காரணமே அன்று நிலவிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனே அரசுக்கும், அமெரிக்காவுக்குமிடையிலான தொடர்புகளேயென்பதும் முக்கியமானதோருண்மை.

தாயைக்கொல்ல அமெரிக்கா பஞ்சாபியரின் தனிநாட்டுப்போராட்ட அமைப்பைப் பயன்படுத்தியதுபோல், மகனைக்கொல்லவும் தமிழீழத்துக்குக்காகப்போராடிய விடுதலைப்புலிகளை இலங்கையினூடு அமெரிக்கா கையாண்டிருக்கலாம். சாத்தியங்களை மறுப்பதற்கில்லை.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Friday, 22 May 2020 11:31