எதிர்வினை: 'வாசிப்பும், யோசிப்பும் 161 - நவகாலத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் இணைய இதழ்கள்!' பற்றி..

Saturday, 19 March 2016 18:24 - முனைவர் நா. சுப்பிரமணியன் - வாசகர் கடிதங்கள்
Print

கலாநிதி நா. சுப்பிரமணியன்அன்ப! தங்களது 12-03-2016 திகதியிட்ட வாசிப்பும்யோசிப்பும் பகுதியிலே, ‘அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு இணைய இதழ்களில் வெளியான படைப்புகளை, கட்டுரைகளை மையமாக வைத்தும் முனைவர்கள் சிலர் ஆய்வுகளைச் செய்யத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஆரோக்கியமான செயற்பாடிது’ எனக்குறிப்பிட்டதோடு அவ்வாறான செயற்பாடுகளுக்குச்சான்றுகளாக  என்னுடையதும் மற்றும் நண்பர் முனைவர் இ.பாலசுந்தரம் அவர்களுடையதுமான ஆய்வுச்செயற்பாடுகளைச்சுட்டி, எம்மிருவருக்கும் கௌரவமளித்திருந்தீர்கள். அதற்காக முதற்கண் எனது மனநிறைவையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

அத்தொடர்பிலே மேலும் ஒரு நன்றிக்கடப்பாட்டை உங்களுக்கும் நீங்கள் சுட்டியுள்ள   ஏனைய இணைய இதழ்ச்செயற்பாடாளர்களுக்கும்  தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எனக்கும் என்போன்ற ஆய்வளர்களுக்கும் உளது என்பதையும் இங்கு குறிப்பிட  விழைகிறேன். இது   இணைய இதழ்களின் ஆய்வுநிலைப் பயன்பாடு தொடர்பானதாகும். இத்தொடர்பிலான  சிறு விளக்கமொன்றை இங்கு முன்வைக்கவேண்டியது எனது கடமையாகிறது.. 

ஆய்வு அல்லது ஆராய்ச்சி எனப்படும் செயன்முறையானது  பல படிநிலைகளைக் கொண்டதுஎன்பதை அறிவீர்கள். அவ்வாறான படிநிலைகளைக் கல்வியாளர்கள்முக்கியமான மூன்று கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.

முதலாவது கட்டம் :ஆய்வுகளுக்கான தரவுகளைத் தேடித்திரட்டல்.
இரண்டாவது கட்டம்:திரட்டப்பட்டவற்றைத்தொகை வகைசெய்து விளக்கியுரைத்தல் மற்றும் விமர்சித்தல் .
மூன்றாவதுகட்டம்:குறித்த ஆய்வுப்பொருண்மை சார்ந்த புதிய எண்ணக்கருக்கள்,
புதிய கருதுகோள்கள் ஆகியவற்றை உருவாக்கி அவ்வாய்வுப்பரப்பைப் புதிய கட்டத்துக்கு வளர்த்துச்செல்லுதல் .

தமிழியல் ஆய்வுகள்   சார்ந்த்த மேற்படி  மூன்றுகட்டச் செயற்பாடுகளுக்கும்  கடந்த ஏறத்தாழ15ஆண்டுகளாகதமிழ்இணையதளங்கள்மிகப்பெரும் பங்களிப்புகளை  ஆற்றிவந்துள்ளன-தொடர்ந்து ஆற்றிவருகின்றன.

கடந்தஏறத்தாழ15 ஆண்டுகளுக்கு முன்வரை  ஆய்வுகள் தொடர்பில் புதிய தகவல்களையும்புதியவகை விளக்கம் மற்றும் விமர்சனம் ஆகியவற்றையும் பெறுவதற்கும் புதியவகை எண்ணக்கருக்கள் ,கருதுகோள்கள்ஆகியன பற்றிஅறிந்துகொள்வதற்கும்சில மாதங்கள்-  குறைந்தது சில வாரங்களாவது- நாம் காத்திருந்தோம். அச்சுப்பிரதிகளான குறித்தவகை நூல்கள் மற்றும்  ஆய்விதழ்கள் முதலியன அஞ்சலில் அல்லது பிறவழிகளில்  வந்தடைவதற்கான கால அவகசம் அது.

இணைய இதழ்களின் வருகையுடன் அந்தநிலையில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்துவிட்டது.குறித்த ஆய்வுப்பொருண்மைகள் தொடர்பாக   அனைத்துலக மட்டத்தில்நடைபெறும்  முக்கிய  நிகழ்வுகள் மற்றும் அவற்றினூடாகக்கிடைக்கும்  புதிய தரவுகள் ஆகியனவும் அவை  தொடர்பில்   முன்வைக்கப்படும் விளக்கம், விமர்சனம்  என்பனவும் புதிய வகை எண்ணக்கருக்கள், கருதுகோள்கள் ஆகியனவும் கூட சிலமணி நேரங்களில் – சில மணித்துளிகளிலும் கூட -  ஆய்வளர்களின் பார்வைக்கு வந்துவிடுகின்றன. அவை இணைய தளங்களின் கவனத்துக்கு வந்த உடனேயே 

ஆய்வாளர்களின்  பார்வைக்குக்குக் கிடைத்துவிடுகின்றன.

இவ்வாறு அவை உடனுக்குடன் பார்வைக்கு வருவதனால் அவை தொடர்பில் ஆய்வாளர்கள் தமது சிந்தனைகளைக் காலதாமதமின்றிக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் அகலப்படுத்திக்கொள்ளவும் கூட  முடிகிறது. தமது தரவுகளிலும்  பார்வைகளிலும்  குறைபாடுகள்இருப்பின்அவற்றைஉடனடியாகவே அவர்களால் திருத்திக்கொள்ளவும்முடிகிறது.இவ்வாறானவாய்ப்புகளால்ஆய்வுகளைதொய்வின்றியும் 

புதிய முனைப்புடனும் தொடரவும் முடிகின்றது.

அத்துடன்,  கிடைக்கும் புதிய தரவுகள் முதலியவற்றின் மீதன தமது எதிர்வினைகளைச்  சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாகத்தெரிவிக்கவும் வாய்ப்புகள்  கிட்டுகின்றன

மேலும் ஆய்வாளர்கள் தமது  புதிய சிந்தனைகளை உடனுக்குடன் அனைத்துலக மட்டத்துக்கு இட்டுச்செல்லவும் அதனால் உலகளாவிய நிலையிலான கவனத்தைத்தமது ஆய்வுப்பொருள் மீது ஈர்க்கவும் இணைய இதழ்கள் துணைநிற்கின்றன.

இவ்வாறன வாய்ப்புகளை அளிப்பதன் மூலம் ஆய்வாளர்களுக்குஇணைய இதழ்கள் புத்தூக்கமளித்து ஆய்வுச்செயற்பாடுகளை விரைவுபடுத்தி வருகின்றன.

இணைய இதழ்கள் அளித்துள்ள- தொடர்ந்து அளித்துவருகின்ற  மேற்சுட்டிய வாறான வாய்ப்புகளால்   பல்லாயிரம் மைல்கள் தூரத்திலுள்ள நாடுகளில் வாழும்  தமிழியல் ஆய்வாளர்கள்  ஒருவருக்கொருவர்    மிக அருகில் வந்துவிட்டனர் .இது இன்றைய நிதர்சனம். 

இவ்வாறான நெருக்கத்துக்கும்    தொடர்நிலையிலான விரைவான இயங்குநிலைகளுக்கும் வழிவகுத்துள்ளவகையில் ‘பதிவுகள்  இணைய இதழை  நடத்தும் தாங்களும் ஏனைய  இணையஇதழாளர்களும் தமிழ் ஆய்வுலகின்   பெரு நன்றிக்கு ரியவர்கள் .

எனவே, அந்நன்றியைத் தமிழ் ஆய்வுலகின் சார்பில் உங்களுக்கும் அவர்களுக்கும் தெரிவிப்பது எனது கடமையாகிறது.

இன்றைய ஆய்வாளர்களின்  ஆய்வு தொடர்பிலான அன்றாடக்கடமைகளில் ஒன்று இணைய இதழ்களைப் பார்வையிடுதல் ஆகும். அவ்வாறு பார்வையிட்டுதமது ஆய்வுச்செயற்பாடுகளை வளப்படுத்திக்கொள்பவர்களே ஆய்வுலகில் நின்று நிலைக்கமுடியும்.. இதனை என்னுடையதும் எனது துணைவியார் கலாநிதி  கௌசல்யா சுப்பிரமணியன் அவர்களுடையதுமான அனுபவங்கள் ஊடாக உறுதிபடக்கூறுகிறேன்.

மேற்படி  12-03-2016 திகதியிட்ட பதிவின் இறுதியிலேலே தாங்கள் தெரிவித்துள்ள தான         ’இணைய இதழ்களின் மற்றும் வலைப்பதிவுகளின் இலக்கியப்பங்களிப்பு பற்றிய விரிவான ஆய்வானது  நடாத்தப்படவேண்டும்’ என்ற முன்மொழிவை   நான் வரவேற்று வழிமொழிகிறேன். திட்டமிட்டுச் செயற்படுவோம்.

அன்புடன்
நா. சுப்பிரமணியன்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Saturday, 19 March 2016 18:29