எதிர்வினை: முனைவர் தாரணி அகில் அவர்களின் ஐரோப்பியப் பயணத்தொடர் பற்றி...

Wednesday, 18 October 2017 18:29 - ஜானகி கார்த்திகேசன் பாலக்கிருஷ்ணன் - வாசகர் கடிதங்கள்
Print

எதிர்வினை_பெண்2017 ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தாரணி அகில் அவர்கள் பகிர்ந்த ஐரோப்பியப் பயணத்தொடர் (1)-(5) அனுபவம் பற்றிய கட்டுரைகளைச் சார்ந்த கருத்துக்களை பகிர முன்வந்துள்ளேன். அவரது கட்டுரைகள் கிரிதரன் அவர்கள் ஜூன் 19ம் திகதி பகிர்விற்கு அளித்த முகவுரையில் கூறியது போல் வேறு சிலர் எழுதும் பட்டும்படாத பாணியில் அல்லாமல் இவர் மிகவும் ஈடுபாடகவும், அதை அணுஅணுவாக அனுபவித்தும், மிகுந்த நகைச்சுவை கலந்தும் எழுதியது என்னைக் கவர்ந்தன. கட்டுரைகளை வாசித்த போது எவ்வாறு சுற்றுலாப் பயணத்தை அனுபவிக்க வேண்டுமெனக் கூறுவதுடன், ஒரு சுற்றுலாப் பயணக் கட்டுரையை எவ்வாறு சுவாரசியமாக எழுத வேண்டுமென ஒரு பாடம் நடாத்தியது போல் இருந்தது. அவரிடமிருந்து நான் கற்றது பல.

அதைப் பகிர்வதற்கு முன்பாக தாரணி அகில் அவர்களை எவ்வாறு சந்தித்தேன் என்பதை வாசகர்களுக்குத் தெரிவிப்பது அவசியம். எனது கட்டுரையை ‘லைக்’ பண்ணியவர்களில் அவரும் ஒருவர். முன்பு அறிமுகம் அல்லாதவர் ‘லைக்’ பண்ணுவதானால் அவரது ஆர்வம் என்னவாக இருக்குமென அவாக் கொண்டு அவரது முகநூலில் நுழைந்;தேன். அவர் ஒரு துணைப் பேராசிரியர் என அறிந்து மனமிகு மகிழ்ந்தேன். அத்துடன் அவருக்கு நல்ல நகைச்சுவை ஆர்வம் இருப்பதை அவர் பகிர்ந்திருந்த பலவகையான சுண்டல் பற்றிய கவிதையிலிருந்து அறிந்து கொண்டேன்.

முகநூலில் பலவிடயங்களையும் பார்த்தும் வாசித்தும் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜூன் 19ம் திகதி தாரணி அகில் அவர்கள் ஐரோப்பியப் பயணத்தொடர் (5): ஒளிரும் மாய நகரம் - பாரிஸ் கண்ணில் பட்டது. நான்தான் நீண்ட கட்டுரையை எழுதிவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால் நீளத்தில் அவர் என்னை மடக்கிவிட்டார்.  இருப்பினும் வேறெதிலும் கவனம் செலுத்தாமல் என்னை வைத்திருந்த அவரது கட்டுரையை வாய் விட்டுச் சிரித்தும், சிரிப்பில் கண்ணீர் விட்டும் வாசித்து முடித்தேன். அவரது எழுத்தாற்றல் வியக்கத்தக்கது. அந்த எழுத்து நாமும் அவருடன் பயணித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

நானும் கனடாவில் சில மாகாணங்களுக்கும், பிரதேசங்களுக்கும், வேறு சில நாடுகளுக்கும் பிரயாணம் செய்து வந்துள்ளேன். ஒவ்வொரு பயணத்தின் போதும் ஊர் வந்து சேர்ந்ததும் அதுபற்றி கட்டுரை எழுத வேண்டுமென எண்ணுவேன். படங்களும் எடுத்து வருவேன். வந்திறங்கி முன்புபோல வேலையைத் தொடர்ந்து வேறு விடயங்களில் மனம் செலுத்தியதும் அனைத்தும் அப்படியே அழிந்து போய்விடும்.

தாரணி அவர்களின் ஐரோப்பியப் பயணத்தொடர் (1)-(5) ஐந்து பாகங்கள் கொண்டதெனத் தென்பட்டாலும் நான் வாசிக்கத் தொடங்கியது அவரது இங்கிலாந்திலிருந்து பாரிஸ் நகர் வந்ததும், பாரிஸ் நகரின் சுற்றுலாப் பயணமும், அப்புறம் ஜேர்மனிக்கு செல்ல தயார் செய்வது பற்றியதாகும்.  பாரிஸ் நகரின் சுற்றுலாப் பயணம் பல அம்சங்களைக் கொண்டிருந்தது. அவருடைய நகைச்சுவையுடன் கூடிய சித்தரிப்புக்கள் Ferry பிரயாணம் மொழி தெரியாமல் உதடு வெடிப்புக்கு பூச லிப் பாம் (Lip Balm) வாங்க முயற்சித்தது என்றெல்லாம் தொடங்கி, சில இடங்களில் அடக்க முடியாத சிரிப்புக்குள்ளாக்கும் வர்ணனைகளுக்கூடாக வாசகர்களை எடுத்துச் சென்றது. அவரது கல்வியும், தொழிலும் சுற்றுலாப் பயணத்தின் பின்னணிகளை விளங்கிக் கொள்ள ஏதுவாக இருந்தாலும்,  சில நடைமுறைச் சிக்கல்களையும் கலாச்சார வேறுபாடுகளையும் சலிப்படையாமல் எதிர் கொண்டதையும் நன்கு எடுத்துரைக்கிறார். வேறுசில நாடுகளுக்குச் சென்றால் கிடைக்கக் கூடிய அனுபவங்களையும் குறிப்பாக யூரோ டிஸ்னியில் (Euro Disney) புளோரிடா ஒர்லான்டோ (Florida, Orlando, USA) அனுபவம் இவர் பெற்று அழகாக சுவையாக வர்ணனை செய்திருந்தார். ஹாலிவுட் படங்களில் நடப்பது போன்ற ஒரு நிகழ்வை தம்மை ஒரு ட்ராமில் இருத்தி வைத்துத் தந்த அனுபவத்தை சித்தரித்தது ஓரழகுதான். அடுத்து ட்வைலைட் ஹாலிவுட்  டவர் ஹோட்டல் (Twilight Hollywood Tower Hotel) மின்தூக்கியில் சென்று வந்த அனுபவத்தை வாசித்த போது சிரித்துக் கண்ணீரும் வந்து விட்டது. இவற்றை நானும் முன்பு அனுபவித்ததால் நன்கு புரிந்தது. இடையிடையே தனது மகனுக்கு ஏற்பட்ட காய்ச்சல் எதுவித விரக்தியோ மனக்கோணலும் இன்றி அதை அவர் சமாளித்த விதம் என்பது பற்றியெல்லாம் விபரித்திருந்தார்.

எதிர்வினை_பெண்தாரணி அவர்கள் பார்த்த ஒவ்வோரிடத்தையும் சகல விபரங்களுடனும் தெளிவாக விளக்கியிருந்தார். அவரது தொழிலாற்றல் அங்கு நன்கு புலன்பட்டது. எனது அதிர்ஷ்டம் நான் அவரது மே 30ம் திகதி பகுதி 1 இனை வாசிக்க முன்பாக ஜூன் 19ம் திகதி கட்டுரையை வாசித்தது.  பகுதியினை வாசித்த போது ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு பின்பும் கண்டு பிடிக்கப் படாமல் இருக்கும் நாடுகளைக் கண்டு பிடிக்கச் செல்வது போன்ற தோரணையில், அது பற்றிய செலவுகள் அது இதென்று, பல தத்துவார்த்தமான விளக்கங்களெல்லாம் கொடுத்து ஆரம்பித்துள்ளார். இவ்வளவு ரசனையுடன் எழுதக் கூடியவர் ஏன் அவ்வாறு எழுதினார் என்று சிந்தித்துப் பார்த்தேன். பயணத்தின் காரணத்தையும் செலவுகளையுமிட்டு மற்றவர் திக்கிட்டுப் போவார்கள் என்று அஞ்சினாரோ தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை இவ்வாறான சுற்றுலாப் பயணம் செல்பவர் தாரணி அவர்களையோ அல்லது அவர்களைப் போன்றவர்களையோ உடன் அழைத்துச் செல்ல வேண்டும். எது எவ்வாறாயினும் அவரது கட்டுரையை தயவு செயது அனைவரும் வாசித்துப் பார்த்து மகிழ்ச்சியுற வேண்டும். தாரணி அவர்களும் விடுபட்ட பகுதிகளை வாசகர்களுக்குத் தர வேண்டுமெனக் கேட்டு மேன்மேலும் நீங்கள் பயணங்கள் மேற்கொண்டு இவ்வாறான கட்டுரைகள் எழுதி வாசகர்களை மகிழ்வித்தும் கற்பிக்கவும் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.
ஜானகி கார்த்திகேசன் பாலக்கிருஷ்ணன்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 18 October 2017 18:42