இனிய கனடா நாள் வாழ்த்துகள் அனைவருக்கும்!

* கனடா நாள்: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து....

கனடா நாள் (Canada Day, பிரெஞ்சு: Fête du Canada) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும். 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் "பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்" கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது.[1][2][3] இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து பெயர் மாற்றப்பட்டது. கனடா நாள் கனடா முழுவதிலும், மற்றும் உலக நாடுகளில் உள்ள கனடியர்களாலும் கொண்டாடப்படுகிறது.

நினைவு விழா
பொதுவாக ஊடகங்களில் "கனடாவின் பிறந்த நாள்"[4] என அழைக்கப்படும் 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் பிரித்தானிய வட அமெரிக்கக் குடியிருப்புகளான நோவா ஸ்கோசியா, நியூ பிரன்சுவிக், மற்றும் கனடா மாகாணம் ஆகியன ஒன்றிணைக்கப்பட்டு நான்கு மாகாணங்களைக் (கனடா மாகாணம் ஒன்ராறியோ மற்றும் கியூபெக் என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன) கொண்ட தனி நாடாக உருவாக்கப்பட்டு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது[5].

நடுவண் அரசின் விடுமுறை நாட்கள் குறித்த சட்டத்தின் படி,[6] கனடா நாள் சூலை 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஞாயிற்றுக்கிழமையாக அமையும் பட்சத்தில், விடுமுறை நாள் சூலை 2 ஆம் நாளாக இருக்கும். இவ்வாறு சூலை 2 ஆம் நாள் விடுமுறை நாளாக அமையும் ஆண்டுகளில், கொண்டாட்டங்கள் பொதுவாக சூலை 1 ஆம் நாளே நடைபெறுகின்றன[7]. சூலை 1 சனிக்கிழமையாக அமையும் ஆண்டுகளில் அடுத்த தொழில் நாள் (அதாவது திங்கட்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்படும்.

https://ta.wikipedia.org/s/ch7