10 ஜூலை 2020
"நீண்ட தர்க்கங்கள், பிணக்குகள் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளின் பின்னர் இலங்கையின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. அதே வேளை, எண்ணற்ற பொய்யான வாக்குறுதிகளாலும் தவறான ஊடகப் பிரச்சார மேலீட்டாலும் குழம்பிப்போயுள்ள பலர், தமது அரசியல் எதிர்காலத்தை வேறு யாரேனும் தீர்மானிக்கட்டும் என்று பேசாமல் விட்டுவிடுகின்றனர். இவ்வாறு சோர்ந்துபோய் அக்கறையின்றி இருப்போரிடமிருந்தே இத்தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உண்மையில் இவர்களால்தான் இச்சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் ஒரு  பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். “

இவ்வாறு வெளிநாடுகளில் வதியும் இலங்கையின் எதிர்கால நலனை பெரிதும் விரும்பும் இலங்கையர்களின் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தங்கள் பொன்னான வாக்குகளை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதை தெரிவிக்கும் இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஒரு ஜனநாயக ஆட்சி தவறிப் போகும் வேளையில் மக்கள் அமைதியாக தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி அதை சரிப்படுத்தல் வேண்டும். அதுவே உங்கள் வாக்கின் சக்தி. அச் சக்தியை பெருமையுடனும், புத்திசாதுரியத்துடனும் பயன்படுத்த இதுவே தக்க தருணம். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் எனத் தற்போதைய இடைக்கால அரசு திண்ணமாகக் கூறியிருப்பதானது, கடந்த ஆட்சியின்போது ‘அதிகாரச் சமநிலையை’ ஏற்படுத்த பெரும் சிரமத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களை இல்லாதொழிக்கும் ஓர் துணிகர முயற்சியேயாகும். இந்நிலையில் அவர்கள் மீண்டும் நாட்டை ஆளத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், 2015 இற்கு முந்திய தசாப்தத்தில் நிலவிய அளவுக்கு மிஞ்சிய பேராசை, ஜனாதிபதி ஆணைகள், ஆணவம் என்பன தொடரும் என்பது எண்ணிப்பார்க்க முடியாததொன்றல்ல. சர்வாதிகார ஆட்சி ஒன்றே இலங்கைக்குப் பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் தரக்கூடியது எனும் திட்டமிட்ட தவறான பரப்புரையானது, ‘தண்டனை விதிவிலக்குக் கலாச்சாரம்’ மற்றும் ‘அடக்குமுறைச் சமூக ஒழுங்கு’ என்பவற்றை நிறுவனமயமாக்கும் நோக்கைக் கொண்டுள்ளது.

 

பல விடயங்கள் இத்தேர்தலில் ஆபத்திலுள்ளபோதிலும், கீழுள்ள ஒரு சிலவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம்:
மக்கள் பங்கேற்கும் ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும்
சகிப்புத்தன்மையும் நல்லிணக்கமும் நிலவும் பல் இன, மத, மொழி பேசும் சமுதாயம்
மக்கள் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் ஆக்கபூர்வமான அரசியல் கருத்துப் பரிமாறலும், பொது விவாதமும்
சகல இனத்தவர்க்கும் சமத்துவம், சமவாய்ப்பு, பரஸ்பர மரியாதை எனும் கொள்கை.

இனி நடக்கவிருப்பவை என்ன..?
சமூக நிர்வாகங்கள் தேவையற்ற முறையில் இராணுவ மயமாக்கப்படல்
ஊடக அடக்குமுறையும் சுதந்திரமான பேச்சுக்குத் தடையும்
19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் கைவிடப்படல்
பொதுமக்களும் புத்திஜீவிகளும் முன்னெடுக்க வேண்டிய கொள்கைத்திட்டங்களை ஜனாதிபதி செயலணிகள் பொறுப்பேற்கும் அரசியல்
நாட்டின் தலைமைத்துவம் நாடாளுமன்ற அதிகாரங்களை நலிவுறச் செய்தல்
எம் வருங்காலச் சந்ததியினர் திருப்பிச் செலுத்த முடியாதளவுக்கு நாடு மென்மேலும் கடனில் மூழ்குதல்.
பாரியளவு தேசிய சொத்துகள் வெளிநாட்டு நலன்களுக்கு விற்பனை

பல் இன, மத, மொழி பேசும் சமூகங்களைக் கொண்ட எம்போன்ற நாட்டிலே, உண்மையான பாதுகாப்பு என்பது சகிப்புத் தன்மை, சமவாய்ப்பு மற்றும் இனங்களுக்கிடையே இணக்கப்பாட்டை கட்டியெழுப்புதல் மூலமே ஏற்படுத்த முடியும். ஒரு வல்லாட்சி முறையல்ல, வலுவான ஜனநாயக ஒழுங்குமுறையே நமது நாட்டிற்கு நியாயமான எதிர்காலத்தையும், சமாதானத்தையும், சுபீட்சத்தையும் தரவல்லது. எனவே, ‘அதிகாரச் சமநிலை’, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்குப் பயப்படும் ஓர் அரசிடம், கொடுங்கோலாட்சி செய்யவல்ல அதிகாரங்களை நீங்களே ஒப்படைத்துவிடாதீர்கள்.

மாறாக, இராணுவ மாயமாக்கலும் சர்வாதிகாரமும் இனி எப்போதும் தலை தூக்காமல் காத்துக்கொள்ள இதுவே தருணம். இச் சாத்தியக்கூறை மனதில் கொள்ளாமல் வாக்களிப்பதால் வரக்கூடும் ஆபத்துகளைக் கருதாமல் விடுவது விவேகமல்ல. அந்த இருள் சூழ்ந்த காலங்களை நினைத்துப் பாருங்கள். மட்டற்ற ஆட்சியதிகாரங்கள், லஞ்சம், ஊழல், அரசுக்கு அஞ்சி சுயதணிக்கை செய்யும் ஊடகத்துறை, நீதி விவகாரங்களில் அரச தலையீடுகள், சிறுபான்மையினரை அநியாயமாய்த் துன்புறுத்தல். இவை மீண்டும் இடம்பெறாமல் எம்மால் தடுக்க முடியுமா? "ஆம், எம்மால் முடியும்". நாட்டிற்கும் அதன் பல்லின சமூகத்திற்கும் நாம் நம்பிக்கை கொடுக்கக் கூடாதா என்ன? ஒவ்வொரு வாக்காளராலும் இது முடியும்! ஆகவே, வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நம்மை நாமே தோற்கடிக்காமல் பார்த்துக்கொள்வோம். இச் சரித்திரக் கடமையை நமக்காகவும் நம் வருங்காலச் சந்ததிக்காகவும் செய்வோம். மக்கள் நாட்டின் நீண்டகால நன்மையை மனதிற்கொண்டு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் பற்றி அறிவூட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உற்சாகத்துடன் ஈடுபட வேண்டும்.

உங்கள் தோட்டம் எப்படி இருக்கும் என்பது நீங்கள் அவதானமாய் தெரிந்தெடுத்து நடும் விதைகளில் தங்கியிருக்கிறது. உங்கள் வருங்காலம் எவ்வாறு அமையப்போகிறது என்பது நீங்கள் ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று எடுக்கும் தீர்மானத்தில் தங்கியிருக்கிறது. அது அடிப்படையில் எமது சமுதாயம், பொருளாதாரம், உங்கள் பிள்ளைகளின் வருங்காலம் என்பவற்றை பல்லாண்டு காலத்திற்கு மாற்றியமைக்கும். உங்கள் பெறுமதி மிக்க வாக்கை வீணடிப்பதற்கு எந்தவொரு நியாயமுமில்லை. மாறாக, வேட்பளார்களை ஆராய்ந்து, அவர்தம் நோக்கங்களைப் புரிந்து, தகுதிகளை சீர்தூக்கிப் பார்த்து, எவர் அதிகம் திறமை வாய்ந்தவரும் நேர்மையானவருமோ அவருக்கு உங்கள் வாக்கை பொறுப்புணர்வுடன் அளியுங்கள். குற்றவாளிகள் அல்லது சமூக விரோதிகள் என அடையாளம் காணப்பட்ட வேட்பாளர்களை நிராகரியுங்கள். உங்கள் ஒவ்வொரு வாக்கும் பெறுமதியானது. நீங்கள் ஒவ்வொருவருமே ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆகவே தவறாமல் சென்று வாக்களியுங்கள், உங்கள் குரல் கேட்கப் பண்ணுங்கள். ஜனநாயகமும், பொறுப்புக்கூறலும், மனித உரிமைகளுக்கு மதிப்பும், நீதியும் இல்லாதவிடத்து, பொருளாதார சுபீட்சமும் பாதுகாப்பும் வெறும் பகற் கனவாகவே முடியும்.

நலன்விரும்பும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள்
அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம்

கையொப்பமிடப்பட்டது
லாநிதி லயனல் போபகே ( இணைந்துள்ளோர் சார்பில்)

மெல்பன், அவுஸ்திரேலியா
தொடர்பு: +61 405 452 130
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.