- 19.08.2019  உலகப்  புகைப்பட  தினத்தை முன்னிட்டு, இக் கலையை  மதிக்கும்,  அத்தனை  கலைஞர்களுக்கும்  இக்கவிதை  சமர்ப்பணமாகிறது. -
ஶ்ரீராம் விக்னேஷ்
பாரதி  தாசன்சொல்  “உருக்கவர்  பெட்டி”யின்
பரிணாம  வளர்ச்சியா  லே,
பாரினை  ஓர்திரை  அரங்கிலே  கொட்டிடும்
படைப்பாளி  ஆகினோம் : நாம் !
ஊரினை  பேரினை  உறவினை  அறியாது,
ஓர்முனை  எட்டினோ  ரும்….
யாரவர்  என்பதைக்  கவர்ந்திங்கே  சொல்லுவோம்
யாம்செய்யும்  தொழிலினா  லே !

கனவிலே  சுற்றிடும்  உலகென்று  பேருக்கு
கண்டவர்  சொன்னபோதும் :  பலர்
கனவினை  நனவாக்க  கையிலே  பணங்கொட்டும்
கடவுளாம்  கலையின்  கூடம் !
மனதிலே  தோன்றியும்,  தோன்றலுக்கு  அன்றியும்
மறைந்திடும்  காட்சி  முற்றும்,
தனதுளே  காட்டுமே  தலைசுற்றப்  பண்ணுமே
தந்திரக்  காட்சி  மற்றும் !

“ஏன்.?”என்று  கேட்டிட  எவரின்றி  வீதியில்
இழிநிலை  கண்டமா  தும்,
“மான்”என்று  காட்டிட  ஒப்பனைக்  கலையினார்
மணியாகச்  செய்தபோ  தும்,
வான்நின்று  சிரிக்கின்ற  வண்ணத்  தாரகை
“வா.!”என்று  ரசிகர்மோ  தும்,
நாம்நின்று  செய்திடும்  நல்லஒளிப்  பதிவினால்
நடந்தது  அன்றோ  ஏதும்..?

நடைமுறைக்கு  இல்லாத  நம்பவிலா  காட்சியும்
நயமாகச்  சொல்லும்வண்  ணம்,
கடலிலே  மிதக்கின்ற  துரும்பையும்  படத்திலே
கப்பலாய்க்  காட்டிவைப்  போம் !
உடலிலே  நடிக்கின்ற  ஒவ்வொரு  அசைவையும்
ஒளிப்பதிவுக்  கருவியா  லே,
படமெனப்  பெரிதாகப்  பார்வைக்குத்  தெரியவே
பக்குவம்  பண்ணிவைப்  போம் !

இமையம்போல்  ஓர்மலை  இனிதெனக்  கலையினார்
இயற்றியே  வைத்திருக்  க,
அமையுமே  உயிரொடு  அதுஒரு  காட்சியில்
அற்புதம்  படைத்துமிக்  க,
செமையுறு  கடலைப்போல்  சிற்றாறு தோன்றுமே
சிறப்புடன்  பார்த்து  நிற்  க,
உமையெலாம்  வியப்பிலே  உறைந்திடச் செய்யுமே
ஒளிப்பதிவுத்  துறையே  சொக்க !

காலத்தின்  மாற்றத்தால்  கணினியின்  யுகமாக
கலையுலகு  மாறியதா  லே,
வேலைகள்  எளிதாக  விரைந்தேதான்  செல்கின்ற
வேடிக்கை  புகுத்திவைப்  போம் !
சோலைக்கு  நடுவிலோர்  சொர்க்கத்தைக்  காட்டிட
சொல்லும்நெறி  யாளர்முன்  னே,
மூலைக்கு  மூலையாய்  முடியாத  சொர்க்கங்கள்
முந்நூறைக்  காட்டிவைப்  போம் !

கண்மூடி  விழிக்கின்ற  காலைக்குள்  காட்சிகள்
காணாமல்  போனபோ  தும்,
கண்முன்னே  நிழலாடும்  கனிவான  காட்சியாய்
“கமிரா”க்கள்  கண்டுபே  சும் !
மண்மீது  வாழ்கின்ற : வாழத்  துடிக்கின்ற
மகத்தான  நடைகள் : முறைகள்,
கண்ணூடே  இழுத்துள்ளே  கனமாகப்  பதித்துள்ளே
“கமிரா”க்கள்  பேசும் !  பேசும் !!

காலத்தால்  அழியாத  கலைகள் பலகண்ட
கண்ணான  தமிழர்  முன்னே,
கோலங்கள்  பலபோட்டுக்  குவித்தார் பலபரிசு
குறையின்றிக்  கமிரா  வாலே !
ஞாலமே  புகழுங்காமி  ராக்கவிஞர்  பாலுவோடு
நல்லஒளிப்  பதிவார்  ஸ்ரீராம்,
மேலும்கர்ணன்,  அசோக்குமார்  லெனினோடு  பின்னாலே,
மிடுக்காக  நாமும்செல்  வோம் !


உருக் கவர் பெட்டி  =  camera வுக்கு பாவேந்தர் வைத்த தமிழ்ச் சொல்.
கனவுத் தொழிற்சாலை = புகைப்படத்தையும், சினிமாவையும்  இணைத்துப்  பேசும்  வஞ்சப் புகழ்ச்சி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.