ஶ்ரீராம் விக்னேஷ்

கர்ப்பமெனத் தங்கியதைக் : கரையேற்றும் வரையினிலே
காக்கும்தாய் நெஞ்சினிலே தீ - அது
பெற்றவளைப் போலவொரு : பெண்ணாய்ப் பிறந்துவிட்டால்
பிறகு என்ன வாழ்வுமுற்றும் தீ !

கண்சிமிட்டிப் பார்த்துஅது : கலகலப்பாய்ச் சிரித்துவிட்டால்
கண்திருஷ்டி என்றுஒரு தீ - அதை
கண்சுற்றிக் கழிப்பதற்குக் : கண்டுகொண்ட முறையினிலே
கண்முன்னே எரித்திடுவார் தீ !

கல்விகற்க அனுப்பிவிட்டுக் : காலைமுதல் மாலைவரை
கக்கத்திலே தாய்கொள்வாள் தீ - மகள்
கற்கையிலே ஆங்கொருவன் : காதல்வசப் பட்டுவிட்டால்
கண்களிலே கொண்டிடுவாள் தீ !

காதலித்து மணப்பவனும் : கல்யாணப் பந்தரிலே
காசுபணம் கேட்பதுவும் தீ - அதை
கண்டு துடிதுடித்து : கண்ணீர் வடித்திடுவாள்
கன்னியவள் மூச்சினிலே தீ !

கட்டியவன் வாழ்க்கையிலே : காலப் போக்கினிலே
கசப்புடனே பேசுமொழி தீ - அவன்
எட்டிஉதைக்கையிலே : எதிர்ப்பேச்சுப் பேசாமல்
ஏற்றிடுவாள் தன்னுடலில் தீ !

வட்டமிட்டுச் சுழன்றுவரும் : வாழ்க்கைச் சக்கரத்தில்
கட்டவிழ்ந்து பரவிவிடும் தீ - இது
சட்டிவைத்த அடுப்பினிலும் : விட்ட எண்ணெய் விளக்கினிலும்
விசுவாசம் காட்டிவிடும் தீ !

அரும்பான்மை இனத்தோரை : அழித்தே ஒதுக்கிவிடப்
பெரும்பான்மை வைத்துவிடும் தீ - மனம்
திரும்பாமல் எதிர்த்துவிட : பெரும்பாடாய் எழுந்துவிடும்
அரும்பான்மை இனத்துநெஞ்சம் தீ !

இரக்கமின்றி ஜானகியை : இழுத்தே சென்றதனால்
அரக்கரது மண்தனிலே தீ - அது
பெருக்கமுடன் வாழுதுபார் : பேரழிவைக் காட்டுதுபார்
கிறுக்கரது ஆட்சியினால் தீ !

இலங்கையிலே சிங்களமும் : இந்தியாவில் இந்தியுமே
துலங்கிவிடும் தமிழினுக்குத் தீ - உளம்
கலங்கிவிடும் நிலைதன்னைக் : கனவினிலும் காணாமல்
கண்சிமிட்டும் “தமிழ்”அவர்க்குத் தீ !

புறம்காணாப் போரிலே : மறம்காணும் வீரர்தம்
கரம்காணும் வாளிலே தீ - அவர்
நிறம்காண நேரிலே : புறம்காணப் பாடினார்
புலவர்காண் எழுத்தினிலே தீ !

வாழ்வுபுகும் மணவார்முன் : வைத்திடுவார் வேதியர்கள்
நாள்பார்த்து ஓமமென்னும் தீ - இதில்
ஆளொருவர் வஞ்சித்தால் : அவரைச் சுட்டெரித்து
பாழ்படுத்தி விட்டுவிடும் தீ !

லாட்டரிகள் பலஎடுத்தும் : லட்சத்தைக் காணார்க்கு
லம்பாகக் கிடைக்கவைக்கும் தீ - ஒரு
ஓட்டெடுப்பு வேளையிலே : ஒருவன் தீக்குளித்தால்
ஒருலட்சம் கொடுக்கவைக்கும் தீ !

வாழ்வுமுற்றிக் காடுறையும் : வாய்ப்பு வருகையிலே
வாட்டிமெய்யை வேகவைக்கும் தீ - அந்த
வாழ்வுமுற்றும் தம்மோடு : வரும்இன்ப துன்பத்தில்
வணங்கிடுவார் முன்னவர்கள் தீ !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.