கவிதை: அஸ்தமனத்தின் அஸ்திவாரங்கள்.

Saturday, 08 December 2018 19:54 - தம்பா (நோர்வே) - கவிதை
Print

- தம்பா (நோர்வே) -முகில்களை முகர்ந்து பார்க்க
மாடிகளாக வளர்த்த பின்
சலித்து கொள்கிறது
சபித்தும் கொள்கிறது.
அஸ்திவாரத்தில் கிடப்பதெல்லாம் 
வெறும் கல்லும் மண்ணும் என்று
சலித்து கொள்கிறது
சபித்தும் கொள்கிறது.

அஸ்திவாரங்களை அலட்சியபடுத்தி 
ஆகாயத்தில் ஆடித்தவிக்கும்
அரக்குமாளிகைகளை அழகுபடுத்து.

தோளினிலும் முதுகினிலும்
சவாரி செய்து
சவாரியின் தோலை உரித்து
சப்பாத்துகள் செய்துகொள்.
விரியும் பயணத்தின்
பாதங்களை எப்போதும்
பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
உதவியவனை உதைந்து விழுத்த
ஆத்மார்த்தமான  ஆயுதம் அதுமட்டுமே.

ஏறியமர்ந்த முதுகுத்தண்டை பிளந்து
ஊன்றுகோலை வடிவமைத்துக்கொள்,
தடுமாற்றமின்றி முதுகிற்கு முதுகு
தாவிக்கொள்வதற்கு உதவிடலாம்.

எல்லைகளை தொட்ட கணம்
தாங்குபவனையும்  சுமப்பவனையும்
தாழ்ந்தவன் என பிரகடனப்படுத்த தயங்கிடாதே.
சூழ்ச்சியின் வெற்றியே
'மனுதர்மம்´ என இறுமாப்பும் கொள்.

மதியின் விதி
மதித்தவர்களை மறந்ததில்லை,
மறந்தவர்களை மதித்ததில்லை.

வறண்ட வளியிலும்
குளிர்ந்த  குளத்திலும்
வாழ்வை குலைத்து கொள்ளாது
வந்து போனாலும் பறவைகள்
வேடந்தாங்களை மறந்ததில்லை.

தாய் இன்றி பேறில்லை
வேர்களின்றி மரங்களில்லை.


Last Updated on Saturday, 08 December 2018 19:56