கவிதை; திருவிழாவில் தொலைந்து போதல்

Tuesday, 28 May 2019 08:20 - தம்பா (நோர்வே) - கவிதை
Print

- தம்பா (நோர்வே) -விரிந்த உலக வலையின்
அத்தனை நம்பிக்கைகளும்,
தத்துவங்களும்,
மதங்களும்
சாமானியனுக்கு கைவிரிக்கும்.
அனுதினமும் சாண் எற முழஞ்சறுக்கி
கரையேற்றத்தை கானல் நீராக்கி காக்கவைக்கும்.

வியாபாரிக்கு விலை மதிப்பில்லா
உலோகமோ
பண்டமோ
பத்திரமோ
அடைமானத்தின் பிடிமானமே
கஞ்சத்தனத்தை களைக்கும் நம்பிக்கைகளானது.

மோசமான வியாபாரியே
உலோகமற்ற உயிரின்
அடைமானத்தில் அவமானம் காண்பான்.

உலக மகாநேயத்தின் மன்னனை
தமிழன் என்றால்
அவனுக்கு பெரும் சக்கரவர்த்தி
வேட்பாளர் என புளகாங்கித்து முழங்கு.

வேதனை தலைகளை அறுத்து
விடுதலையின் கணலை
நாடும் கரங்களை கட்டிபோட
கை விலங்குகள் வேண்டவோ,
நெஞ்சின் வலியை கூவிசொல்ல
கிழிந்த வாய்க்கு
பிளாஸ்திரி வேண்டவோ,
அர்த்தங்கள் அழிந்த வாழ்வை திறக்க
தூக்குக்கயிறு வேண்டவோ
அரை தசாப்தங்கள் காத்திரு.

உயிரின் மகசூலை
அறுவடை செய்யும் வேதாளத்திற்கு
மானத்தை
மரியாதையை,
சுயகவுரவத்தை ஒன்று திரட்டி
ஒரேயொரு விரலின் புள்ளியில்
அடைமானம் வை.

Last Updated on Tuesday, 28 May 2019 08:22