சூறை ஆடி விட்டார்கள் ! அனைவருமே ஆசை கொள்வோம் !

Tuesday, 04 June 2019 07:20 - மகாதேவஐயர் ஜெயராமசர்மா ( மெல்பேண், அவுஸ்திரேலியா ) - கவிதை
Print
1. சூறை ஆடி விட்டார்கள் !

- யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை வெளிப்படுத்தும் இதயத்தின் குமுறல் -

ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து
நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியாதால்
ஓடாக உழைத்து நிதம் உருப்படியாய் செய்தமையே
வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்

எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்
எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே
நித்தமும் நாம்படிப்பதற்கு புத்தகமாய் இருக்குமவை
எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்

நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது
நூல்நிலையம் அருகிருந்தால் தேடிடிடலாம் அறிவையெலாம்
பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக
நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்

யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள்
வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்
சிறந்தோங்கி நின்றதனை தேசமே தானறியும்
எத்தனையோ வகையான புத்தகங்கள் இருந்ததங்கே
அத்தனையும் படிப்பவர்க்கு அருமருந்தாய் அமைந்தப்போ
சொத்தாக மதித்துமே புத்தகத்தைக் காத்தார்கள்
சுவையறியா அரக்கர்களோ சூறையாடி விட்டார்கள்

கற்றுணர்ந்தோர் வாழ்ந்தவிடம் கல்விக்கூடம் நிறைந்த இடம்
கண்ணியத்தின் உறைவிடமாய் கருத்திலே நின்றஇடம்
பெற்றவர்கள் பிள்ளைகளை பெரிதாக்க நின்றஇடம்
பித்தர்களின் வெறியாலே சொத்தையெல்லாம் இழந்தார்கள்

கோவிலுக்கு நிகராகக் கொண்டாடும் நூலகத்தை
கொடுங்கோலர் பலர்சேர்ந்து கொழுத்தியே விட்டார்கள்
தாவீது எனும்சாது தன்னளவில் தாங்காது
ஓய்வெடுத்து நின்றதுவே உலுத்தர்களின் செயலாலே

நூல்நிலையம் எரித்தவர்கள் நூறுமுறை பணிந்தாலும்
தலைசிறந்த படிப்பாளி தாவீது வருவாரா
எரித்தவர்கள் மனத்தினிலே இரக்கமே வாராதா
அரக்க குணம் இன்னுமே அழியாமல் இருக்கலாமா
2. அனைவருமே ஆசை கொள்வோம் !
பணத்தோடு வாழுகிறார் படிப்போடு வாழுகிறார்
பட்டம்பல பெறுவதற்கும் திட்டம்பல போடுகிறார்
இனம்பற்றி பேசுகிறார் எங்கள்மொழி என்கின்றார்
ஈவிரக்கம் தனையவரும் எண்ணிவிட மறுக்கின்றார்  !
மாநாடு பலசெய்வார் மலர்கள் வெளியிடுவார்
மேடைதனில் ஏறிநின்று விறுவிறுப்பாய் பேசிடுவார்
உலகமதில் உன்னதத்தை உருவாக்க வேண்டுமென்பார்
உள்ளமதில் உண்மைதனை இருத்திவிட மறுக்கின்றார் !

நீதிநூல்கள் அத்தனையும்  பாடமாக்கி  வைத்துள்ளார்
பாடலெலாம் பக்குவமாய் பலருக்கும் காட்டிடுவார்
ஆதிமுதல் அந்தம்வரை அறங்காக்க வேண்டுமென்பார்
அழுதுநிற்பார் துயரகற்ற அவரெண்ண மறுக்கின்றார்  !

எத்தனைதான் படிப்பிருந்தும்  எவ்வளவு பணமிருந்தும்
எண்ணமதில் நல்நினைப்பு இல்லாமல் என்னபயன்
ஆரவாரம் தனையொழிப்போம் ஆணவத்தை அகற்றிநிற்போம்
அன்புகொண்டு பார்த்துவிட அனைவருமே ஆசைகொள்வோம்  !
Last Updated on Tuesday, 04 June 2019 07:28