“தந்தை என்னும் தெய்வம்” (தந்தையர் தினக் கவிதை)

Sunday, 16 June 2019 01:20 - ஸ்ரீராம் விக்னேஷ் , வீரவநல்லூர் (திருநெல்வேலி மாவட்டம்) - கவிதை
Print

ஶ்ரீராம் விக்னேஷ்

பல்கலைக் கழக மென்று : பாரது போற்றிச்  சொல்ல,
நல்லதோர் குடும்பம் செய்யும்…..சிந்தை ! -  அந்த,  
நல்லவர் பேருலகில்……..    தந்தை....!

ஓர்பது  மாதந்  தன்னில் : ஒருத்திதன்  வயிற்றிற்  கொளினும்,
யார் அதன்   வேரை இட்டார்…….  முதலில் ?  -  அவர், 
பேர் அது   தந்தையாகும்……   உலகில்....!

வானது  பெய்தால் தானே : வையகம்  பசுமை  காணும்,
வானைப்போல்  வழங்கிடுவார்……  வாரி !   -  அந்த, 
வான்புகழ்  கொண்ட தந்தை …….     பாரி...!

அன்பெனும்   அமளி  மேலே  :  அன்னைதான்  துயிலச்  செயினும்,
நன்புகழ் அறிவை   ஏற்றும்…….  ஜோதி !  -  அது,
நானிலம்  புகழும்    தந்தை…….      ஜாதி...!

எதை எதோ   நினைத்து  நெஞ்சம் : ஏங்கிய  போதும்  மழலை,    
உதையினைக்  கண்டபோது…… மலரும் !  -  அந்த,  
உத்தமர்  தந்தை என்பார் …….     பலரும் !

 

துள்ளியே  திரியும்  நாளில்  :  துடுக்கினை  அடக்கி வைத்தே,
பள்ளிக்கே  அனுப்பிவைக்கும்…….  முறைமை !   -   அந்த,
பக்குவம்  தந்தை  கொண்ட ……..    கடமை !

தன்மகன்  படிப்பில்  தேறித்  :  தரமானோர்  சபையின்  முன்னே,
முன்னிலை   வகிக்க  எண்ணும்…….     நெஞ்சம் !  -  அந்த,
முறையாளன்  தனையுலகே……    கொஞ்சும் !

பெற்றதாய்   சுற்றத்  தோர்கள் : பெருமையாய்  மகனைச்  சொல்ல,
மற்றவர்  முன்னே புகழா……..   மெளனம் !   -   அவனை,
மனதுக்குள்  புகழ்வதில்தான்…….  கவனம் !

அன்னையைக்  கண்ட  பின்தான்  :  அப்பனைக்  காண்போம்  எனினும்,
முன்நிலைப்  பெயரில் நிற்பார்……..   தந்தை !   -   அந்த, 
முறையோனைப்   பணியட்டுமே……..      சிந்தை !

நெஞ்சின்மேல்  தூங்க  வைத்து  :  நிம்மதி  கொள்வார்   நாமும்,
துஞ்சிடும்  அழகில் காண்பார்……..  வையம் !   -  அவர்,
தூய்மையில்  சிறிதும்  இல்லை…….  ஐயம் !

உப்பது   தீர்ந்த  பின்தான்  :  உப்பின்  சுவை அறிவார்,
அப்பனும்  போனபின்தான்………   அழுவார் !  -  அதனை, 
அறிவால்  உணர்ந்தவரே…….   எழுவார் !

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 16 June 2019 01:22