ஶ்ரீராம் விக்னேஷ்

பதியிழந்து   பலமிழந்து,
படைத்துவிட்ட    நாடிழந்து,
கதியிழந்து  வருவரல்ல  அகதி!  -  ஆங்கே
விதியிருந்தும்   கதியிருந்தும்,
விபரமற்றோர்   தமைமிதிக்கும்,
வீணர்களே  உள்ளூரின்   அகதி!

நெற்றிதன்னில்  வழிகின்ற,
நீள்வியர்வை   நிலஞ்சிந்த, 
கஷ்டமுற்று   உழைப்பவனின்  கூலி!  -  அதை
பத்தினுக்கு  எட்டாக்கி,
பகற்கொள்ளை   அடிப்பவரே,
சொத்துசுகம்   வைத்திருந்தும்  அகதி!

விற்றுவிடும்  தானியங்கள்,
விலையேறிப்   போகையிலே,
சுற்றியதைச்  சுருட்டிவைக்கும்  தகுதி!  -  அதில்
பெற்றுவிடும்   லாபமெண்ணிப்,
பிறர்வயிற்றை  நோகவைக்கும்,
அற்பர்களே  இதயமில்லா   அகதி!

நலிந்துவிட்டோர்க்(கு)  உதவித்தொகை,
நல்லபடி   அரசுதர,
நாணமின்றித்   தின்னுமதி  காரி!  -  அவன்
மெலிந்தே  வலிந்திரக்கும்,
மேனியர்க்கும்   கேவலமாய்,
நலிந்துவிட்ட  நோயான  அகதி!

வீட்டிலுள்ளோர்   பசியிருக்க,
வெறிபிடித்துக்   கூத்தியரின்,
பாட்டினிலே  தமைமறக்கும்  தகுதி!  -  அதை
நாட்டமுடன்   செய்துவிட்டு,
நல்லவர்  வரிசையிலே,
நாடும் வெள்ளை   வேட்டியரும்  அகதி!

பண்படுத்தும்  ஆயுதமாய்,
பலமதங்கள்   தோன்றிடினும்,
பக்குவத்தை   அடையாத   பகுதி!  -  இன்னும்
கண்துடைப்புச்   சாஸ்த்திரத்தைக்,
காரணமாய்க்   காட்டிப்பலி,
காண்பவரே  ஞானமற்ற   அகதி!

தஞ்சமென்று   துணைகேட்டு,
தளர்ந்துவரும்   அகதியரை,
தாங்கும்ஐயா   பல்வேறு  இதயம்!  -  ஆனால்,
அஞ்சுவகைப்   பாதகமும்,
அச்சுவெல்ல   மாக உண்ணும்,
நஞ்சருக்கு   யார்கொடுப்பார்  எதையும்...?