- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

1. பகல் வேடக்காடு....

நன்மதியைத் துன்மதி ஆக்குபவர்
வன்முறையாளர் பழிவாங்கும் சிந்தனையாளர்
இன்பமில்லா விடமேறிய சொற்களுடன்
அன்புக்காட்டைக் கொலைக்காடு ஆக்குபவர்
புன்னகையில் மர்மங்கள் புதைத்துள்ள
தென்பற்ற உறவுகள் விலக்குதற்குரியன.

பூச்சொரியும் என்று புறப்பட்ட
பாதங்கள் பாவிசை கேட்காது
பரவச மொழியை இழந்தால்
பந்தம் அறுத்திடும் ஒரு
பகல் வேடக்காடு தானே
பகிரங்க வாழ்வு மேடை.

முகத்தை முகம் பார்த்து
முக்காடற்று நிமிர்ந்து நேராக
முகம் கொடுப்பதே சுயநடை
முனகி விம்மும் மனமுகடு
முரணாகிச் சரிவதும் இயல்பு.
தரமற்ற நிலையின் தழுவலேயிது!

2. மனம் சிறகு விரித்தால்

கனமென்று நத்தைக் கூட்டினுள்
தினம் போர்வையுள் ஏன்!
மனம் சிறகு விரித்தால்
சனங்களின் தொடர்புச் சங்கிலியுள்
வனப்புடை பொறாமையற்ற உறவில்
இனத்தைப் பிணைத்தலும் இனிமையன்றா.


3. துரியோதனச் சதுரங்கம்.

இறகுகளின் அசைவில் மலர் மணம்
இதமென்று தேடும் போது
இதயம் நிறை வக்கிரங்களை
இறைப்பதில் சுகமடையும் ஆட்டம்!
உள்ளே எடுத்து உமிழ்தலும்
துரியோதன மனச் சதுரங்கம் தான்.

புயல் இறைத்து வானம்
அமைதியானாலும் அதன் சுபாவம்
அடங்காது மறுபடி மறுபடி எழும்
ஏமாற்றச் சேறும் மனிதனின்
பண்பான பாதங்களை அழுக்காக்கும்.
தோற்றுப் போதலில் வற்றும்
ஊற்றுக் கண்ணாம் அன்பு நதி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.