ஆனந்தமாய் தீபாவளி அமைகவென வேண்டி நிற்போம் !

Saturday, 26 October 2019 08:36 - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா - கவிதை
Print

தித்திக்க தித்திக்க பட்சணங்கள் செய்திடுவோம்
தெருவெங்கும் மத்தாப்பு வெடிவெடித்து நின்றிடுவோம்
மொத்தமுள்ள உறவுகளை முகமலர்ச்சி ஆக்கிடுவோம்
அத்தனைபேர் ஆசியையும் அன்புடனே பெற்றிடுவோம்
சித்தமதில் சினமதனை தேக்கிவிடா நாமிருப்போம்
செருக்கென்னும் குணமதனை சிறகொடியப் பண்ணிடுவோம்
அர்த்தமுடன் தீபாவளி அமைந்திடவே வேண்டுமென
அனைவருமே ஆண்டவனை அடிதொழுது பரவிநிற்போம் !

புத்தாடை  உடுத்திடுவோம் புத்துணர்வும் பெற்றிடுவோம்
பெற்றவரைப் பெரியவரை பெரும்பேறாய் போற்றிடுவோம்
கற்றுணர்ந்து நாமிருக்க காரணமாய் ஆகிநிற்கும்
நற்றவத்து ஆசான்கள் பொற்பதத்தைப் பணிந்திடுவோம்
குற்றங்குறை சொலுமியல்பை கொடுந்தீயால் எரித்திடுவோம்
குதர்க்கமிடும் குணமதனை குழிதோண்டிப் புதைத்திடுவோம்
சொற்களிலே சுவையிருத்தி சுகம்பெறவே வாழ்த்திடுவோம்
அர்த்தமுடன் தீபாவளி அமைந்திடுமே அனைவருக்கும் !

மதுவருந்தும் பழக்கத்தை மனமிருந்து  அகற்றிடுவோம்
மாமிசத்தைப் பெரிதெனவே எண்ணுவதை மறந்திடுவோம்
பொதுவிடத்தை கழிப்பறையாய் ஆக்குவதை தவிர்த்திடுவோம்
போரொக்கும் குணமதனை பொசுக்கியே விட்டிடுவோம்
நலந்திகழும் திட்டமதை நம்மனதில் இருத்திடுவோம்
நம்மொழியை நம்மண்ணை கண்ணெனவே எண்ணிடுவோம்
விலங்குமனப் பாங்குமண்ணில் வீழ்ந்ததுவே தீபாவளி
எனுங்கருத்தை உளமிருத்தி இனிப்புண்டு மகிழ்ந்துநிற்போம் !

தீபாவளித் திருநாள்  திருப்பங்கள்  தந்திடட்டும்
தித்திப்பும் மத்தாப்பும்  தீபாவளி அல்ல
கோபதாபம் போயகல கொடியதுன்பம் விட்டோட
யாவருமே மகிழுவதே நல்ல தீபாவளியன்றோ
ஆவலுடன் காத்திருக்கும் அனைத்துமே வரவேண்டும்
ஆறுதலும் தேறுதலும் அள்ளிக்கொண்டு வரவேண்டும்
அமைதியெனும் பேரொளியை காட்டுகின்ற நாளாக
ஆனந்தமாய் தீபாவளி அமைகவென்று வேண்டிநிற்போம் !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 26 October 2019 08:44