கவிதை:  எனக்குப் பேசத்தெரியும்

எனக்குப் பேசத்தெரியும்
காக்காய் பிடிப்பது போலவும்
சோப்பு போடுவது போலவும்
ஜால்ரா தட்டுவது போலவும்
பேசப் பழகிக் கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்

எனக்குப் பேசத்தெரியும்
என் நலன்
என் வீட்டு நலன்
என் நோட்டு நலன்
பற்றி மட்டுமே பேசப் பழகிக் கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்

எனக்குப் பேசத் தெரியும்
அவளோடு நெருக்கமாக அவன் யாராக இருக்கும்
அடுத்தநாள் தொடரில் அவன்நிலை எப்படி மாறும்
வட்டிக்கான பணம் வந்ததா இல்லையா?
ஆத்தாடி,... இன்னுமா உன் மாமியார் உயிரோடு இருக்கிறாள்?
எல்லோரைப்போல நானும் ஒருத்தியாய்ப் பேசப் பழகிக்கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்

எனக்குப் பேசத் தெரியும்
ஏன்டிம்மா ஓயாமல் இறுமி தொந்தரவு தர
சும்மா சும்மா காசு கேட்கிற உன் அப்பன் வீட்டுக்காசா
என்கிட்ட இருக்கு?
உன் பிள்ளைக்கு மூக்குசிந்த நான் என்ன வேலைக்காரியா?
கூடப்பிறந்ததுன்னு சொல்லிகிட்டு கௌவரப் பிச்சை கேட்க
வந்திடுறானுங்க கடன்காரனுங்க
இறுக்கிப் பிடிச்சு கட்டுசெட்டா பேசப் பழகிக் கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்

பிறகொருநாள் மனசாட்சியின் வருகை
கன்னம் வீங்கி இரண்டுபல் உதிர்ந்ததாகவும்
வளைந்த கருக்கரிவாள் கொண்டு
நாவை அறுத்துக் கொள்வது போலவும்
மயிரைச் சுழற்றி அடித்து வாயில் உதைப்பது போலவும்
ஒரு கண தோற்றத்தில் உடல் அதிர்ந்துகொண்டே இருந்தது

இப்போது,
எனக்குப் பேசத்தெரியும்
இருண்டு கருகியதாய் இருந்த
இன்னொரு பக்கத்தில் வெள்ளி முளைத்திருந்தது
எங்கோ அழும் குழந்தைக்கு என்மார் சுரந்தது.
இங்கும் அமர்வேன் எனக்குப் பாதுகாப்புதான்
சிட்டுக்குருவி ஒன்று கரங்களில் ஏறிக்கொண்டு
கீசுகீசு என்று என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறது
நானறிவேன்  இப்போதுதான் நான் பேசத் தெரிந்தவள்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.