அரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் கவிதை : "நெஞ்சு பொறுக்குதில்லையே"

Monday, 24 February 2020 10:37 - அரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் - கவிதை
Print

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே - நம்மை
நெருங்கிடும் துயரங்கள் நீள்வது கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லையே!

அடிமை விலங்கொடித்து ஆர்ப்பரித்தோம்
அடைந்துவிட்டோம் சுதந்திரமெனக் கொக்கரித்தோம் - இன்று
நெஞ்சு பொறுக்குதில்லையே!

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் கடக்கையில்
அங்கும் இங்குமாய்ச் செய்திகள் படிக்கையில்
நெஞ்சு பொறுக்குதில்லையே!

இறைவன் இருப்பிடத்தைக் கேடயமாக்கி
இளஞ்சிறார் சிதைக்கப்படுவதா சுதந்திரம்
நெஞ்சு பொறுக்குதில்லையே!

கைம்மாறு கருதாது உதவிய காலம்போய்
கையூட்டு இல்லாமல் காரியம் நடப்பதெங்கே
நெஞ்சு பொறுக்குதில்லையே!

கல்வியைக் கற்பிக்க வேண்டிய களங்களில்
கலவியைக் கையிலெடுத்த கயவர்கள் கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லையே!

கலப்படம் செய்வதைத் தொழிலாய்க்கொண்டு
பல கயமைகள் தொடர்ந்து நடப்பது கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லையே!

கல்வியும் கேள்வியும் கடைச்சரக்குகளாய்க்
கூவிக் கூவி விற்பது பெரும் வணிகம் இன்று
நெஞ்சு பொறுக்குதில்லையே!

நாளைய சமுதாயம் இளைஞர் கையிலென்றார்
இன்று அவன் கையிலிருப்பதோ மதுக்கிண்ணம்
நெஞ்சு பொறுக்குதில்லையே!

கொலையும் கொள்ளையும் குற்றப்பின்னணியும்
மக்கள் பிரதிநிதிக்குத் தகுதியாய்ப் போனதே
நெஞ்சு பொறுக்குதில்லையே!

இயற்கை வளங்களைக் காப்பது விடுத்து
அழித்தொழிப்பதைத் தொழிலாய்ச் செய்வதா
நெஞ்சு பொறுக்குதில்லையே!

மனிதகுலத்தின் சுயநலப்போக்கை
மனதில் இருத்தி எண்ணிப்பார்த்தால்
நெஞ்சு பொறுக்குதில்லையே!

எலிக்கறி தின்று ஏழ்மையில் வாடும்
எங்கள் விவசாயிகள் துன்பம் தீர்ந்தபாடில்லை
நெஞ்சு பொறுக்குதில்லையே!

வறுமை ஒழிக்கத் திட்டம் பல தீட்டி
வளமையானது தங்கள் வாழ்வென்பர்
நெஞ்சு பொறுக்குதில்லையே!

மக்கள்தொகைப் பெருக்கம் ஒருபுறம்
பட்டினிச்சாவுகள் மறுபுறம்
நோய்களின் தீவிரம் ஒருபுறம்
வேலையில்லாத்திண்டாட்டம் மறுபுறம்
விவசாயிகள் தற்கொலை ஒருபுறம்
ஆணவக்கொலைகள் மறுபுறம்
பாலியல் வன்முறைகள் ஒருபுறம்
தீண்டாமைக்கொடுமைகள் மறுபுறம்
நெஞ்சு பொறுக்குதில்லையே!
பதட்டமின்றிக் கடந்து செல்வது எவ்வாறு?
படித்த இளைஞர்களுக்கு அது ஒவ்வாது!

நெஞ்சு பொறுத்தது போதும் - நெருங்கிவா
நிமிர்ந்த தோள்களோடு;
வஞ்சனை புரியும் வகையார்க்கு
வைக்கலாம் வா ஒரு தேர்வு !

நாளைய நல்ல விதைகளை உற்பத்தி செய்ய
இன்று நாம் உரமேற்பது காலத்தின் கட்டாயம் !

விடியல்கள் விடைசொல்லக் காத்திருக்கின்றன
விரைந்து வா தோழனே!
வேதனைகளை வேரறுத்துப் பெரியோர்
போதனைகளை நெஞ்சில் நிறுத்தி
நாளைய சமுதாயம் நயம்படப் படைக்க
நாமொரு படையாய் நின்றிட வேண்டும் !
நல்லவையாவும் நாம் வென்றிட வேண்டும் !

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 24 February 2020 10:38