கவிதை: மழை வாழ்த்தும் காதலர்!

Monday, 23 March 2020 22:45 - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண், அவுஸ்திரேலியா - கவிதை
Print

மழை வாழ்த்தும் மானுடர்!
வாழையிலை குடையாக
வதனமெலாம் மலர்ச்சியுற
விண்ணின்று பன்னீராய்
மழைத்துளிகள் சிந்திடவே
நாளைதனை நினையாமல்
நனையுமந்த திருக்கோலம்
பார்ப்பவரின் மனமெல்லாம்
பக்குவமாய் பதிந்திடுமே   !

உலகநிலை தனைமறந்து
உளமகிழ்வு முகம்காட்ட
மழைநனையும் அழகுநிலை
மனமதனில் அமர்கிறதே
களங்கநிலை காணாத
காதல்நிறை பிணைப்பாக
கைதொட்டு நிற்குநிலை
களிப்பூட்டி  நிற்கிறதே  !

ஏழ்மையது எழிலாக
இங்குருவாய் ஆகியதே
ஆழமுடை  அன்புநிலை
அருகணைந்து தெரிகிறதே
வாழையிலை மகிழ்வுடனே
காதல்கண்டு மகிழ்கிறதே
மழைகூட  இவர்களுக்கு
வாழ்த்துக்கூறி நிற்கிறதே   !

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 14 April 2020 10:32