- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

உயிரினங்கள் வரிசையிலே உயர்ந்தவிடம் மனிதருக்கே
அறிவென்னும் பொக்கிஷத்தை அவரேதான் பெற்றுள்ளார்
புவியிருக்கும் உயிரினங்கள் உணவெண்ணி உயிர்வாழ
அறிவுநிறை மனிதர்மட்டும் ஆக்குகின்றார் அகிலமதில்  !

காட்டையே வாழ்வாக்கி வாழ்ந்தவந்த மனிதவினம்
காட்டைவிட்டு வெளிவந்து கலாசாரம் கண்டனரே
மொழியென்றார். இனமென்றார் சாதியென்றார் மதமென்றார்
அழிவுள்ள பலவற்றை ஆக்கிடவும் விரும்பிநின்றார்  !

விஞ்ஞானம் எனுமறிவால் வியக்கபல செய்துநின்றார்
அஞ்ஞானம் அகல்வதற்கு விஞ்ஞானம் உதவுமென்றார்
விண்கொண்டார் மண்கொண்டார் வெற்றிமாலை சூடிநின்றார்
வியாதியையும் கூடவே விருத்தியாய் ஆக்கிவிட்டார்  !

ஆராய்சி எனும்பெயரால் அபாயத்தை அரவணைத்தார்
அணுகுண்டை கண்டறிந்து அழிவுசெய்ய ஆவலுற்றார்
ஆக்குகின்ற அவரறிவு அகிலத்தைக் காக்காது
பார்க்குமிடம் எல்லாமே படுகுழியைத் தோண்டியதே  !

நோய்களுக்கு மருந்துகண்டார் போயகலச் செய்துநின்றார்
நல்விருந்தாய் மருத்துவத்தை நாடறியக் கொடுத்துநின்றார்
பேராசை கொண்டிருந்த பேரரசால் ஆராய்ச்சி
பேரழிவைத் தருவதற்கு பெருவழியை வகுத்ததுவே  !

செல்வத்தை திரட்டுவதில் போட்டிபோட்ட அரசெல்லாம்
சிறப்புடைய அறிவியலை சுயநலமாய் ஆக்கியதே
வெல்லவே முடியாமல் விஞ்ஞானம் வளர்ந்தாலும்
வீழ்த்திவிட  சுயநலங்கள் விஸ்வரூபம் கொண்டனவே  !

நுண்கிருமே ஆராய்ச்சி பலவகையில் உதவிடினும்
தம்விரும்பம் நிறைவேற பேரரசார் ஆசைகொண்டார்
நுண்கிருமே நோயாகி பல்லுருவம் எடுத்ததனால்
தம்தலையில் மண்வாரி இறைத்தநிலை ஆகியதே  !

எதையுமே நினையாது வாழ்ந்துவந்த மக்களெலாம்
ஏக்கமுற்று கண்ணீரில் இருக்கும் நிலையாகிதே
விந்தைதந்த விஞ்ஞானம் வினையாக வடிவெடுத்து
கொரனோவை உருவாக்கி பலியெடுத்து நிற்கிறதே  !

அறிவுடைய மனிதவினம் ஆசைகொண்ட காரணத்தால்
பெருவழிவை காணுகின்ற பேரவலம் நிகழ்கிறது
ஆணவத்தால் விஞ்ஞானம் ஆட்கொள்ளப் பட்டமையால்
அநியாயமாய் உயிர்கள் அழிந்தபடி இருக்கிறது  !

இன்னுமே விஞ்ஞானம் காப்பாற்றும் எனவெண்ணி
தம்நலத்தை இழந்துபலர் தளர்வின்றி உழைக்கின்றார்
சுயநலத்தை துறந்திட்டால் துன்மபதைத் துடைத்திடலாம்
கொரனோவை அழிப்பதிலே கோபதாபம் தவிர்த்திடுவோம்  !

பெரியவரா சிறியவரா என்பதல்ல போராட்டம்
பேரழிவைத் தந்துநிற்கும் பெருநோயே போராட்டம்
அதையழிக்க விஞ்ஞானம் உதவும்நிலை வருவதற்கு
ஆணவத்தை விட்டுவிடல் ஆபத்தை அகற்றிவிடும்    !

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.