கவிதை: தொக்கி நிற்கும் குறியீடுகள்

Sunday, 26 April 2020 14:52 - குறிஞ்சிமைந்தன் - புது தில்லி - கவிதை
Print

வாசிப்போம்


(அ)

ஒரு நூற்றாண்டுக் காலத் தனிமையிலிருந்து
தற்காலத் தனிமை அனுபவத்திற்குள் நுழைவது போல்
உணரும் தருணத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது ஒரு கவிதை.

(ஆ)

எனதான கவித்துவானுபவத்தில் ஏற்றி வைத்தத் தீயை
மீண்டும் என்னுள் எரியவிட்டிருக்கிறது.
எனதுயிரில் கருவுற்றுக்கொண்டிருந்த கனலை
உதைத்தவாறு உசுப்பி விட்டிருக்கிறது.

(இ)

காலம் கையகப்படுத்தப்பட்டக் கடிகாரமாகிறது
பெரியது, சிறியதுமான முள் இரவைப் பகலிரவாக்குகிறது
நொடிகள் சிலைகளாகுகின்றன.
முற்றுப் புள்ளி வைப்பவர் யாரென்றுத் தெரியாமல்
பிறர்தம் பார்வைகள் எங்களிருவர் மீதும் விழுகின்றன.

(ஈ)

ஒரு குறி மூடியேயிருக்கிறது.
ஒரு குறி மூடப்பட்டுக் கொண்டு வருகிறது.

(உ)

நிமிடங்கள் நாட்களாகுகின்றன
நாட்கள் மாதங்களாகுகின்றன
மாதங்கள் வருடங்களாகுகின்றன.

(ஊ)

இடைவெளியில்,
அவரவர் தனிமையில்,
வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம்.
நானும் அவளுமாக
அவளும் நானுமாக.


This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 26 April 2020 14:59