அன்னையர்தினக் கவிதை: அன்னையர் தினம்

Saturday, 09 May 2020 20:20 - பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) - கவிதை
Print

அன்னையர் தினக்கவிதைஎழுத்தாளர்  பத்மா இளங்கோவன்

ஒவ்வொரு வீட்டிலும்
ஒளிர்ந்திடும்
தியாக தீபம்
அம்மா.. அம்மா...

உலகில் உள்ள
உயிர்களையெல்லாம்
தாலாட்டும் தென்றல்
அம்மா.. அம்மா...

இன்பத்திலும் துன்பத்திலும்
அணைத்திருக்கும்
அழியாத உறவு
அம்மா.. அம்மா...

உயிரோடு
இணைந்திருந்து
உய்விக்கும் சக்தி
அம்மா.. அம்மா...

உறவுகளை மறந்த
இயந்திர வாழ்வில்
அம்மாவை நினைத்திடும்
அன்னையர் தினம்...

தாயை மறந்தாலன்றோ
நினைப்பதற்கு..
மறந்திடு;ம் உறவோ..
அம்மா.. நீ...

தனித்திரு தனித்திரு..
என்றே தவித்திருக்கும்
கொரோனா இருப்பில்
இன்று நாம்... ..

தாயின் மகத்துவம்
எண்ணிப் பார்க்க
நல்வழி நடக்க
நல்ல தருணமிது...

மக்கள் மேன்மைக்காய்
தன்சுகம் மறந்தவள்
முதியோர் விடுதியில்
முடங்கிடலாமோ...

வேண்டாம் வேண்டாம்..
உங்கள் நலத்திற்காய்
தாயைத் தனியே
தவிக்க வைக்காதீர்...

பெற்றவள் மனங்குளிர
பேர் சொல்ல வாழ்ந்திடு..
ஊருக்கும் உறவுக்கும்
உதவி வாழ்ந்திடு...

அடுத்தவர் வாழ்ந்திட
இயன்றதைச் செய்திடு..
சந்ததி தழைத்திட
சாதித்துக் காட்டிடு...

நாட்டிற்கும் வீட்டிற்கும்
நல்லவராய் வாழ்ந்திடு..
நன்மைகள் நடந்திட
நாளும் உழைத்திடு...

குழந்தைகள் சிரிப்பிலே
குதூகலம் கொண்டிடு..
முதியோர் வாழ்த்திட
மகிழ்வினைக் கொடுத்திடு...

அன்னையர் தினத்திலே
அழகாக அடியெடுத்து
புதுப்பாதை அமைத்திடு
புதுமைகள் செய்திடு..!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 09 May 2020 20:39