1. மாடிக்கு வந்த குரங்கு

காலை மாலை பூக்கிறதும்
வணத்துப்பூச்சிகள் சிறகசைய
வானவில் எழுதுறதும்
மைனாக்கள் வந்து கவிதை பேசிறதுமாய்
இந்த கொரோனா ஊரடங்கிலும்
உயிர்க்கும் என் மாடித்தோட்டம்
எந்த ஆடுகளுக்கும் எட்டாது என
மகிழ்ந்திருந்தேன்.
.
எதிர்பாரத வேடிக்கைகளால்
எழுதப்படுவதல்லவா வாழ்வு.
காலையில் எங்கிருந்தோ குதித்ததே
ஒரு குரங்குக் குட்டி.
நம்ம மாடிக்கு குரங்கு வராது என்கிற
இந்த மிதப்பில் இருந்தல்லவா
காவியக் கதைகள் ஆரம்பமாகிறது?
.
குரங்கின் காடுகளைவிடவும் அழகிய
மாடித்தோட்டமும் உண்டோ?
இந்த மலரும் குரங்கும்
நான் கொண்டு வந்ததல்ல.
குறும்புக் குரங்கை விரட்ட மனசுமில்லை.
பல்லுயிர்களின் கொண்டாடமல்லவா வாழ்தல்.

03.04.2020


2. BEYOND THE CORONA VIRUS கொரோனாவை தாண்டி.

மலர்கிறது முல்லை
கமகமவென சுவர்க்கமாய் உயர்கிறதே
என் மாடித்தோட்டம்.
கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின்
மரண அமைதி அதிர
கருவண்டுகள் இசைக்கிறது
”அஞ்சாதே தோழா” என்னும் பாடல்.
*
அமேசன் காட்டுத் தீயையும் மிஞ்சி
உலகை வேட்டையாடுதே கொரோனா .
அடாது கொட்டும் வெண்பனியையும்
விழாவாய் கொண்டாடும்
ஒஸ்லோ நகரும் முடங்கியதே.
கூதிரில் தனித்த என் மனைவிக்கு
பூக்களும் இல்லை.
எனினும் எனினும்
இடுக்கண் வருங்கால் நகைக்கும்
புதல்வர்களை விட்டு வந்தேனே..
.*
வெற்றியெனக் கோரோனோ கிருமிகள் துள்ளும்
பெசன்ற்நகர் கடற்கரையில்
கைவிடப்பட்ட படகுகளில் அஞ்சாமல்
நண்டுகள் தொற்றும் இரவில்.
குடிசைகளுள்
படகெனத் துயிலும் பெண்டிர் மார்பில்
வலிய விரல்கள் ஊர்கின்றன.
*
சாத்தானே அப்பாலே போ.
மனிதர்கள் கைவிடப்படுவதில்லை.
ஒருபோதும் வெல்லப் படுவதுமில்லை.

கூதிர் - WINTER
24.03.2020


3. சென்று வருக இர்பான் கான்

- அண்மையில் மறைந்த நடிகர்  இர்பான் கான் நினைவாக -

நீரற்ற ’தார்’ பாலை வனத்தில்
போராடும் செவ்வெருக்கு பூக்க
கள் விருந்தில்
மகரந்த மொய் எழுதி
தேன் சிட்டுகள் பாடும்
ராஜஸ்தானின் மாகலைஞா.
*
தோல்வி புழுக்கூடாக
வானவில்லாய்ப் சிறகசைத்தாய்.
போதியாய் நோய் வளர
இந்தப் பிரபஞ்சம் நீ அளந்தாய்.
*

”உலகமோர்
பொது மருத்துவ மனை,
நகரத்து மைதானம்
இது யாருக்கும் சொந்தமில்லை
என்கிறாயே
கொரோனா ஊரடங்கில் நொந்த
எல்லோரும் தலை அசைத்தோம்..
*
இர்பான் கான்
”கல் குழிய ஓடுகிற பேராற்றில்
கடல்சேரும் தக்கைபோல் பிசகாது
ஆருயிர் தன் வீடடையும்”
என்கிறான் பூங்குன்றன்.
நீயும்
வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவே
மறுபாதை இல்லை.
போகவிடு” என்கின்றாய்.
.
போய்வா இர்பான் கான்

30.04.2020