* தந்தையர்தினக் கவிதை!

கவிதை: தந்தை சொல்

கவிஞர்களை அப்பாக்களாகப் பெற்றிருக்கும் பிள்ளைகளே _

உடனடியாக உங்கள் தந்தையால் நீங்கள் கேட்டும் பணத்தைத் தரமுடியாமலிருக்கலாம்....

உங்கள் வகுப்புத்தோழர்களின் சொந்த வீடு கார் பங்களா போல்
உங்களுக்கும் வாங்கித்தர பெருவிருப்பமிருந்தாலும்
உங்கள் தந்தையால் அதைச் செய்யமுடியாதிருக்கலாம்....

ஆனால், உங்கள் தந்தை காற்றைப்போல!

மொழியெனும் மூன்றாங்கரத்தால் ஊருக்கெல்லாம் அள்ளித்தருபவர் உங்கள் தந்தை.

மொழியெனும் ஞானக்கண் கொண்ட அவர் உலகின் எந்தவோரத்தில்
யார் துயருற்றுத் தவித்துக் கிடந்தாலும்
அந்த வலிவேதனைகளையெல்லாம் அதேவிதமாய் அனுபவித்துத்
தன் கவிதைவழியே பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல்
நிவாரண மளித்துக்கொண்டேயிருப்பவர்.

இன்று இருபது அல்லது இருநூறுபேரால் மட்டுமே வாசிக்கப்படும் உங்கள் தந்தையின் எழுத்துகள்
இனிவருங்காலத்தில் இவ்வுலகின் வேறொரு மூலையில் வாழ்க்கையைக் கற்பிக்கக்கூடும்.

இன்று வெறும் புத்தகக்கட்டோடு வரும் அவரை கேலியாய் கோபமாய் பார்க்காதீர்கள்.

மலையைக் கூனிக்குறுக வைப்பது மாபாவம்.

இதமாகப் பேசுங்கள் உங்கள் தந்தையிடம்.

’பணம் கொண்டுவருவது வழக்கமான அப்பாக்கள் செய்வது;
நீங்கள் எனக்கு மொழியின் மகத்துவத்தை,
வாழ்வின் மகத்துவத்தை உங்கள் எழுத்தின் வழி
விதவிதமாக எடுத்துக்காட்டுகிறீர்களே
இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்’
என்று மனமார உங்கள் தந்தையிடம் கூறுங்கள்.

நாளை யொருவேளை உங்கள் தந்தையின் எழுத்து உங்களுக்கு அட்சயபாத்திரமாகும்போது
குற்றவுணர்வு கொள்ளாமல் கண்களில் நீர் நிரம்பாமல் நீங்கள் உறுபசியாறவேண்டுமல்லவா?

அட, ஒருவேளை சோறு தரவில்லையானாலும் சிட்டுக்குருவியை நம்மால் வெறுக்கமுடியுமா என்ன?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.