கவிஞர் தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கத்தின் கவிதைகள் இரண்டு!

Saturday, 27 June 2020 23:45 - தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் - கவிதை
Print

- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

1-செப்பும்; பூமி சிறந்ததுவே

(அறுசீர் விருத்தம்-4 விளம் சக 2 தேமா சக ஒருகாய்)

நீதியின் பாலொரு நித்தியத் துள்வரும்
நேர்மைத் தேர்தல் ஈதுஎன்றார்
ஆதியில் இருந்துமே ஆகிடும்; கலவரம்
அற்றம் ஆக்கும் சரித்திரமே
சாதியாய் வெந்;திடும் சருகென வானதோர்
சாக்கும் போக்கும் சாற்றிவிடப்
பாதியாய் ஆனது பதைக்கவெ ரிந்தது
பற்றும் வாழ்க்கை போனதுவே!

எத்தனை கலவரம் எத்தனை புகலிடம்
இன்னும் இன்னும் இருப்பழிந்தார்
கொத்தெனச் சிதறிய குருதியிற் செத்தவோர்
கூட்டம் என்கக் கொடுமைகண்டார்
புத்தனின் போதனை பொங்கிடும் நாட்டிலே
போயும் போயும் தீயிடவோ
கத்தவும் குளறவும் கண்டிடும் ஆட்சியாய்
காணும் கொற்றம் மாற்றிடுவீர்!

நாளைய நீர்நிலம் நாடெலாம் பூமியில்
நத்தும் பேயும் நலிந்தாடும்
வாளையும் சூளையும் வஞ்;சனை யோடுரு
வந்தால் எல்லாம் போகுமடா
பாளையும் தாழையும் பங்கிடும் தோரணம்
பட்டும் தொட்டும் அழைந்தாடத்
தாளிடும் ஆட்சியில் தூளியாய் நின்றிடில்
தாங்கும் போற்றும் தரணியம்மா !

சந்ததம் மருவிய சான்றொடுங் கீழடிச்
சங்கம் எங்கும் சார்ந்தகுடில்
வந்தனை செய்கவும் வான்தமிழ் வையகம்
வாரும் வேரும் வளர்ந்தபடி
முந்தையர் தந்தையும் மேவிய சொந்தமும்
முத்துக் கோர்த்து முகிழ்த்தபரல்
சிந்துயர் சந்தமும் சேரிசை வாணரும்
செப்பும் பூமி சிறந்ததுவே !


- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

2-உன்றனைக் கண்டேன் தமிழே

(வெண்டளை அறுசீர்-ஒருவரியில்; பதினாறு எழுத்து)

தண்ணார் தமிழே மண்ணின்
தங்க மகளே அழைத்தேன்
விண்ணுக் கிருக்கும் விழியே
வேரே இழுக்;கும் துளியே
கண்ணுக் கிருக்கும் மணியும்
கடவுள் தொகுத்த மொழியும்
எண்ணும் மகுடமென் பேனே
ஏரில் வருவாய் எழிலே !

கம்பன் கொடுத்;த கவியே
காவில் விரிந்த கலையே
இம்மண் துறவி இளங்கோ
எட்டய பாரதி இன்னும்;
கும்பிடும் வள்ளலார் கோவில்
குமரர் கழற்குத் தேனே
அம்புவி யாகினை அம்ம
அழகே மாநதி யாளே!

போரிற் பனித்துளி யாகிப்
பெயர்ந்தேன் நிலத்துட் பேதை
காரிற் கறுத்த மழையாய்க்
கற்று மடிசுமந் தேனே
நாரி யழகே நயனம்
நர்த்தம் பரதமும் நாடிப்
பாரில் வலம்வரு கின்றேன்
பளிங்;குச் சிலையே பகர்வாய்!

ஆயிர மாயிரம் பாட்டில்
அம்மநின்; பேரிகை ஆகிப்
பாயிரம் வேட்கைப் பயிரில்
பற்றிடச் செய்தேன் படையல்
நோயினும் மாறி நொடிந்தும்
நின்தமிழ்; கூறி நிமிர்ந்தேன்
தாயுனைத் தாங்கிய நாட்கள்
தந்தனை செந்தமிழ் மாதே!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 30 June 2020 16:12