கவிதை: அத்தனையும் வாழ்வினுக்கு அர்த்தமாய் ஆக்கினரே !

Wednesday, 22 July 2020 21:26 - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா - கவிதை
Print

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர் களே
கூடிப்பனங் கட்டி   கூழும் குடிக்கலாம்
கொழுக் கட்டை தின்னலாம் தோழர்களே
எனக்களிப்போடு கூடி நின்று மகிழ்ந்தோமே
கொழுக் கட்டை அவிப்பாரும் இல்லை
கூழ்தன்னை நினைப் பாரும் இல்லை
அக்கால மிப்போ அடிமனதில் எழுகிறதே  !

படித்தோம் படித்தோம் பட்டமும் பெற்றோம்
நாகரிக மெம்மை நன்றாகக் கெளவியது
நம்முடைய நற்பழக்கம் நாடோடி யாகியது
அன்னியரின் வாழ்க்கை யெமை அபகரிக்கலாயிற்று
வருடமெலாம் வளமாக்க வந்தமைந்த வெல்லாம்
வரலாற்றில் மட்டுமே பதிவாக வாயிருக்கு
அடிவேரும் இப்போது  வலிவிழக்க லாயிற்று
நினைவழியா நாட்கள்தான் நிற்கிறதே யிப்போது  !

அக்கால நினைவெல்லாம் ஆனந்த மல்லவா
வசதியில்லா நிலையினிலும் வாழ்ந்தோமே யின்பமாய்
முற்றத்துத் தென்னை பின்வளவு பலாமரமும்
நினைத்தாலே இப்போதும் நெஞ்சமெலாம் கனக்கிறது
ஓடியோடி உழைக்கின்றோம் ஊரூராய்ச் செல்கின்றோம்
தேடிவைத்த பலவற்றை தெரியாமல் தொலைத்துவிட்டோம்
ஆடிவரும் பின்னாலே ஆவணியும் அடுத்துவரும்
மாறிமாறி வந்தாலும் மனமெங்கோ தேடுதிப்போ !

முன்னோர்கள் சொன்னதெல்லாம் முக்கியமே அல்லவென்று
மொழிகின்ற பலரிப்போ முளைவிட்டு வந்திருக்கார்
தொற்றுநோய்கள் வரும்வேளை சொல்லுகின்ற அத்தனையும்
முன்னோரின் வாழ்கையிலே முகிழ்தமையைக் காணுகிறோம்
வருடத்தில் பலமாதம் வந்துவந்து போனாலும்
அவையெல்லாம் அர்த்தப்பட அமைத்தார்கள் முன்னோர்கள்
பொங்கலென்றார் கூழென்றார் கொழுக்கட்டை அவியென்றார்
அத்தனையும் வாழ்வினுக்கு அர்த்தமாய் ஆக்கினரே !

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 22 July 2020 21:29