கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மாவின் கவிதைகள் மூன்று!

Tuesday, 29 September 2020 10:38 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் ..... அவுஸ்திரேலியா கவிதை
Print

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

1. வாழ்த்தும் மனமே வாழும்   !

இறைத்த கிணறு ஊறும்  
இறையாக் கிணறு  நாறும்
செமித்த உணவு சிறக்கும்
செமியா உணவு நொதிக்கும்
நடக்கும் கால்கள் வலுக்கும்
நடவா கால்கள் முடக்கும்
படிக்கும் காலம் சிறக்கும்
படியாக் காலம் இழக்கும்     ! உழைக்கும் கரங்கள் வலுக்கும்
உழையா கரங்கள் படுக்கும்
கொடுக்கும் குணமே சிறக்கும்
கொடுக்கா குணமே குறுக்கும்
அணைக்கும் மனமே நிலைக்கும்
அணையா மனமே வீழும்
இணைக்கும் நட்பே பெருக்கும்
இணையா நட்பே  பிரிக்கும்    !

வணங்கும் பண்பு வரமே
வணங்கா பண்பு இழிவே
இணங்கும் பண்பும் உயர்வே
இணங்கா பண்பு அழிவே
தாழ்த்தும் தலையே நிமிரும்
தாழாத் தலையே குனியும்
வாழ்த்தும் மனமே வாழும்
வாழா மனமே வீழும்   !


2. அன்னைத்  தமிழ்  அகமகிழும்  !

நன்றி  எனும்  வார்த்தையினை
நாம்  சொல்லத்  தயங்குகிறோம்
" தாங்ஸ் " அங்கே வந்துநின்று
தான்  நிமிர்ந்து  நிற்கிறது
மன்னிக்க  என்று  சொல்ல
மனம்  எமக்கு  வருகுதில்லை
" வெரிசாறி " என்று  சொல்லி
வேற்று  மொழி  உதிர்க்கின்றோம்  !

வந்து    நிற்கும்  விருந்தினரை
" விசிட்டர் " என அழைத்திடுவோம்
காலை  நேர  உணவதனை
" பிரேக்பாஸ்டாய் " ஆக்கி  நிற்போம்
மாலை  நேரம் உண்ணுவதை
" டிபன் " என்று மாற்றிவிட்டு
மனமகிழ்வை " ஹப்பி "  என்று
வாயாரச் சொல்லி  நிற்போம்    !

அம்மாவின்  தங்கை  வீட்டில்
" அன்ரியாய் "  ஆகி  நிற்பார்
அப்பாவின்  தம்பி  அங்கே
" அங்கிளாய் "  பெயர் பெறுவார்
பெரியப்பா  பெரிய  அம்மா
எனும் அருமை வார்த்தையெலாம்
" அங்கிளெனும் " பெயர்  பெற்று
அன்னைத் தமிழ் ஒழிந்துகொள்ளும்  !

பிறந்த    நாள்    விழாதன்னில்
பெருங்  குரலால்  யாவருமே
" ஹப்பிபர்த்டே "  எனப்  பாடி
கைதட்டி  மகிழ்ந்து  நிற்போம்
தமிழ்  மொழியில்  வாழ்த்திருக்க
அதைத் தவிர்த்து விட்டுவிட்டு
அன்னியத்தை பாடி நிற்றல்
அருவருக்கும் செயல் அன்றோ  !

தொலைக் காட்சி  நிகழ்ச்சிகளில்
தொகுத்து நிற்க வருபவர்கள்
" ஸோவென்பார் "  " சொரி "  என்பார்
சுவையதனை " சுவீற் "  என்பார்
மூச்சுக்கு ஒரு  தடவை
பேசி நிற்பார்  ஆங்கிலத்தை
முன் வந்து  நிற்பதோ
முக்கியமாய்  தமிழ் நிகழ்வே  !

தமிழ் அவையில் பேசவரும்
பேச்சாளர் பல பேரும்
சரளமாய் " சிம்பிள் " என்பார்
" சக்சஸ்தான் "  வாழ்க்கை என்பார்
அமுதான தமிழ் பேச
வந்து நிற்கும் அவர்களுமே
ஆங்கிலத்தை அணைத்து நிற்றல்
அசிங்கமாய் இருக்கும் அன்றோ !

நம் தமிழை வளர்ப்பதற்கு
நாம் அன்றோ முயலவேண்டும்
நம் தமிழின் வரலாறு
நமக்கென்றும் பெருமை அன்றோ
நம் மொழியை புறந்தள்ள
நாம் வலிந்து நின்றுவிடின்
நாம் தமிழர் என்றுசொல
நம் மனது ஏற்றிடுமா  !

நல்ல  தமிழ்  பேசுதற்கு
நாம் மனதில் நினைத்திடுவோம்
சொல்ல வல்ல சொற்கள்பல
நிறைந்திருக்கு நம் மொழியில்
அன்னியத்தை நம் பேச்சில்
அணைப்பதனை விட்டு விட்டு
அழகு தமிழ் பேசிநின்றால்
அன்னைத் தமிழ் அகமகிழும் !


3. ஆனந்தம் அங்கே மலரும்  !

கோபக் கனலை தணித்தால்
பாவம் அனைத்தும் ஒடுங்கும்
சாந்தம் பெருக்கி நின்றால்
சந்தோசம் நிலைத்து நிற்கும்

ஆசை அலைகள் எழுந்தால்
ஆணவம் அமர நினைக்கும்
நாளும் இறையை துதித்தால்
கோளும் வினையும் அகலும்

வாழும் நாளில் வழங்கு
வறுமை கண்டால் இரங்கு
நாறும் சேறை அகற்று
நரகம் சொர்க்கம் ஆகும்

பணிவோ நம்மை உயர்த்து
பழியோ நம்மைத் துரத்தும்
கனிவோ நம்மைக் காக்கும்
கசப்போ நம்மை அழிக்கும்

கொடுக்கும் கரங்கள் உயரும்
கெடுக்கும் கரங்கள் தாழும்
உழைக்கும் கரங்கள் வாழும்
உழைக்கா கரங்கள் வீழும்

உயர்வை தொட்டு விட்டால்
உளத்தை வெளிச்சம் ஆக்கு
அயர்வை வாழ்வில் அகற்று
ஆனந்தம் அங்கே மலரும்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Tuesday, 29 September 2020 10:40