திருமதி பராசக்தி சுந்தரலிங்கத்தைப் 'பதிவுகள்' வாசகர்கள் அறிவார்கள். அவர் தற்போது உடல்நலம் குன்றி மருத்துவநிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவரது உடல்நிலை பற்றிய தகவல்களை http://twitter.com/ParaSundha  என்னும் இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம். அவர் விரைவாக உடல் நலம் தேறிட பதிவுகளும், பதிவுகளின் வாசகர்களும் வேண்டிக்கொள்கின்றார்கள். இச்சமயத்தில் அவர் பதிவுகளில் எழுதிய கட்டுரையினை மீள்பிரசுரிப்பதும் பொருத்தமானதே. - பதிவுகள்[ஆஸ்திரேலியாவில் வசிக்கும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கத்தைப் 'பதிவுகள்' வாசகர்கள் அறிவார்கள். அவர் தற்போது உடல்நலம் குன்றி மருத்துவநிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவரது உடல்நிலை பற்றிய தகவல்களை http://twitter.com/ParaSundha  என்னும் இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம். அவர் விரைவாக உடல் நலம் தேறிட பதிவுகளும், பதிவுகளின் வாசகர்களும் வேண்டிக் கொள்கின்றார்கள். இச்சமயத்தில் அவர் பதிவுகளில் எழுதிய கட்டுரையினை மீள்பிரசுரிப்பதும் பொருத்தமானதே. - பதிவுகள்]  வரலாற்றாசிரியர் ஒருவர் ஒரு நாட்டின் தற்கால வரலாற்றை எழுதுவதற்கும் அதன் புராதனகால வரலாற்றை எழுதுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. அச்சுயந்திரம், தொழில் நுட்பப் பயன் பாட்டினால் வரலாறு, மற்றும் செய்திகள், இன்று முறையாக ஆவணப் படுத்தப்படுகின்றன. ஆனால், ஏட்டுச் சுவடிகளையும் புராணக் கதைகளையும் செவிவழிச் செய்திகளையும் ஓரளவு கிடைத்த சாசனங்களையுமே ஆராய்ந்து பூர்வீக வரலாற்றை எழுதியவர்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.

இன்றைய நவீன உலகில் அகழ்வாராய்ச்சி, சாசனவியல், ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக, புராதன வரலாறு பற்றிய புதிய கண்டுபிடிப்புகள் விஞ்ஞான நோக்கில் ஆராயப்படுகின்றன. ஏற்கனவே எழுதப்பட்ட சரித்திரத்திற்கு ஆதரவாக அல்லது முரணாக பல செய்திகள் புதியனவாக வருகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் பிற் கூறில் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் நடைபெற்ற (இன்றும் தொடரும்) அகழ்வாராய்ச்சியின் பயனாகவும், சாசனவியல் பற்றிய புதிய அணுகுமுறையினாலும், வரலாறு பற்றிய பார்வையும் மாற்றமடைந்து வருகிறது. இந்த வகையில், பேராசிரியர் இந்திரபாலா, கி.மு. 300ம் ஆண்டு முதல் கி.பி. 1200 வரையிலான, இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றை, புதிய பல வரலாற்றுச் சான்றுகளுடன், 'இலங்கையில் தமிழர்-ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, பொது ஆண்டிற்கு முன்(கி.மு) 300 முதல் பொது ஆண்டு (கி.பி) 1200 வரை'என்னும், தமது புதிய நூலிலே ஆராய்கிறார்.

1965ம் ஆண்டிலே, இவ்வாசிரியர் இலங்கைத் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றை ஆராய்ந்து எழுதிய பின்னர், கடந்த நாற்பது ஆண்டுகால ஆராய்ச்சியின் பயனாகக் கிடைத்த பல புதிய தரவுகளை வைத்து, தனது முந்திய முடிவுகள் பலவற்றை மீளாய்வு செய்கிறார். புராதன காலம் முதல் கி;.பி. 1200 வரை இலங்கையில் தமிழ் மக்கள் எப்படி ஒரு தனி இனமாக வளர்ச்சியடைந்தனர் என்பதை விளக்கும் ஆசிரியர், அக்காலப் பகுதியில், தமிழ் சிங்கள மக்களின் வரலாறு ஒன்றோடொன்று பிரிக்கமுடியாதபடி இணைந்து காணப்படுவதால், சிங்கள மக்களும் எப்படி ஒரு தனி இனமாக வளர்ச்சியடைந்தனர் என்பதையும் விளக்குவது தவிர்க்கமுடியாததாகிறது.

இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழ் மக்களா அல்லது சிங்கள மக்களா என்ற கேள்வி எழுந்துள்ள நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் வந்துள்ள இவ்வாராய்ச்சி நூல் பல சரித்திர உண்மைகளை விளக்குவதன் மூலம் தமிழ் சிங்கள மக்களின் வரலாற்றை விளங்கிக்கொள்ள ஆதாரமாகிறது.

இங்கு கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் ஒருசில கவிதை வரிகள் பொருந்தி வருவதைக் காணலாம்:
......
அனைத்தையும் மனதிருந்து அழித்து
எழுதுவோம் புதிய கவிதை

அம்மா!
பார்க்க மறுக்கிறாய்
நான் நிற்கவா? போகவா?
போவெனச் சொல்லில்
என் முதுசக்காணியின்
பிள்ளைப்பங்கைத் தா
போய் விடுகிறேன்.

பதிவுகள் யூலை 2007 இதழ் 91