['பதிவுகளில் அன்று' பகுதியில் 'பதிவுகள்' இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]

சுப்ரபாரதிமணியனின் நாடக நூல் மணல் வீடு:  புகழ்பெற்ற எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் முப்பத்தியைந்து நூல்களில்  ஒரு நாடக நூல்  “ மணல் வீடு “  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்று எல்லாத்தளங்களிலும் தடம் பதித்திருக்கிறார். மணல் வீடு என்ற தலைப்பில்  ஜே.கிருஸ்ணமூர்த்தியின் தமிழ் நூல் ஒன்று ஞாபகம் வருகிறது. தமிழில் நாடக நூல்கள் வெகு குறைவு. எழுத்தாளர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. தி. ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, பி.எஸ். ராமையா, ஜெயந்தன், பிரபஞ்சன், இன்குலாப் போன்ற எழுத்தாளர்கள் சில நாடகங்களை எழுதியிருக்கிறார்கள். மற்றபடி நவீன நாடகங்களை நாடகக்காரர்களே படைத்துக் கொள்கிறார்கள். நவீன நாடகங்கள் உருவான பிறகு எழுத்தாளர்கள் நாடகத்துறையை திரும்பிப் பார்ப்பதில்லை. அவைகளும் மக்களை நெருங்கவில்லை. கோமல் சுவாமிநாதனின் சட்டக வடிவ நாடகங்கள் மக்களின் போராட்டங்களை சித்தரித்தன. அதனால் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றன. கோமலுக்குப்பின் சில நல்ல நாடகங்களை தஞ்சை ராமசாமி உருவாக்கி வெற்றி பெற்றார். அமைப்புகள் பின்னணி இல்லாததால் மக்களை அதிகம் சென்றடையவில்லை.

நாடகங்கள்தான் இடதுசாரி கட்சிகள் கேரளத்தில் ஆட்சிக்கு வர முக்கிய பங்காற்றின. தமிழகத்தில் சுதந்திர போராட்ட காலத்தில் நாடகங்கள் மக்களிடையே சுதந்திர உணர்வையூட்டின. அதன்பின் திராவிட இயக்கங்கள் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் பெற்ற பலன் நாடறியும்.
 
பிரிட்டீஷ் அரசாங்கம் நாடகங்களுக்கு விதித்த சட்டத்தை இன்றைக்கும் நமது அரசுகள் கவனமாய் பாதுகாக்கின்றன.
 
'மணல் வீடு' தொகுப்பில் மூன்று நாடகங்கள் உள்ளன.
 
முதல் நாடகத்தில் (மணல் வீடு) மூன்று தலைமுறைகள் இடம் பெறுகின்றன. முதலிரண்டு தலைமுறைகள் முந்தைய தலைமுறைகள் குறித்து பற்றும், மதிப்பும் மூதாதையருக்கான சடங்கு முறைகளில் ஈடுபாடும் கொண்டுள்ளன.
 
இன்றைய தலைமுறையின் பொறுப்பு, அல்லது பொறுப்பற்ற தன்மை குறித்து கவலையும் விரக்தியும் அடைகின்றனர். ஆயினும் அவரவர் வாழ்க்கையை அலுப்பும் சலிப்புமாய் சுமப்பதைவிட அனுபவித்து தீர்ப்பதே நன்றென உணர்கின்றனர். வாசிப்புக்கான நாடகம் இது.
 
'பசுமை எனும் தாய்மை' எனும் நாடகம் பிரச்சாரத்தன்மை வாய்ந்த நடிப்பதற்கான நாடகம். சுற்றுச்சூழல் குறித்த நாடகம். திருப்பூர் பனியன் தொழிலின் காரணமாய், அதன் சாயக்கழிவுகளால் மாசுபட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற 'காஞ்சி மாநதி'யெனும் நொய்யல் நதிக்கரை வாழும் ஒரு கிராம மக்களின் எழுச்சியை விவரிக்கிறது. மக்கள் இயக்கம் என்றும் முதன்மையான என்பதை பிரச்சாரத் தொனியில்தான் சொல்ல முடியும்.
 
'முளைப்பாரி' எனும் மூன்றாவது நாடகம் மத நல்லிணக்கம் பற்றி பேசுகிறது. இந்துக்களும் இசுலாமியரும் காலம் காலமாய் அனுசரித்துத்தான் வாழ்ந்து வருகிறார். ஒற்றுமை திட்டமிட்டு குலைக்கப்படுகிறது. ஆனாலும் அந்த கிராம மக்கள் தங்களுக்குள் இருக்கும் அர்த்தமற்ற பயத்தை உதறிவிட்டு திருவிழாவில் ஒன்றுபடுகிறார்கள். திருவிழாவின் போது வீசப்பட்ட கல் யாரால் வீசப்பட்டது என்பது சூசகமாக விவரிக்கப்படுகிறது. அந்த தீய சக்திகள் யார் என்பதை நாடகமாக நடிக்கப்பட்டால் மக்களும் புரிந்து கொள்வார்கள். இதுவும் ஒரு நவீன அம்சம்தான்.

(மணல் வீடு , சுப்ரபாரதிமணியன் நாடகங்கள், புதுயுகம்  வெளியீடு )

- பதிவுகள் நவம்பர் 2008; இதழ் 107