பதிவுகளில் அன்று: ஜெயமோகனின் நாவல்கள்!

Friday, 13 September 2019 01:08 - டிசெ தமிழன் - 'பதிவுகளில்' அன்று
Print

- டிசெ தமிழன் -- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர்  -


பதிவுகள் ஜனவரி 2005 இதழ் 61 -

ஜெயமோகனின் நாவல்களில், 'ஏழாம் உலகம்' தவிர்த்து அனைத்தையும் வாசித்திருக்கிறேன். விஷ்ணுபுரத்தில் ஆரம்பித்து, கொழும்பில் நின்றபோது தமிழ்ச்சங்கத்தில் பின் தொடரும் நிழலின் குரல், ரப்பர், கன்னியாகுமாரி எல்லாம் எடுத்து வாசித்து, இப்போது காட்டில் வந்து நிற்கிறேன். ரப்பர் 90களில் எழுதப்பட்ட ஜெயமோனின் முதலாவது நாவல். நாவல் என்பதை விட நாவலிற்கான ஒரு முயற்சி என்றே என் வாசிப்பில் அடையாளப்படுத்துகிறேன். அங்கே சாதிப்பெயர்களால் உருவகிப்பட்ட பாத்திரங்கள் இப்போதும் காட்டிலும் அவ்வாறே அடையாளப் படுத்தப்படுவதால், தசாப்தம் தாண்டியும் ஜெயமோகன் எங்கே நிற்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஜெயமோகனின் நாவல்களை இலகுவாய் ஒருவிதமான வகைக்குள் அடக்கிவிடலாம். எப்போதும் அவரின் நாவல்கள் ஊடாடிக்கொண்டிருப்பது பெருங்கனவும் அதன் தவிர்க்கமுடியாத வீழ்ச்சியும். எல்லா நாவல்களும் ஒருவிதமான சோகத்துடனும் இயலாமையுடனும் முடிகின்றன.

ரப்பரில் எந்தப்பாத்திரமும் மனதில் நிற்கமுடியாமல் வாசித்தவுடன் மறைந்துவிடுகின்றனர். நாவல் முழுவதும் கனக்க கதாபாத்திரங்கள். ஒரு விதமான தொடர்பை/நீட்சியை ரப்பரிலும் காட்டிலும் வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். ஆனால், தனது நாவல் என்ற கட்டுரைத்தொகுப்பில் 90களிலே நாவல்கள் தமிழில் முகிழத்தொடங்குகின்றன என்று குறிப்பிடுகையில் அவர் எதைக்குறிவைத்து சொல்கிறார் என்று சொல்லத்தேவையில்லை.

விஷ்ணுபுரம் அவரின் அடுத்த நாவல் என்று நினைக்கிறேன். உண்மையில் சொல்லவேண்டும் என்றால், நான் முதல் பாகமும் இறுதிப்பாகமும் மட்டுமே வாசித்திருக்கிறேன். தத்துவப்பகுதியில் என்னால் நுழையவே முடியவில்லை. விஷ்ணுபுரம் ஒரு இந்துத்துவ பிரதியை 'நடுநிலைமை' என்று வாசிப்பவர்கள் எண்ணும்படி கவனமாகப்பின்னப்பட்டிருக்கிறது. அரவிந்தன்(காலச்சுவடு ஆசிரியர்) அண்மையில் காட்டிற்கும் ஏழாம் உலகத்திற்கும் விமர்சகம் எழுதுகையில் விஷ்ணுபுரம் மட்டுமே ஜெயமோகனின் சிறந்தபிரதி என்கின்றபோது பிரதியின்நிலை என்னவென்று கூறத்தேவையில்லை. ஒருகாலத்தில் ஜெயமோகனின் நெருங்கிய நண்பனாகவும், RSSன் தீவிர அங்கத்துவராயும் அரவிந்தன் இருந்திருக்கிறார் என்பதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

பின் தொடரும் நிழலின் குரலின் முதல் அத்தியாயத்தை வாசிக்கும்போதே ஜெயமோகன் என்ன சொல்லவருகின்றார் என்று புரிந்துபோகிறது. அதற்காய் இவ்வளவு பக்கங்களைக் கொண்டு நிரப்பியிருக்கவோ, அல்லது மூன்றுவருடமாக ஆராய்ச்சி செய்தோ எழுதியிருக்கவேண்டியதில்லை. செய்திருக்கவேண்டியது. ஆக்ககுறைந்து பத்துப்பக்கத்தில் (பத்து பக்கம் என்பது ஜெயமோகனின் எந்தக்கட்டுரையையும் 10 பக்கங்களுக்குள் நான் வாசித்திருக்காததால்) 'ஸ்டானின் கொடுங்கோலாட்சி' என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தால் போதுமாயிருந்திருக்கும். இப்போது கூட, இடதுசாரிகள் (கட்சி இடங்கொடுக்காத போதும்) ஒளித்து வாசிக்கிறார்கள் என்று ஜெயமோகன் புளங்காகிதம் அடைகிறார். உண்மையில் இப்படி ஸ்டானினின் பாசிசம் தெரியாதவர்கள் இடதுசாரியாயிருக்காமல் இருந்தாலே கம்யூனிசத்திற்கு செய்யும் நன்றிக்கடனாயிருக்கும் என நினைக்கிறேன்.

நான் வாசித்த ஜெயமோகனின் நாவல்களில்,  மிக மோசமான நாவல் என்றால் கன்னியாகுமரியைத் தான் சொல்வேன். உற்றுப்பார்த்தால், எஸ்.பொவின் 'தீ'யை தத்துவம், தேடல் என்று கொஞ்சம் கலந்து கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். எஸ்.பொவாது தனது 25 வயதில் முதல் நாவலாய் எழுதியிருந்தார், ஆனால் ரப்பர், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் என்று எழுதியவர் ஏன் இப்படி எழுதினால் என்று புரியவில்லை. இல்லாவிட்டால், தமிழ் சினிமா இயக்குநனர்கள் சொல்வதுபோல, இந்தக்காலத்தில் மசாலா கலந்து கொடுத்தால், சூப்பர் ஹிட் கிடைக்கும் என்ற மாதிரி, ஜெயமோகனும் ஒரு சூப்பர் ஹிட் இலக்கிய உலகத்தில் அவசரமாய் கொடுக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இதை எழுதியிருக்கலாம்.

காடு பற்றி அறிந்துகொண்டபோது இது எனக்குப்பிடித்தமாயிருக்கும் என்று நினைத்துத்தான் வாசிக்கத் தொடங்கினேன். முக்கியமாய் காதலையும் அழகியலையும் இது விரித்துச்சொல்லும் என்று நினைத்தேன். என்ன ஒரு அபத்தம், மலைவாழ் பெண் முலைகள் தெரிய இடுப்பில் துண்டுடன் நீராடும்போது கண்ட கதாபாத்திரமான கிரிக்கு அவள்மேல் அளவற்று காதல் பெருக்கெடுக்கிறது. ஒருபொழுதில் அவள் முலைகளில் எல்லாம் கண்கள் முளைத்து தன்னை உற்றுப்பார்ப்பது போலவும் தெரிகிறது கிரிக்கு. ஒருமுறை மட்டும் முலைகளைப்பார்த்து பெண்ணின் மீது காதல் கொண்டவன், பிறகு வாசிப்பவரைப் பார்த்து, 'இந்தக்கணத்தில் மார்பில் கைவைத்துச் சொல்வேன். காதலிக்காதவர்கள் கடவுளையும் அறிவதில்லை. ஆம் இது உண்மை' என்கிறான். இதை வாசித்தபோது நானும் கணக்கிடத்தொடங்கினேன், ஒருமுறை பார்த்து பெண்களில் ஆசைப்பட்டது என்றால், நானும் எத்தனைவிதமான கடவுள்களை தரிசித்திருக்கின்றேன் என்று. தமிழ் சினிமாக்கள் கெட்டது போங்கள். ஆனால் காட்டின் இறுதி அத்தியாயங்கள் பிடித்திருந்தன. ஒரு பெருங்கனவின் வீழ்ச்சியைச் சொல்வதால் பிடித்திருக்கக்கூடும். மனதிற்குள் புதைந்திருக்கும் சோகங்களை இணைத்துப்பார்ப்பதால் அப்படி அமைந்துமிருக்கலாம். காடு எனக்கும் பிடிக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இந்த நாவலில் வரும் பாத்திரத்திற்கு குறிஞ்சிப்பூவை பார்த்தபின் எப்படி ஒரு உணர்வு வருகிறதோ அப்படியே எனக்கும் வாசித்துமுடித்தபிறகு ஏற்பட்டது.

ஜெயமோகனின் நாவல்களில் காமம் மதம்பிடித்தலையும் யானை போல அலைகிறது. பல பாத்திரங்களின் விபரிப்பை வாசிக்கும்போது ஆண்குறியை வெட்டிவிட்டு வாசித்தால் நமக்கும் நிம்மதி கிடைக்கும்போலத் தோன்றியது. முரண் என்னவென்றால், ஜெயமோகன் தான் நிஜவாழ்வில், ஒழுக்கம் கட்டுப்பாடு (உ+ம்: தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கு, மற்றும் திருவள்ளுவர் பற்றிய தமிழ்நாடு அரசு வெளியிட்ட புத்தகத்தில் ஒழுக்கம் பற்றிய கட்டுரை) என்று பேசிகொண்டிருக்கிறார். ஆனால் அவரின் நாவல்களின் பாத்திரங்கள் எங்கிருந்து  எல்லாம் உயிர்பெறுகின்றன என்பது ஆச்சரியம். ஜெயமோகனின் நிறைவேறாத பெருங்கனவுகள்தான் அந்தப்பாத்திரங்களில் மிதக்கின்றனவோ தெரியாது. ஜெயமோகனின் நாவல்களின் மிகப்பெரும் பலவீனம் என்னவென்றால், அந்தந்தப் பாத்திரங்கள் அவற்றிற்குரிய சட்டத்தை விட்டு வெளியேறி எழுதுபவனாகி விடுவது. காட்டில் பதினெட்டு வயதில் நுழைந்த கிரி சங்க இலக்கியங்களை எல்லாம் கரைத்துக்குடித்திருக்கிறான். பாடல்களையெல்லாம் அப்படியே நெட்டுயுருக்கிறான். இன்னொரு நாவலை ஒப்பிடுவது  சரியில்லை என்றாலும் உதாரணத்திற்கு யூமாவாசுகியின் ரத்த உறவு, கண்மணி குணசேகரனின், கோரை போன்றவற்றைச் சொல்லாம் என்று நினைக்கிறேன். ரத்த உறவில் குடித்து குடித்து சித்திரவதை செய்யும் அப்பா பற்றி எந்தப் பெரிய விமர்சனமுமில்லை. பெரியம்மாவுடனான் அப்பாவின் உறவுகூட போகிறபோக்கில்தான் சொல்லிச்செல்லப்படுகிறது. எனெனில் கதையைச் சொல்பவன் சின்ன வயதுக்காரன். அவன் வளர்ந்தபின் கதையை எழுதுகிறதாய் வைத்துக்கொண்டாலும் அவன் ஒரு காலத்தில் எப்படி இருந்தானோ அது மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. கோரையில் வயலும், கோரையும், பன்றியும் தான் திருப்பத்திருப்ப வருகிறது. ஆனால் முடியும்மட்டும் நாவலை அலுப்பின்றி வாசிக்கமுடிகிறது. எனெனில் இரண்டு நாவல்களிலும் கதாபாத்திரங்கள்தான் பேசுகின்றன. ஜெயமோகனின் நாவல்களிலோ ஒரு கட்டத்திற்குப்பிறகு அவரே நேரடியாகப் பேசத்தொடங்கிவிடுகிறார். கதாபாத்திரம் அநாதரவாய் ஒரிடத்தில் ஒதுங்கிக்கொள்கிறது.

ஜெயமோகன் இன்னும் நிறைய எழுதவேண்டும். அப்போதுதான் வாசிக்கும் நமக்கு எது சிறந்த படைப்பு என்று இலகுவாய் அடையாளங்கொள்ள முடியும். துக்ளக் சோ எழுதும்போதுதான் பெரியாரின் தேவை எவ்வளவு அவசியம் என்று தோன்றுகிறதோ, அப்படித்தான் ஜெயமோகனின் நாவல்களை வாசிக்கும்போதுதான் மாற்று நாவல்களை இலகுவாய் என்னால் அடையாளங்கொள்ளமுடிகிறது. மற்றபடி, தான் ஒரு இந்துத்துவா ஆதரவாளர் இல்லை என்று ஜெயமோகன் கூறினால், இன்றைய பிஜேபி, ஆர் எஸ் எஸ், நரேந்திரமோடி, அத்வானி, சங்கராச்சாரியார் என்று எல்லாம் கலந்து ஒரு நாவலை எழுதட்டும். அவர் இப்போது எங்கே நிற்கிறார் என்று அவரை வாசித்துப்புரிந்து கொள்கிறேன். எங்கையோ இருந்த USSRற்கும் மார்க்சிற்காகவும் மிகவும் கவலைப்பட்டவர் அல்லவா அவர்?

www.djthamilan.blogspot.com
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 13 September 2019 01:11